Sunday, April 26, 2009

இன்லேன்ட் லெட்டரும் ஈ மெயிலும் .....

சமீபத்தில் ஒரு முகமறியா நண்பரின் வலைப்பூவில் மெல்லத் தேய்ந்து ஒழிந்து போன இங்க் பேனா பற்றிய ஒரு வெளியிடல் படித்தேன். அதைப்படித்ததும் எனக்கு இன்லேன்ட் லெட்டர் பற்றிய ஞாபகம் வந்தது. எட்டு பத்து வருடங்களுக்கு முன் நான் நிறைய கடிதங்களை நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் எழுதுவேன்.

அன்புள்ள தோழி, மதிப்பிற்குரிய மாமா, என்றெல்லாம் எழுதி அனுப்பி வைப்பதற்கு முன் ஓரிரு முறை பிழை திருத்தி தபால் நிலையம் சென்று வரிசையில் நின்று அஞ்சல் தலைகள் வாங்கி உரையின் மீது ஒட்டி பெட்டிக்குள் போட்டுவிட்டு வீடு திரும்பும்போது ஏதோ நிறைவாய் செய்ததைபோல ஒரு உணர்வு தோன்றும். அப்போதெல்லாம் எனக்கு என் பெயரில் மின்னஞ்சல் முகவரி கிடையாது, இன்னும் சொல்லப்போனால் எனக்கு கணினியைப்பற்றி அதிகம் தெரியாத காலம் அது.

பதில் கடிதம் கிடைக்கும்வரை காத்திருப்பது ஒரு சுகானுபவம். இப்போது ஏதாவதொரு வாடகை கணினியிலோ அல்லது அலுவலக கணினியிலோ மின்னஞ்சல் வந்துள்ளதா என்று சடுதியில் பார்த்து LOGOUT செய்வதைபோல நமக்கான கடிதம் வந்துள்ளதா என்று தேடுவது அத்தனை சுலபமில்லை அந்நாட்களில்.

இப்போது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு வந்த கடிதம் ஒன்று உள்ளறையில் இருக்கும் அல்லது ஸ்பாமில் கிடக்கும். ஆனால் அந்நாட்களில் தினமும் மெயின் கேட்டில் தொங்கும் அஞ்சல் பெட்டியை ஒரு முறை திறந்து பார்க்க வேண்டும். ஒரே வளாகத்தில் பல பேர் குடியிருக்கும் அமைப்பில் குடியிருந்தால் உங்கள் கடிதம் தவறுதலாக வேறொருவர் கையில் போக வாய்ப்புண்டு. மறதியாக கொண்டு வந்து விட்டோமே இப்போது மீண்டும் திருப்பித் தந்தால் என்ன நினைப்பாரோ என்று கொண்டு போனவர் தூக்கி எறிந்துவிடலாம்.

நீங்கள் மட்டுமே இருக்கும் வீடு என்றாலும்கூட தினம் ஒருமுறையேனும் திறந்து பார்க்காமல், வீட்டாரிடமும் விசாரிக்காமல் விட்டுவிட்டால் நிறைய முக்கியமான கடிதங்களை தொலைத்துவிட வாய்ப்புண்டு.

என் வாழ்வில் நேர்ந்த ஒரு சம்பவம் இது. அடிக்கடி கடிதம் எழுதும் தோழியை வேறொரு தோழியின் திருமணத்தில் சந்தித்தேன். அவள் திடீரென அவளது கணவனை எனக்கு அங்கு அறிமுகம் செய்து வைக்கிறாள். நான் மிகுந்த அதிர்ச்சியுடன் "என்ன இது... உன் திருமணத்திற்கு என்னை அழைக்காமல் இந்த திருமணத்தில் உன் கணவரை அறிமுகப்படுத்தி வைக்கிறாய். இது தான் நீ நம் நட்பிற்கு தருகிற மரியாதையா" என்று எக்கச்சக்கமாய் திட்டி தீர்த்துவிட்டேன். போதாக்குறைக்கு அனைவர் முன்னிலையிலும் அங்கிருந்து விருட்டென்று வெளியேறி நண்பர்களிடம் வெறுப்பை சம்பாதித்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

பிறகுதான் தெரிந்தது, என் தோழி எனக்கு தனியாகவும் அவளது தந்தை என் குடும்பத்தார் அனைவருக்கும் அனுப்பிய இரு பத்திரிக்கைகளும் நான் ஊரில் இல்லாதபோது வந்து, என் அம்மா ஞாபகமாக அதை என்னிடம் சொல்லாமல் மறந்துபோனது. அதன்பின் என் அம்மாவை சிறப்பு தூதராக அவள் வீட்டிற்கு அழைத்து சென்று அவளை சமாதானப்படுத்தியது தனிக்கதை.

இப்போதெல்லாம் இது போன்ற தவறுகள் நிகழ வாய்ப்பே இல்லாததால் நட்பில் சிறு ஊடலும் பிறகு கூடலும் ஏற்படுகிற சாத்தியங்கள் குறைந்துவிட்டது. தொட்டு உணர வேண்டிய வாழ்த்து அட்டைகளும், திருமண அழைப்புகளும் மின்னஞ்சல் மூலம் கணினியில் அனுப்பப்படுகிறது. அதை சிறு மாற்றங்களுடன் அப்படியே மற்ற நண்பர்களுக்கு forward செய்து விடுகிறோம். பல வருடங்களுக்கு முன் நண்பர்கள் அனுப்பிய பிறந்த நாள் வாழ்த்து அட்டைகள் மங்கலாகி இன்னும்கூட என்னிடம் உள்ளது. நமக்காக கடைகடையாக ஏறி வாங்கியிருப்பானே என்று எண்ணுகையில் மின்னஞ்சலில் வரும் வாழ்த்துகள் போல அத்தனை சுலபமாய் அதனை ஒழித்துவிட மனம் வரவில்லை.

மீண்டும் ஒரு பழைய நண்பனுக்கு கடிதம் எழுத பேப்பர் பேனா என எல்லாம் வைத்துக்கொண்டு மெனக்கெட்டு முயற்சி செய்தேன். சாட்டிங்கில் வருகிற வேகத்தில் பத்தில் ஒரு பங்குகூட வரவில்லை. கடிதம் எழுதும் கலையை மறந்துவிட்ட யதார்த்தத்தை உணர்ந்தபோது மனம் வலித்தது.

No comments:

Post a Comment

வருகைதந்து வாசித்தமைக்கு நன்றி. தங்களின் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.