Monday, September 28, 2009

வேலூர் ஸ்ரீபுரத்தில் நவராத்திரி தின சிறப்பு நிகழ்ச்சி = ஒரு பகிர்வு

நவராத்திரியை முன்னிட்டு பற்பல சிறப்பு நிகழ்ச்சிகள் வேலூர் ஸ்ரீபுரத்தில் உள்ள பொற்கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தினம் ஒரு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்க, பொற்கோயிலிலும் நாராயணீ பீடத்திலும் ஏராளமான மற்றும் விதவிதமான கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. எனது அம்மா ஆரம்ப நாளிலிருந்தே தன்னை அழைத்து செல்லச்சொல்லி நச்சரிக்க, சரி போனால் போகிறதே என்று அவர்களோடு நானும் எட்டாம் நாளான நேற்று (27/09/09) சென்றிருந்தேன்.
“சிவாஜி” சினிமா பார்க்க போனால் ஸ்ரேயாவே டிக்கெட் கவுண்டரில் நின்று டிக்கெட் கொடுத்தால் எப்படி இருக்கும்... (நல்லாத்தான் இருக்கும்...) அப்படி ஒரு இன்ப அதிர்ச்சியாக Drums சிவமணி, மாண்டலின் ஸ்ரீநிவாஸ் ஆகிய இருவரும் இணைந்து நடத்திய ஜுகல்பந்தி கச்சேரியை காணும் அரிய வாய்ப்பு கிடைத்தது.

அடியேன் சங்கீதத்தை பொறுத்தவரை ஞானசுன்யத்திற்கும் ஒருபடி மேலே என்பதால் அவர்கள் வாசித்தது அம்ரிதவர்ஷினியா புன்னாகவராளியா (பாம்பை வரவழைக்க பாடப்படுவதாக சொல்லப்படும் ராகம்) என்கிற ஆராய்ச்சிக்கெல்லாம் போகாமல் இசையை ரசித்ததில் இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை. கச்சேரியினிடையே இரண்டு முறை பலத்த மழை வந்தது. Drums சிவமணி மற்றும் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் இருவரும் ரசிகர்களை இசையில் நனைக்க, மழை தன் பங்கிற்கு பூமியை நனைத்தது.

“பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரிபூரணானந்தமே” என்பதுபோல Drums மணி நாம் அன்றாடம் பார்க்கும், புழங்கும் பொருட்களையெல்லாம் வைத்துக்கொண்டு நினைத்துப் பார்க்க முடியாத வகையில் வாசித்து பிரமிப்பூட்டினார். உதாரணத்திற்கு தண்ணீர் சப்ளை செய்யப் பயன்படும் water can... பயணத்திற்கு உதவும் suitcase… அடடா... அடடா... தான் கண்ட காட்சியை மொழி தெரியாதவனிடம் கூட எப்பாடு பட்டாவது விளக்கவிடும் ஒருவன் தான் மிகவும் ரசித்து சிலிர்த்த இசையை உலகின் எந்த மொழியின் வார்த்தைகள் கொண்டும் என்ன சொல்லியும் விளக்க முடியாது என்பதை இதை எழுதும் நேரத்தில் உணர்கிறேன்.

துக்க வீடுகளில் சங்கினோடு சேர்த்து வாசிக்கப்படும் வட்ட வடிவ வெண்கல வாத்தியத்தினை (சேகண்டி என்று நினைக்கிறேன்...) தண்ணீர் நிரப்பிய சிறு பாத்திரல் முக்கி முக்கி அவர் வாசித்த விதம் மிக மிக அருமை. வாத்தியத்தில் சப்தமேற்படுத்தி அதை தண்ணீரில் முக்கும்போது ஏற்படும் அதன் ஒலிமாறுபாட்டினை வைத்து வாசித்து, இனி அதை துக்க வீடுகளில் காண்பவர்கள் அன்று சிவமணி தன் கச்சேரியில் வாசித்தாரே என்று கூறுமளவு செய்துவிட்டார். தன் உடலில் துப்பாக்கி குண்டு துளைக்காத கவசம் போல ஒரு இரும்பு அங்கியை மாட்டிக்கொண்டு Drums சிவமணி வாசித்தது, கண்ணிற்கு விருந்து. வாசித்துக்கொண்டே மேடையை விட்டு இறங்கியவர், மேடையின் ஓரத்தில் அமர்ந்து ஒரு தியானம் போல இசையை ரசித்துக்கொண்டிருந்த ஸ்ரீபுரம் அம்மாவின் காலில் விழுந்து வணங்க, அவர் மணியின் தலையில் கைவைத்து ஆசிர்வதித்து தன் கழுத்திலிருந்த ஸ்படிக மணி மாலையை கழற்றி மணிக்கு அணிவித்தார். (மணிக்கே மணி...) அவரிடம் ஆசி வாங்கிக்கொண்டு அப்படியே மேடைக்கு திரும்பும்வரை Drums சிவமணி தன் வாசிப்பை நிறுத்தவில்லை.

உடலில் நாடி, நரம்பு, ரத்தம், சதை, திசுக்கள், எண்ணம், சிந்தனை அனைத்திலும் இசையின் மீது பெருங்காதலும் மிகச்சிறந்த ஆன்மப்பற்றுதலும் கொண்ட ஒரு மனிதனால் மட்டுமே அப்படியொரு இசையினை வாசிக்கமுடியும், மக்களுக்கு வழங்க முடியும். அவரது உடலாற்றலை (stamina) விளக்க ஒரு சின்ன உதாரணம்.. ஒரு கட்டத்தில் வாசித்துகொண்டே உற்சாகத்தோடு கைதட்டிய ரசிகர்களின் கைதட்டலை தாளலயத்துடன் அவரது இசையில் மெள்ள கலந்தார். ஆரம்பத்தில் பேரலையாய் இருந்த கைதட்டலோசை படிப்படியாய் குறைந்து 5 நிமிடங்களிலேயே இருபது முப்பது பேர் கைதட்டுமளவிற்கு குறைந்துவிட்டது. அதன் பிறகும் அவரது வாசிப்பு 50 நிமிடங்களுக்கு மேல் நீண்டது. இப்போது மறுபடி இந்த பாராவின் ஆரம்ப வாக்கியத்தை படியுங்கள்.

Drums மணி தனியாவர்த்தனம் செய்யும்போது கிட்டத்தட்ட 300 பேர் அமர்ந்திருந்த அரங்கம் அவரது இசைக்கு மகுடிக்கு மயங்கிய பாம்பு போல கட்டுப்பட்டு கிடந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. சற்றே அவரது வாசிப்பில் கவனம் செலுத்துவதை விலக்கி அவர் மேடையில் தன்னை சுற்றி வைத்திருந்த வாத்தியக்கருவிகளை நோட்டம் விட்டேன். அவற்றில் பெரும்பாலான கருவிகளின் பெயர் இசையில் மிகுந்த அனுபவம் உள்ளவர்களுக்கே என்பது சந்தேகமே... குத்து மதிப்பாக அவற்றின் மொத்த எடை 300 கிலோவை தாண்டும்?!?!!. ஆனால் அவை அனைத்தையும் ஸ்ருதிலயத்தோடு ஒருங்கிணைத்து அவர் வாசிக்கும்போது இசையில் இதுவரை நம் காதுகள் கேட்டிராத புதிய பரிமாணங்களை உணர முடிந்தது.

தனியாவர்த்தனமே காதுகளை திகட்ட வைத்த விருந்தென்றால் மாண்டலினாரோடு (தமிழுக்கு ஒரு புதிய வார்த்தை புழக்கம்... சேர்த்துக்கோங்கப்பா) சேர்ந்து நடத்திய ஜுகல்பந்தி.... அட.... அட.... அட.... என்ன சொல்ல விவரிக்க....கனகாபிஷேகம் செய்து கொண்ட கணவனும் மனைவியும் சேர்ந்து சில தலைமுறை கண்ட மொத்த குடும்பத்தினரையும் அன்போடும் காதலோடும் வழிநடத்துவதுபோல வாத்தியங்களை வழிநடத்துவதில் இருவரின் இசையிலும் அப்படி ஒரு ஒத்திசைவு... தாலி கட்டியவரின் கண்ணசைவு, விரலசைவு, என எல்லாவற்றுக்கும் ஒரு அர்த்தம் தெரிந்திருந்து அதன்படியே இம்மி பிசகாமல் நடக்கும் மனைவியின் ஆத்ம அர்ப்பணிப்பு என்ன என்பதை இசையில் விளக்கினர் இருவரும். (இதில் யார் கணவன் யார் மனைவி என்ற வாதம் வேண்டாமே). மாண்டலினாரின் முகத்தில் குடிகொண்டிருந்த சிரிப்பு நித்ய பூரணமாய் இருந்தது. அவரின் கைகளை கவனிப்பதை விட்டுவிட்டு அவர் சிரித்த முகத்தை மட்டும் சற்று நேரம் கவனித்தால் அவர்தான் வாசிக்கிறாரா என்று சந்தேகம் எழுந்தது.

நிகழ்ச்சியை வந்தே மாதரம் மெட்டினை இசைத்து முடித்தவிதம், நிகழ்ச்சியை ரசித்த அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. வீட்டிற்கு வந்து சேர்ந்து வெகுநேரம் கழித்தும் மணியின் இசையும், ஸ்ரீநிவாஸ் மெலடியும் காதுகளில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தது. நெடுநாட்கள் கழித்து ஒரு நாளினை நிறைவாகக் கழித்ததை போல உணரவைத்த அவர்களின் இசைக்கு என் ஆத்மார்த்தமான வணக்கங்கள்....

1 comment:

வருகைதந்து வாசித்தமைக்கு நன்றி. தங்களின் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.