Thursday, October 1, 2009

வேலை நிறுத்தப்போராட்டம்.... தர்ணா...எங்கே போகிறது நமது இந்தியா....???


பணிக்கு வராமல் போராட்டம் செய்வது, வேலைநிறுத்தம் செய்வது, சம்பள பாக்கிக்காக நடுத்தெருவில் குடும்பத்துடன் தர்ணா செய்வது, நிர்வாகத்தின் தண்டனைகளிலிருந்து தப்பிக்க நூதன முறையில் கூட்டாக மருத்துவ விடுப்பு எடுப்பது என்று அண்மையில் ஸ்டிரைக் தொடர்பாக ஏகப்பட்ட செய்திகள் டிவி, தினசரிகள் என அனைத்து ஊடகங்களையும் ஆக்கிரமித்துள்ளது. ஏர் இந்தியா விமான பைலட்களின் வேலைநிறுத்தம் ஐந்தாவது நாளை எட்டியுள்ளது. நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அவர்கள் சில நகரங்களில் பணிக்கு திரும்ப நாட்டின் தலைநகரமான டெல்லி, இன்னமும் இவர்களின் வேலைநிறுத்தத்தால் இயல்பு நிலைக்கு திரும்பாமல் உள்ளது. உற்பத்தி தொடப்பான ஊதியம் பாதியாக்கப்பட்டது, மற்றும் போதிய அளவு ஊதிய உயர்வு இல்லாதது ஆகிய காரணங்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது இந்த வேலைநிறுத்தப் போராட்டம். நாடு முழுவதும் இதனால் 29.9.2009-ல் 80-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டு 5800க்கும் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஏர் இந்தியா நிறுவனத்திற்கு இதனால் 700 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் விமான ஊழியர் சங்க உறுப்பினர்களும் பைலட்களின் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். கூட்டாக விடுப்பு எடுக்கும் இந்த போராட்ட கலாசாரத்தை “ஜெட் ஏர்வேஸ்” நிறுவன ஊழியர்கள் ஆரம்பித்து வைத்தனர். அப்போதே இந்திய அரசு சுதாரித்து இருக்க வேண்டும், இதே போன்ற ஒரு போராட்டத்தை அரசு நிறுவனமான ஏர் இந்திய பைலட்களும் செய்தால் என்ன செய்வது, எப்படி கையாளுவது, போராட்டம் தொடர்ந்தால் மாற்று ஏற்பாடுகளை உடனே எப்படி செய்வது போன்ற எது தொடர்பான விஷயத்தையும் இந்திய அரசு ஆலோசித்ததாக தெரியவில்லை.

ஏற்கனவே முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ள நிலையிலும் பிரதமர் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவி பயணிகளை கருத்தில் கொள்ளாமல் பைலட்கள் மீது “இரும்புக்கர நடவடிக்கைகள் எதுவும் வேண்டாம் மீண்டும் பேசிப்பாருங்கள்” என்று அமைச்சர்களிடம் கூறியிருப்பது என்ன வகையான ஆளுமை என்றே புரியவில்லை. இது போன்ற அரசின் கீழ்ப்படிதல் நிலை பைலட்களை இன்னும் செறுக்கு கொள்ளச் செய்யுமேயன்றி பணிந்து போக எப்படி தூண்டும்....? இதே பிரச்சினையை சமாளிக்க ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், நிறுவன ஊழியர்கள்மீது எஸ்மா சட்டம் பாயும் என்று மிரட்டி ஓரளவு பணியச்செய்ததை ஏன் மத்திய அரசு செய்யவில்லை...?

2008-ம் ஆண்டு மத்திய அரசு ஒரு நீதிமன்றம் தொடர்பான ஒரு திட்டத்தை அமல்படுத்தலாம் என்று பரிந்துரைத்தது. “கிராம நியாயாலயாஸ்” என்கிற அத்திட்டத்தின்படி கிராமப்புற வழக்குகளை விரைந்து முடித்திட நடமாடும் நீதிமன்றங்களை அந்தந்த மாநில அரசுகள் மத்திய அரசின் உதவியோடு அமைக்கலாம். அப்படி செய்தால் பொதுமக்களும் வழக்கு சம்பந்தப்பட்ட சாட்சிகளும், வக்கீல்களும் பாதிக்கப்படுவார்கள், ஆகவே இந்த சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி தமிழகம், புதுவை, கர்நாடக மாநில வக்கீல்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். இத்திட்டம் அமலானால் பெருநகர நீதிமன்றங்களின் பணிச்சுமை குறையும், வழக்கு சம்பந்தப்பட்டவர்கள் அடிக்கடி நீதிமன்றங்களுக்கு வந்து போகும் பிராயண செலவு குறையும், இப்படி எத்தனையோ பயன்கள் இருக்க படித்த வக்கீல்கள் எப்படி இது பொதுமக்களை பாதிக்கும் என்கிற ரீதியில் தடை செய்ய வலியுறுத்துகிறார்கள் என்பது கடவுளுக்கே வெளிச்சம்....?!?!!!?

கர்நாடக மாநில அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் காலவரையுடன் கூடிய சம்பள உயர்வு கோரியும், ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப்பட்ட மருத்துவர்களை பணி நிரந்தரம் செய்யப்கோரியும், மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்து, 15 நாட்கள் கெடுவைத்து ராஜினாமா கடிதத்தை அரசிடம் சமர்ப்பித்துள்ளனர். 4000 அரசு மருத்துவர்கள் கூட்டாக சேர்ந்து இதை செய்துள்ளனர். ஏற்கனவே 40 ஆயிரத்திற்கும் அதிகமான சம்பளம் பெறும் மருத்துவர்கள் மேலும் சம்பள உயர்வு கோரி இப்படி கூட்டாக ஸ்டிரைக் செய்வது அம்மாநில அரசை ஸ்தம்பிக்கச் செய்ததுடன் பொதுமக்களையும் கடும் அதிருப்திக்குள்ளாக்கியிருக்கிறது. கர்நாடக அரசு இது தொடர்பாக மருத்துவர்கள் மீது உடனடி கடும் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் துறை சார்ந்த அமைச்சர்கள் மூலம் விளக்கெண்ணெய்யில் விழுந்த வெண்டைக்காயைப்போல பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. 29 மாவட்டங்களையும், 5 கோடியே 28 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட கர்நாடகா, தற்போது 976 பேருக்கு ஒரு அரசு மருத்துவர் என்கிற நிலையில் உள்ளது. இந்த போராட்டத்தை மெத்தனமாக கையாண்டால் மாநிலத்தில் சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகள் பூதாகரமாக உருவெடுக்கும்.

திருப்பூரில் எவர்சில்வர், பித்தளை, வெண்கல பாத்திரங்கள் உருவாக்குவது, அவற்றிற்கு முலாம் பூசுவது, உதிரியாக உருவானதை ஒன்றிணைப்பது என 250-க்கும் அதிகமான சிறிய மற்றும் பெரிய தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு தீபாவளி போனஸாக 15% வழங்கப்பட்டது. இந்த ஆண்டு அதை உயர்த்தித் தரக் கோரி இரண்டாயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்கள்.

ஜம்மு காஷ்மீரில் மாநில போக்குவரத்துத்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது மூன்று மாத சம்பள பாக்கி, மேலும் கடந்த ஆண்டுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சலுகை ஊதிய பாக்கிகளை வழங்கக்கோரி மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தர்ணா செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் ஜம்மு காஷ்மீரின் தலைமைச்செயலகம் முன்பு சுமார் இருநூறு ஊழியர்கள் தத்தமது குடும்பத்தாருடன் கூடி தர்ணா செய்யப்போவதாக முன்னறிவிப்பின்றி அமர்ந்துவிட, அவர்கள் மீது கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசப்பட்டன. குழுமியிருந்தவர்களை கலைக்க அவர்கள்மீது தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பெரும்பாலான போக்குவரத்துத்துறை ஊழியர்கள் தங்கள் குடும்பம் மிகவும் வறுமையில் இருப்பதாகவும், மேலும் சிலர் பணம் செலுத்தாததால் தங்கள் பிள்ளைகள் பள்ளிகளில் இருந்து நீக்கப்பட்டதாகவும் கதறி அழுதனர். 1976-ல் ஆரம்பிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் மாநில போக்குவரத்துத்துறை, ஆரம்பத்தில் இருந்தே நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது. பல்வேறு அரசுகள் அங்கு மாறியும் குறிப்பிட்ட முன்னேற்றம் ஏதுமின்றி 850-க்கும் மேற்பட்ட பேருந்துகளை கொண்டுள்ள போக்குவரத்துத்துறை, சென்றாண்டு முடிய 400 கோடி ரூபாய் வரை அரசுக்கு நஷ்டமேற்படுத்தியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடன் சுமையை குறைக்கும் நடவடிக்கையாக, 20 ஆண்டுகள் கடந்து பணிபுரியும் ஊழியர்கள் அவர்களே வேலையை முன்வந்து ராஜினாமா செய்தால் நல்ல தொகை தரப்படும் என்று அரசு அறிவிக்க, 271 ஊழியர்கள் மூன்றாண்டுகளுக்கு முன்னர் தமது விருப்ப ஓய்வை அறிவிக்க, அதை ஏற்றுக்கொண்ட அரசு உடனே அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்து இன்றுவரை அவர்களுக்கு எந்த செட்டில்மென்ட்டும் செய்யவில்லை.

மேலே கண்ட அனைத்து போராட்டங்களிலும் (வக்கீல்கள் தவிர்த்து) உள்ள ஒரு ஒற்றுமை ஊதிய உயர்வு அல்லது சம்பள பாக்கி. கூட்டாக சேர்ந்து ஸ்டிரைக் செய்யும் ஊழியர்களின் ஒற்றுமை பாராட்டும்படியாக இருந்தாலும் இவர்கள் யாரும் பாதிக்கப்படும் பொதுமக்கள் பற்றி சிறிதளவு கவலைப்படுவதாக தெரியவில்லை. ஜம்மு காஷ்மீர் மற்றும் திருப்பூர் போராட்டங்கள் பொதுமக்களுக்கு உடனடியாக பெரும்பாதிப்பை ஏற்படுத்திவிடப்போவதில்லை. ஆனால் மருத்துவர்களும் விமான ஓட்டிகளும் அறிவிப்பு ஏதுமின்றி இதுபோல அரசை ஸ்தம்பிக்கச் செய்யும் போராட்டங்களில் குதித்தால் நாடு என்னாவது...? சுற்றுலா பிராயணங்கள் தவிர்த்து விமானங்களில் எத்தனையோ அவசர நடவடிக்கைக்காக, உயிர் காக்கும் அவசிய காரியங்களுக்காக பிராயணம் மேற்கொள்வோரை அப்படியே நட்டாற்றில் விட்டுவிட்டால் அவர்களின் வேதனைகளுக்கு, மனத்துயரங்களுக்கு யார் பதில் சொல்வது...? அரசாங்கம் என்பது பிரத்யேக தகுதிகளுடன் மக்களை ஆள்வதற்காக, வானத்திலிருந்து குதித்த ஒன்று இல்லையே... பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அந்தந்த துறைகளை நிர்வகிக்கும்போது அவர்களோடு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தி, கோரிக்கைகள் நிறைவேறாத போது உச்சகட்ட நடவடிக்கையாக, ஆயுதமாக எடுக்க வேண்டிய வேலைநிறுத்தப்போராட்டத்தை எந்த முன்னறிவிப்புமின்றி செய்தால், இந்த நடவடிக்கைகள் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்துமேயன்றி வேறொன்றுக்கும் உதவாது. இன்னும் சொல்லப்போனால் தலையை பாதி மழித்த பின்னர், கத்தியை கழுத்தில் வைத்து அதிகக் காசு கேட்கும் குரூர புத்தியுடைய சவரக்காரனுக்கும் இவர்களுக்கும் அதிக வித்யாசமில்லை.

இவர்களையெல்லாம் சரியான வழியில் நெறிப்படுத்தி திறமையாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்கிற மனிதவளத்துறை (Human Resources) வல்லுநர்கள் நம்மிடையே இல்லாமல் இல்லை. இருப்பினும் நிர்வாகத்தின் தவறான ஒரு முடிவு, அது போன்ற வல்லுநர்களை இழக்கச் செய்யும் என்பதையும் ராஜ்ஜியத்தை ஆள்பவர்கள் மறந்துவிடக்கூடாது. அண்மையில் கோவையில் வாகனங்களின் ஸ்பீடாமீட்டர் தயாரிப்பு நிறுவனமான “ப்ரிக்கால்” கம்பெனியில் நிர்வாகத்தின் தவறான கையாளுதல் காரணமாக 33 பேர் வேலைநீக்கம் செய்யப்பட்டனர். இவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திய அந்நிறுவனத்தின் மனிதவளத்துறை மேலாளர் திரு.ராய் ஜார்ஜ், ஊழியர்களின் கோபத்திற்கு ஆளாகி அவர்களின் வன்முறைக்கு பலியானார். கேரளாவை சேர்ந்த இவர் மனிதவளத்துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். தனிப்பட்ட முறையில் இவரது மரணம் இவர் குடும்பத்திற்கு பெறும் இழப்பு என்றாலும், மனிதவளத்துறை தன் துறையில் முதிய அனுபவமிக்க ஒரு நபரை இழந்திருக்கிறது.

ஊழியர்களின் கோரிக்கைகள் அதுதொடர்பான வேலை நிறுத்தப்போராட்டம் ஆகிய நுட்பமான அதே சமயம் வீரியமிக்க விஷயங்களை சரியாக கையாளாவிட்டால் நேரும் பயங்கரங்களை குறிக்க மேலே சொன்னது ஒரு சின்ன உதாரணமே... இந்தியப் போராட்டங்கள் பற்றியும் பல்வேறு அரசு மற்றும் தனியார் ஸ்டிரைக்குகள் பற்றியும் இணையத்தில் தேடியதில் ஆறுதலான தகவல்களே கிடைத்தன. அதாவது கடந்த எட்டு ஆண்டுகளில் போராட்டங்களும், ஸ்டிரைக்குகளும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளும் வருடாவருடம் குறைந்தவண்ணமே உள்ளது. அது பற்றிய சிறிய வரைபடம் உங்களுக்காக...

இனி வரும் காலங்களில் இது மென்மேலும் குறைந்து போராட்டங்களும், ஸ்டிரைக்குகளும், தர்ணாக்களும் இல்லாத புதியதொரு உலகம் மலரும் என நம்புவோம்....பிராத்திப்போம்...

No comments:

Post a Comment

வருகைதந்து வாசித்தமைக்கு நன்றி. தங்களின் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.