Thursday, October 1, 2009

ஆஸ்திரேலியாவில் இறந்த பச்சிளம் குழந்தை....

சம்பவம்=1

ஆஸ்திரேலிய வாழ் இந்திய வம்சாவளி தம்பதியினரான தாமஸ்சாம்(42) மற்றும் மஞ்சுவிற்கு(37) ஆஸ்திரேலிய அரசாங்கம் அவர்கள் மீது நடந்த ஒரு வழக்கின் முடிவாக சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. வழக்கு பற்றி பார்க்கும் முன்னர் முதலில் இவர்களை தெரிந்து கொள்வோம். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேல் ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் தாமஸ்சாம் அங்குள்ள ஹோமியோபதி மருத்துவமனை மற்றும் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவியும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருக்க, 2002-ல் இவர்களுக்கு பிறந்த குழந்தை, 9 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் தீவிர தோல் வியாதி முற்றிய நிலையில் இறந்துவிட்டது. தாமஸ்சாம் ஹோமியோபதி மருத்துவம் தெரிந்தவர் என்பதால் ஆரம்பம் முதலே அந்தக் குழந்தைக்கு இயற்கை வைத்திய முறையில் மருந்துகள் கொடுத்து குணப்படுத்த முயன்றிருக்கிறார். அவரது மனைவி ஆங்கில மருத்துவ முறையில் வைத்தியம் செய்ய எவ்வளவோ வற்புறுத்தியும் அதனை ஏற்க மறுத்திருக்கிறார். ஆனால் நோய் மிகவும் முற்றிவிடவே கடைசியில் ஆங்கில மருத்துவ முறையில் குணப்படுத்த மருத்தவமனையில் சேர்க்க, நிலைமை தீவிரமாகி சிகிக்சை பலனின்றி குழந்தை மருத்தவமனையில் சேர்த்த 3 நாட்களில் பரிதாபமாக இறந்தது. இதைக்கண்ட தனிநபர் ஒருவர் (நம்மூர் டிராபிக் ராமசாமி மாதிரி... எல்லா ஊர்லயும் இவரு மாதிரி ஒருத்தரு இருக்காரு போல...,) தாமஸ்சாம் மீதும் அவர் மனைவி மீதும் குழந்தைக்கு சரியான முறையில் சிகிக்சை அளிக்கவில்லை, அக்குழந்தைக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய மருத்துவ வசதிகளை பெற்றோர்களாக இருந்தும் கிடைக்க வழி வகை செய்ய தவறி, குழந்தையை கொன்று விட்டார்கள் என்கிற ரீதியில் பொதுநலவழக்கு வழக்கு தொடர, அண்மையில் மேலே சொன்னபடி அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தாமஸ்சாமிற்கு ஆறு ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தவறான மருத்துவத்தை வழங்கிய கணவரை கண்டிக்காதது, கண்டித்தும் அவர் மறுத்ததை அரசுக்கு தெரிவிக்காதது ஆகிய குற்றங்களுக்காக மஞ்சுவிற்கு நான்காண்டு கடுங்காவல் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம்=2

இங்கிலாந்தில் தாய் தகப்பன் இறந்த நிலையில் பாட்டியிடம் வளர்ந்த 6 வயது சிறுவன் தன் வயதுக்கு மீறிய எடையுடன் வளர்ந்து மிகவும் குண்டாகி உடல் ரீதியாக மிகவும் சிரமப்பட்டான். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் போலீஸில் புகார் செய்ய, அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து குழந்தையை விளையாட அனுமதிக்காமல் அவனை வீட்டிலேயே அடைத்து வைத்து அவனது உடல் ஆரோக்கியத்தை கெடுத்துவிட்டார் என்கிற குற்றத்திற்காக அந்தச் சிறுவனின் பாட்டியை கைது செய்தனர். நீதிமன்றத்தில் விசாரணையின்போது “விளையாட அனுமதித்தால் நிறைய சேட்டை செய்கிறான், எங்கேனும் அடிபட்டுக்கொள்கிறான், அதனாலேயே அவனை வீட்டிலேயே அடைத்து வைக்க வேண்டியதாயிற்று, அவன் அழும்போதெல்லாம் தின்பண்டங்கள் கொடுத்து அவனை சமாதானம் செய்வேன்” என்கிற ரீதியில் பாட்டி வாதாட, இதை ஏற்காத நீதிபதி அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

பின்னர் உடன் வசிப்பவர்கள் மற்றும் நகர மேயர் ஆகியோரின் பாட்டி பற்றிய நன்னடத்தை குறித்த வேண்டுகோளுக்கிணங்க பாட்டி விடுதலை செய்யப்பட்டு, சிறுவன் சராசரி உடல் எடையுடன் ஆரோக்கியமாகி திரும்பும்வரை சிறார் காப்பகத்தில் வளர நீதிமன்றம் ஆணையிட்டது.

சம்பவம்=3

இதே இங்கிலாந்தில் தன் தாயுடன் கடைக்கு சென்ற 5 வயது பெண் குழந்தை தனக்கு பிடித்த இனிப்புப் பண்டத்தை உடனே வாங்கித் தரக்கேட்டு அழுது ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறாள். எவ்வளவோ பொறுமையாக எடுத்துச் சொல்லி சமாதானப்படுத்தியும் அவள் அடங்கவில்லை. (மேலை நாடுகளில் பொது இடங்களில் குழந்தைகளை அடிப்பது, துன்புறுத்துவது, மனம் புண்படும்படி திட்டுவது, ஆகியவை அனைத்தும் சட்டப்படி குற்றம். நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை நிச்சயம். இந்தச் சட்டம் இந்தியாவிற்கு வந்தால் எத்தனையோ குழந்தைகள் அம்மாவின் தர்மஅடியிலிருந்து தப்பிக்கும்...) அவள் கேட்டதை வாங்கித்தர மறுத்த தாய், கொஞ்ச நேரம் அழுதுவிட்டு அடங்கிவிடுவாள் என்று குழந்தையை கண்டுகொள்ளாமல் விட்டுவிட, தாயின் அலட்சியத்தை தாங்காத குழந்தை இன்னும் பெருங்குரலெடுத்து அழுது கடையிலேயே மயங்கி விழுந்துவிட்டாள்.

இதைக்கண்ட கடை ஊழியர்கள் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க, மருத்துவர்களோடு விரைந்து வந்த அவர்கள், அக்ககுழந்தைக்கு தேவையான முதலுதவிகள் செய்து, இருவரையும் நகர நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள். அந்த குறிப்பிட்ட இனிப்பு பண்டத்தின் விலை காரணமாகவும் அதைத் தின்றால் பல் கெட்டுவிடும் வாய்ப்பு உள்ளதாலும் அதை வாங்கித்தரவில்லை என்று குழந்தையின் தாய், தன் தரப்பு வாதத்தை நீதிபதியிடம் வைக்க, அதை ஏற்காத அவர் பொது இடத்தில் குழந்தை மயக்கமுறும் வரை அழச்செய்தது கண்டிக்கத்தக்கது என்று அவளை மிகக் கடுமையாக எச்சரித்து, இன்னொருமுறை இதுபோல நடவாமல் பார்த்துக்கொள்ள அறிவுறுத்தினார். மேலும் தன் சொந்த செலவில் அந்தக் குழந்தை விரும்பிய தின்பண்டத்தை அவளுக்கு வாங்கித் தந்தவர், அந்தக் குழந்தையிடம் தாய் சொல்வதை கேட்டு நடக்கவேண்டும், அவள் அனுமதித்த அளவு மட்டுமே இனிப்பு பண்டத்தினை உண்ண வேண்டும் என்றும் அன்பாக கூறினார். இந்த வழக்கின் உச்சமாக அவர் செய்தது மேலைநாட்டவர்களின் குழந்தைகள் மீதுள்ள அளவு கடந்த அக்கறையை பிரதிபலிக்கிறது. குறிப்பிட்ட இனிப்பு பண்டம் பெரும்பாலான குழந்தைகளின் விருப்ப உணவாக இருப்பதால் அதன் விலையை குறைப்பதை பற்றி பரீசிலிக்க நீதிமன்றம் சார்பாக பரிந்துரைக்கிறேன் என்று அவர் கூற, எதைப்பற்றியும் யோசிக்காமல் அந்நிறுவனமும் உடனடியாக விலைகுறைப்பு செய்தது.

சம்பவம்=4

பிரிட்டனில் செல்லப்பிராணிகள் வளர்ப்பு என்பது ஏகப்பட்ட சட்டதிட்டங்கள் கொண்டது. அங்கே ஒருவர் தான் வளர்த்து வந்த மூன்று நாய்களை எந்நேரமும் வீட்டிலேயே அடைத்துவைத்திருக்கிறார், வாக்கிங் அழைத்து செல்வதில்லை, இதனால் அந்த நாய்கள் மிகவும் சோர்ந்து காணப்படுகின்றன என்று அவரது அக்கம்பக்கத்து வீட்டார் கோர்ட்டில் வழக்கு தொடர, நாய் வளர்த்தவர் கைது செய்யப்பட்டு நீதிபதி முன் நிறுத்தப்பட்டார். தனது பணிச்சுமை காரணமாக அவற்றை சரியாக பராமரிக்கமுடியவில்லை, மற்றபடி தனக்கு நாய்கள் என்றால் உயிர் என்று அவர் வாதாட, அதை ஏற்காத நீதிபதி ஒன்றுக்கு மூன்று நாய்கள் வைத்திருப்பவர் அதைத் தக்க முறையில் பராமரிக்க வேண்டும், பணிச்சுமை காரணமாக இருப்பின் செல்லப்பிராணிகள் பாதுகாவலரை நியமித்திருக்கவேண்டும், இதைச் செய்ய அவர் தவறிவிட்டதால் அவரது லைசன்ஸ்சை (பிரிட்டனில் சில குறிப்பிட்ட பகுதிகளில் வீடுகளில் செல்லப்பிராணிகள் வளர்க்க அரசிடம் லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும்) தற்காலிகமாக ரத்து செய்து அவரது நாய்களை பிராணிகள் நலக்காப்பகத்தில் சேர்க்க உத்தரவிடுவதாக வழக்கை முடித்தார்.

சில காரணங்களுக்காக தாமஸ்சாம் சம்பவம் தவிர்த்து மேலே சொல்லப்பட்டிருக்கும் மற்ற சம்பவங்களின் காலம் மற்றும் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. ஆனால் அனைத்திற்கும் பொதுவான ஒரு அம்சமாக மேலைநாடுகளில் குழந்தைகளையும் பிராணிகளையும் பாதுகாக்க எந்தளவிற்கு சட்டதிட்டங்களை வைத்துள்ளார்கள் என்பதை காண்கையில் இந்தியாவின் அவல நிலை நெஞ்சில் அறைகிறது. கும்பகோணம் தீவிபத்தில் இறந்த பள்ளி குழந்தைகள்..., போதிய ஏற்பாடின்றி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்ட 70 குழந்தைகள் வாகன விபத்தில் மரணம்...., கவனக்குறைவாக தயாரிக்கப்பட்ட சத்துணவை சாப்பிட்டு இறந்த அரசுப் பள்ளிக் குழந்தைகள்...., கேட்பாரற்று வீதிகளிலும் குப்பைத்தொட்டிகளிலும் வீசப்படும் பச்சிளம் சிசுக்கள்..., இதுபோன்று இன்னும் எத்தனை எத்தனையோ... இந்த கொடூரமான, ரத்தம் கொதிக்கவைக்கிற நிகழ்வுகள் அனைத்தும் இந்தியப்பத்திரிக்கைகளில், தினசரி டீக்கடைகளில் அசாதாரணமாக அலசப்படும் விஷயங்கள்.

இன்றைக்கும் இந்தியாவில் எத்தனையோ லட்சம் குழந்தைகளுக்கு பெற்றோர்களின் அறியாமையாலும் மருத்துவர்களின் அலட்சியத்தாலும் தவறான சிகிச்சைகள் வழங்கப்பட்டவண்ணம் உள்ளது. சமீபத்தில் ஹிதேந்திரனின் இதயத்தைப் பெற்று உயிர் வாழ்ந்து வந்திருந்த இதயக் கோளாறு காரணமாக திடீரென இறந்துவிட்டாள். மாதாமாதம் சரியாக உடற்பரிசோதனை செய்து வந்த அவள் இம்முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபின் இறந்துவிட்டாள். ஒரு வருடம் முன்னர் அவளுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தநிலையில் தினசரிகளில் வந்த செய்திகள், சின்னப்பெண் என்பதால் இன்னும் பதினைந்து வருடங்களுக்கும் மேல் அவள் உயிர் வாழ்வதற்கான சாத்தியங்களிருப்பதாக தெரிவித்தன. இதயத் திசுக்களின் வளர்ச்சி அவளுக்கு பாதகமாக அமைந்ததால் இறந்தாள் என்று பரவலான ஒரு கருத்து இருந்தாலும், மாதந்தோறும் அவளை பரிசோதிக்கும் மருத்துவர் விடுப்பில் சென்றுவிட்டதால் வேறு மருத்துவரை வைத்து வழங்கப்பட்ட சிகிச்சையின்போது அளித்த தவறான மருந்தை அவள் உடல் ஏற்காததால் இறந்தாள் என்கிற ஒரு மாற்றுக் கருத்து உலவுவதையும் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது.

“ஒவ்வொரு குழந்தையும் பூமிக்கு வரும்போது, இறைவன் மனிதகுல வாழ்வினை நீட்டித்திருக்கிறான் என்கிற மறைமுக செய்தியுடன் பிறக்கிறது” பெர்னாட்ஷா சொன்ன இப்பொன்மொழியினை ஞாபகம் வைத்திருந்தாலே சிசுவோ, குழந்தையோ, பிராணியோ எதுவாக இருந்தாலும் அதன்மீது நமக்கு எல்லையில்லா அன்பு வந்துவிடும்.

No comments:

Post a Comment

வருகைதந்து வாசித்தமைக்கு நன்றி. தங்களின் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.