Tuesday, February 2, 2010

ஹம்பி – விஜயநகர சாம்ராஜ்யத்தின் எச்சம்-1

விஜயநகர சாம்ராஜ்யத்தின் தலைநகரமாக விளங்கிய ஹம்பி கட்டப்பட்டு 500 வருடங்களாகி விட்டதையொட்டி சமீபத்தில் கர்நாடக அரசு பெரிய விழா ஒன்றை எடுத்தது. வருடாவருடம் “ஹம்பிஉத்ஸவ்” என்ற பெயரில் விழா எடுக்கப்பட்டாலும் 500 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை ஒட்டி பல முக்கியப் பிரமுகர்களை ஒன்றிணைத்து இவ்விழா நடத்தப்பட்டது.

விஜயநகர சாம்ராஜ்யத்தை பற்றியும் ஹம்பியில் உள்ள கோயில்கள் கட்டப்பட்ட விதத்தைப் பற்றியும் ஏகப்பட்ட விஷயங்கள் புத்தகங்களாகவும், இணையத்திலும் இருப்பதால் அவற்றைப்பற்றி நான் ஒன்றும் விவரிக்கப் போவதில்லை. என்னுடைய ஏழு வயதில் இந்தப் புராதன நகரத்தின் அருமை புரியாமல் ஏதோ வேடிக்கை பார்த்து வந்திருக்கிறேன். அதுவும் ஹம்பியிலிருந்து சற்றே தள்ளி கட்டப்பட்டுள்ள “விட்டலா ஆலயம்” மற்றும் கல் தேர், இசை எழுப்பும் கல் தூண்கள் இவற்றை மட்டும் பார்த்துவிட்டு அவ்வளவுதான் ஹம்பி என்று நினைத்திருந்தேன். இந்த முறை பார்க்கும்போதுதான் இதன் முழுப்பரிமாணம் புரிந்தது. யுனெஸ்கோவால் உலக புராதன சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த இடம் துங்கபத்ரா நதிக்கரையோரம் அமைந்துள்ளது.

சுமார் 30 கி.மீ. பரப்பளவிற்கு விரிந்து பரந்துள்ள இந்நகரத்தில் அந்நாளில் ஏகப்பட்ட கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. இந்நகரத்தினை பறவைப்பார்வையில் புரிந்து கொள்ள அருகிலுள்ள (15 கி.மீ.) “ஆனெகுந்தி” எனப்படும் மலையின் மீதேறி பார்க்கவேண்டும். ராம பக்தர் ஹனுமன் பிறந்ததாக கருதப்படும் இந்த மலைமீது அவருக்கென்று ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது. இது 2000 வருடங்கள் பழமையான கோயில் என்று சொல்லப்படுகிறது. விஜயநகர சாம்ராஜ்யம் உண்மையில் இந்த மலையின் அடிவாரத்தில் பிறந்து பின்பு ராஜ்ஜிய விரிவாக்கத்தின் போது போக்குவரத்து, உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஹம்பிக்கு பெயர்ந்ததாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன.

கிருஷ்ணதேவராயரின் ஆளுகைக்கு கீழ் அவரது ஆட்சியில் அவரின் நேரடிப்பார்வையில் பல கோயில்கள் இங்கே கட்டப்பட்டிருந்தாலும் குறிப்பாக தனிநபர்களால் கட்டப்பட்ட மூன்று கோயில்கள் என்னை மிகவும் கவர்ந்தன. ஈசனின் மேல் மிகுந்த பக்தி கொண்ட ஏழைப்பெண் ஒருத்தி கூலி வேலை செய்தும் மற்றவர்களிடம் பொருளை அன்பளிப்பாகவோ யாசகமாகவோ பெற்று “படவி லிங்கம்” என்ற பெயரில் ஒரு ஈஸ்வர ஆலயம் கட்டியுள்ளாள். மூன்று மீட்டர் உயரத்தில் தண்ணீருக்கு நடுவே அமைந்துள்ள இந்த லிங்கம் பார்க்க பிரமாண்டமாக உள்ளது.மேலும் கடுகு மற்றும் நிலக்கடலை வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் கிடைத்த உபரியான லாபத்தின் பிரதிபலனாக வெவ்வேறு இடங்களில் இரண்டு மிகப்பெரிய விநாயகர் சிலைகளை அமைத்து ஆலயங்கள் கட்டியுள்ளனர். கடுகு வியாபாரியால் கட்டப்பட்ட ஆலயத்திலுள்ள விநாயகரை “சசிவேகலு கணேஷா” என்றும் கடலை வியாபாரியால் கட்டப்பட்ட ஆலயத்திலுள்ள விநாயகரை “கடலேகலு கணேஷா” என்றும் அழைக்கின்றனர். இன்றைய காலகட்டத்தில் காசிருக்கும் எவரும் கோயில் கட்டுவது பெரிய விஷயமில்லை. ஆனால் வரலாற்றில் தன்னுடைய பெயர் மட்டுமே இருக்கவேண்டும், தான் கட்டிய கோயில்கள் மட்டுமே நிலைத்திருக்க வேண்டுமென்கிற நினைப்பில்லாமல் சாமான்ய குடிமக்களுக்கும் கோயில் கட்டும் உரிமையையும் அங்கீகாரத்தையும் தந்திருப்பது கிருஷ்ணதேவராயரின் பெருந்தன்மையை காட்டுகிறது.

மொகலாயர்கள் மற்றும் பல்வேறு அரசர்களின் தொடர் படையெடுப்பினால் பெரும்பாலான கோயில்கள் முழுவதும் அழிக்கப்பட்டும், விக்கிரகங்கள் சிதைக்கப்பட்டும் உள்ளன. மூலஸ்தான சிலைகள் மற்றும் இதர சிலைகளில் எந்த பின்னமும் (சிதைவு) இல்லாததால் விருபாக்க்ஷ ஆலயத்திலுள்ள விருபாக்க்ஷ ஈஸ்வரருக்கும் மற்ற சந்நிதான தெய்வங்களுக்கும் இன்றளவும் நித்ய பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த கோயிலின் முக்கிய கோபுரத்தின் நிழல் கோயிலின் உள்ளே உள்ள ஒரு சுவற்றில் தலைகீழாக விழுகிறது. காமிராவில் இருக்கும் PIN HOLE TECHNOLOGY என்கிற முறையில் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள கட்டுமானம் வியக்க வைக்கிறது. இது நிச்சயம் காண வேண்டிய ஒன்று.இந்தப் பதிவினை படிக்கிற நண்பர்களுக்கோர் வேண்டுகோள். நான் சிறியவனாக இருக்கும்போது இங்கே சென்றபோது அப்போது இசையெழுப்பும் தூண்களை தட்டிப் பார்க்க அனுமதியளித்தார்கள். ஆனால் இப்போது புனரமைப்பு மற்றும் வேறு பாதுகாப்பு காரணங்களுக்காவும் எட்ட நின்று பார்க்க மட்டுமே அனுமதியளிக்கப்படுகிறது. மேலும் வரலாற்று தலங்களில் ஆர்வமுள்ள ஒரு புதிய நண்பர் அங்கே அறிமுகமானார். அவர் வாங்கியிருந்த ஒரு புத்தகத்தில் (விலை அதிகமில்லை...1650.00 ரூபாய்தான்) கடந்த 70 ஆண்டுகளில் ஹம்பியின் கோயில்களும், அதன் சிலைகளும் மக்களின் அஜாக்கிரதையாலும் வேறு காரணங்களாலும் எப்படி படிப்படியாக சிதிலாமனது என்பதை புகைப்படங்களுடன் விளக்கிக் காட்டியது. ஆகவே இன்னும் எத்தனை காலத்திற்கு இப்போது எஞ்சியிருப்பதுகூட இருக்கும் என்று சொல்வதற்கில்லை. எனவே பிற்காலத்தில் புகைப்படங்களிலும் ஊடகங்களிலும் மட்டும் இதைப்பார்த்து இதன் பிரமாண்டத்தை உணர முடியாமல் ஏக்கப்பெருமூச்சு விடுவதை தவிர்க்க கூடிய விரைவில் ஒரு முறையேனும் நேரில் பார்த்துவிடுவது உத்தமம்.

2 comments:

 1. //அவர் வாங்கியிருந்த ஒரு புத்தகத்தில் (விலை அதிகமில்லை...1650.00 ரூபாய்தான்) கடந்த 70 ஆண்டுகளில் ஹம்பியின் கோயில்களும், அதன் சிலைகளும் மக்களின் அஜாக்கிரதையாலும் வேறு காரணங்களாலும் எப்படி படிப்படியாக சிதிலாமனது என்பதை புகைப்படங்களுடன் விளக்கிக் காட்டியது.//

  அந்தப் புத்தகத்தின் பெயர், ஆசிரியர் பெயர் விவரங்களைப் பகிர்ந்து கொள்ளவும். இதைப் படிப்பவர்களுக்கும்,மேலும் அதிக விஷயங்கள் தெரிந்துகொள்ள உபயோகமாக இருக்கும்

  ReplyDelete
 2. வருகை தந்து வாசித்தமைக்கு நன்றி... அந்த நண்பரோடு மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு புத்தகங்களை பற்றி பெற்ற தகவல்கள் இதோ உங்களுக்காக... மேலும் ஒரு PDF பைலினை தங்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பியுள்ளேன். அதிலுள்ள உரலியை சொடுக்கி இதே எழுத்தாளர் ஹம்பியைப் பற்றி புகைப்படங்களுடன் எழுதியுள்ள மற்ற கட்டுரைகளை படிக்கலாம்...

  Hampi – A Story in Stone –Eng.Rs.3,000.00
  Hampi – The Spledour that Was – Eng.Rs. 470.00
  Vijayanagara: Through the Eyes of Alexander Green Law 1856 - Eng Rs. 325.00

  ReplyDelete

வருகைதந்து வாசித்தமைக்கு நன்றி. தங்களின் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.