Wednesday, February 3, 2010

ஹம்பி – விஜயநகர சாம்ராஜ்யத்தின் எச்சம் 2

ஹம்பி கட்டப்பட்டு 500 வருடங்களாகி விட்டதையொட்டி சமீபத்தில் கர்நாடக அரசு பெரிய விழா ஒன்றை எடுத்தது. ஹொஸ்பேட் எம்.எல்.ஏ ஆனந்த் சிங்கின் தலைமையில் நடந்த இவ்விழா உள்ளூர் மற்றும் வெளி ஊர்களில் உள்ள சிறு வியாபாரிகளின் துரித லாபத்திற்காக கர்நாடக மாநிலத்தால் அரசு விழாவாக மூன்று நாள் நடத்தப்பட்டதோ என்கிற பலத்த சந்தேகத்தை தோற்றுவித்தது.

பரபரப்பான மூன்று நாள் விழாவில் ஏகப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் நகருக்குள் கூடிவிட நகரமே அல்லோலகல்லோலப்பட்டது. இவர்களின் பாதுகாப்பிற்கு மத்திய மற்றும் மாநில போலீஸார்களும் குவிந்துவிட அவரவர் தகுதிக்கேற்ப அத்தனை ஹோட்டல்களும் லாட்ஜ்களும் நிரம்பி வழிந்தது. ஏறக்குறைய ஒருமாதம் முன்னதாக இவ்விழா பற்றி அறிவிக்கப்பட்டும் சுற்றுலாவாசிகள் வந்து குவிந்துவிடுவார்களே, அவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்யவேண்டுமே என்கிற முன்னேற்பாட்டு எண்ணத்தோடு எதுவும் செய்யப்பட்டதாக தெரியவில்லை. ஊரெங்கும் விழா அமைப்பாளர்களும் உள்ளூர் புள்ளிகளும் மாநில முதல்வரின் புகைப்படத்தோடு பெரிய பெரிய பேனர்களில் சிரித்துக்கொண்டிருந்தனர். அந்த பேனர்களுக்கு கீழேயே சிலர் அவர்களை அண்ணாந்து பார்த்தபடி இயற்கை அழைப்பை வெளியேற்றுகின்றனர். சுற்றுவட்டாரத்திலிருந்து தகுந்த முன்னேற்பாடில்லாமல் வந்தவர்கள் தங்க இடம் கிடைக்காததாலும், இருந்த இடங்களும் தாறுமாறாக வாடகையை உயர்த்திவிட்டதாலும் ஊரெங்கும் மலஜல கழிப்புகள் அதிகம். கிலோ கணக்கில் பிளீச்சிங் பவுடர்கள் எவ்வளவோ முயன்றும் அங்கு சுழன்ற துர்நாற்றத்தை துரத்தமுடியாமல் தோற்றன.

500 வருட புராதன நகரிற்கு வந்துள்ளோம் என்கிற சுவடே தெரியாத வண்ணம் எல்லா புராதனச் சின்னங்களின் அருகேயும் திடீர்க் கடைகள் முளைத்திருந்தன. பஜ்ஜி, போண்டா, புளிசாதம், இளநீர், விதவிதமான ஜுஸ், பெயர் தெரியாத ஏதேதோ பொறித்த உணவுகள், பாப்கார்ன், பட்டாணி, உள்ளாடைகள், தொப்பி என அம்மா அப்பா தவிர எல்லாவற்றையும் விற்றுக்கொண்டிருந்தனர். “இந்த இடம் மத்திய தொல்பொருள் ஆய்வகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. இதை சேதம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று வைக்கப்பட்டுள்ள போர்டின் கீழேயே உணவு எச்சங்களும் இளநீர் மட்டைகளும் கொட்டப்பட்டிருந்தன.

இன்னும் சிலபடி மேலே போய் சில குடிமகன்கள் பொதுமக்களின் தாகம் தீர்க்க வழங்கப்பட்ட தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்தி தங்களை தாக சாந்தி செய்துகொண்டு பாட்டில்களை ASI-யின் பாதுகாப்பில் உள்ள இடங்களில் வீசியெறிந்து சென்றுள்ளனர். பெரும்பாலான மக்கள் புராதனச் சின்னங்களின் உள்ளேயே எந்தக் கூச்சமும் இன்றி தூங்கிக்கொண்டிருந்தனர்.
சோமபானம் சுகமான தூக்கம்
இதற்கெல்லாம் உச்சம் வைத்தாற்போல் தேவையற்ற சூழ்நிலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு அன்னதான நிகழ்ச்சி இந்த இடத்தை காண வந்திருந்த பல வெளிநாட்டினரை முகம் சுளிக்க வைத்தது. சில புகைப்படங்களை பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள் நம் மக்கள் அன்னதானத்தில் கலந்துகொண்டு அந்த சூழலை எவ்வளவு தூரம் மாசுபடுத்தியுள்ளார்கள் என்பதை.....

அன்னதான மண்டபம் விவேக் சொல்வதுபோல் இதை வழியெல்லாம் கொட்டி...
கனெக் ஷன் கொடுத்தால் பின்னால்
ரெட்லைட் எரியுமா...?
குளத்தில் கைகழுவி... சாப்பிடாமல் வீணாக்கி....

மொகலாயர்களும் மற்றும் பல்வேறு அரசர்களும் தங்களது தொடர் படையெடுப்பின் மூலம் சில நூறு ஆண்டுகளில் ஏற்படுத்திய மாபெரும் அழிவினை நாம் ஒரு விழா எடுத்து மூன்று நாளில் ஹம்பியை ஒரு மிகப்பெரிய குப்பைத்தொட்டி ஆக்கிவிட்டோம்....

வெள்ளைக்காரர்களும் மற்ற பிற மேலை நாட்டினரும் எதற்கு அத்தனை பணம் செலவு செய்து இந்த மாதிரியான இடங்களை பார்க்க இந்தியா வருகிறார்கள்.....? அமெரிக்கா தோன்றி 500 ஆண்டுகள் கூட முடியவில்லை... ஆனால் நம் நாடு கண்டுபிடிக்கப்படாத காலத்தில் அவர்கள் ஒரு சாம்ராஜ்ஜியத்தையே நிறுவியிருக்கிறார்கள், பற்பல கலைகளை வளர்த்தெடுத்திருக்கிறார்கள், அப்போது அவர்களுக்கிருந்த வெளிநாட்டு தொடர்புகளை வைத்து அவர்களோடு வாணிபத்தை பெருக்கியிருக்கிறார்கள்.....இன்னும் எத்தனையோ......இவற்றையெல்லாம் எப்படி இந்தியர்கள் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே திறமையோடு செய்தார்கள் என்று ஆச்சரியத்தில் விழிவிரிய ஆவலோடு காண வருகிறார்கள்.

ஆனால் நாம் நம் முன்னோர்களின் கலைத்திறமை, கட்டுமானத்திறன், ஊடகங்கள் ஏதுமில்லாத காலத்திலும் அடித்தட்டு மக்களுக்கும் மன்னரின் அரசவையில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளை கொண்டு சேர்த்த திறமை இவை எவற்றையும் வியக்காமல், குறைந்தபட்சம் அந்த சூழலுக்கு குந்தகம் விளைவிக்கக்கூடாது என்கிற புத்திகூட இல்லாமல் எவன் எதை எங்கு விற்றாலும் வாங்கி நுகர்ந்து அங்கேயே கழித்து அந்த இடத்தை குப்பை கூளமாக்கிவிடுகிறோம்.... இதில் பார்வையாளர்களை மட்டும் நாம் குறை சொல்வதற்கில்லை. இப்படி தரம் கெட்ட முறையில் விழாவினை ஏற்பாடுசெய்திருந்த அமைப்பாளர்கள் கண்டிப்பாக இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

இரண்டு அல்லது மூன்றாண்டுகளுக்கு (ஆண்டு சரியாக நினைவிலில்லை) முன்பு ஆஸ்திரேலியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒலிம்பிக் ஆரம்ப விழாவினையொட்டி செய்தித்தாளில் வெளிவந்த ஒரு செய்தி இப்போது ஞாபகம் வருகிறது. பெரியவர்கள் குழந்தைகளென அவ்விழாவில் குறைந்தது அறுபது லட்சம்பேர் கூடியிருந்தனராம். உள்ளூர்வாசிகள் தவிர்த்து வெளிநாட்டவரும் இதில் அடக்கம். விழா ஆரம்பிப்பதற்கு ஒரு மாதம் முன்னரே கார் மற்றும் வேறு வாகனங்களில் வரும் உள்ளூர்வாசிகளுக்கு எப்படி வாகனங்களை விழா அரங்கின் உள்ளே கொண்டுவருவது, எந்த வழியாக வெளியேறுவது போன்ற விடியோ காட்சிகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்பியுள்ளார்கள். குழந்தைகள் தங்களது இடுப்பில் கட்டப்பட்ட சிறு பையில் உணவுப்பண்டங்களின் ரேப்பர்கள், சாக்லேட் கவர்கள் ஆகியவற்றை சேகரித்து பின்னர் முறையான இடத்தில் குப்பைகளை கொட்டுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். விழா முடித்து மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் 45 நிமிடங்களில் அரங்கிலிருந்து வெளியேறிவிட்டன. மேலும் அரங்கினை சுத்தம் செய்தபோது ரேப்பர்கள், சாக்லேட் கவர்கள், தண்ணீர் பாட்டில்கள் என அனைத்தும் சேர்த்த குப்பை 70 கிலோவை தாண்டவில்லையாம்...?? யோசித்துப்பாருங்கள் எந்த அளவிற்கு முன்னேற்பாட்டோடு அமைப்பாளர்கள் இதை செய்திருப்பார்களென்று....

100 கோடி முதல் 500 கோடிவரை இந்த விழாவிற்கு செலவிடப்பட்டதாக பல ஊடகங்கள் பல்வேறு விதமாக செய்தி சொல்கின்றன. இதில் உண்மை எது, நிஜமாக எவ்வளவு செலவு செய்தார்கள் என்கிற விவாதம் வேண்டாம். ஆனால் இத்தனை செலவு செய்தது இந்த புராதன சின்னத்தை குப்பைத்தொட்டியாக்குவதற்கா...? தமிழ்நாடு அரசு தஞ்சைபெரிய கோவில் கட்டப்பட்டு 1000 வருடங்கள் ஆனதையொட்டி விழா எடுக்கப்பபோவதாக அறிவித்துள்ளது. இந்த விழாவினை பாராட்டி கலைஞர் ஒரு செய்தி வெளியிட்டதால் இந்தப் பதிவின் மூலம் தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள். நடந்து முடிந்த இந்தவிழாவினை மனதில் கொண்டு வெறும் விளம்பரத்திற்காக செய்யாமல் பல்வேறு முன்னேற்பாடுகளோடு ஹம்பி உத்ஸவத்தைவிட சிறப்பாக செய்வது நமது அரசுக்கு பெருமை சேர்க்கும்.

No comments:

Post a Comment

வருகைதந்து வாசித்தமைக்கு நன்றி. தங்களின் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.