Sunday, February 14, 2010

மூன்று முட்டாள்களைப் (3 IDIOTS) பற்றி ஒரு முழு முட்டாளின் விமர்சனம்

முதலில் ஒன்றை ஒப்புக்கொள்கிறேன். இந்த விமர்சனம் சற்றே காலதாமதமானதே... நான் வசிக்கும் ஊரில் இந்தி சினிமாக்களை வெளியிட ஒரே ஒரு தியேட்டர்தான் உள்ளது (ராகவேந்திரா தியேட்டர்). கல்லாவைப் பொறுத்து வெளியிடப்படும் இந்திப் படங்கள் ஒரு வாரம் பத்துநாள் வரை ஓடும் அல்லது ஒரு வாரத்திற்குள் தியேட்டரைவிட்டு ஓடிவிடும். இந்தப்படம் மிக அருமையாக இருக்கிறது பாருங்கள் என நண்பர்கள் பரிந்துரைத்து பார்ப்பதற்குள் வேறு படம் மாற்றப்பட்டுவிட்டது. வேறு வழியின்றி திருட்டு விசிடியில் பார்த்தேன். படத்தில் ஆமிர்கானே வேறொருவர் பெயரில்தான் கல்லூரியில் படிக்கிறார். எனவே நியாயப்படி அந்தத் தவறுக்கு இந்தத் தவறு சரியாகிவிட்டது. (சே....என்ன ஒரு லாஜிக்...) ஹாலிவுட் படமான அவதார் திரைப்படம் செய்த வசூல் சாதனைக்கு நிகரான ஒரு சாதனையை இப்படம் நிகழ்த்தியுள்ளதே இந்த பிரசுரத்தை எழுதுவதற்கு முக்கிய காரணம். வெளிநாடுகளில் திரையிடப்படும் படங்களில் அதிக நாட்கள் ஓடி அதிக வசூலையும் அள்ளித் தந்த படம் என்கிற வகையில் 3 IDIOTS சாதனை படைத்துள்ளது. யு.எஸ். பிரிட்டன் மற்றும் மேலை நாடுகளில் வாழும் வெளிநாட்டினர் மற்றும் இந்தியர்கள் அவதாருக்கு அடுத்ததாக தாங்கள் சமீபத்தில் பார்த்த புதிய படம் 3 IDIOTS என்று ஒரு கருத்தெடுப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

கல்வியின் மீது தீராத தாகம் கொண்ட ஒரு சிறுவன் தானும் பள்ளிக்குச் சென்று கல்வி பயில விரும்புகிறான். அதற்காக தான் வேலை பார்க்கும் பணக்கார வீட்டில் படிக்கும் பெரிய இடத்துப் பிள்ளையின் சீருடையை திருட்டுத்தனமாக அணிந்துகொண்டு அவன் படிக்கும் பள்ளியிலேயே சென்றமர்ந்து அங்கு நடத்தப்படும் பாடங்களை கூர்ந்து கவனிக்கிறான். இவனது திருட்டுத்தனத்தை தெரிந்துகொண்ட அந்த பணக்கார வீட்டுச் சிறுவன் அவனது வீட்டுப்பாடங்களை இவன் தலையில் கட்டி எழுதச்சொல்லி விளையாட்டாய் ஊர்சுற்றிகொண்டிருக்க, பலநாள் நடந்துகொண்டிருந்த இந்த திருட்டுப்பாடம் படிக்கும் விஷயம் அந்த பணக்கார சிறுவனின் அப்பாவின் கவனத்திற்கு வருகிறது. அவர் சிறுவனை தண்டிப்பதாக நினைத்து “நீதான் இந்த விஷயத்தை ஆரம்பித்து வைத்தாய்... நீயே இதை முடித்தும் வை...என் மகனின் பெயரில் நீ எதுவரை படிக்கவிருப்பமோ அதுவரை படி... நீ படித்து முடித்ததும் அவனது பெயரில் வழங்கப்படும் கல்விச்சான்றிதழை என்னிடம் தந்துவிட்டு இந்த வீட்டைவிட்டு வெளியேறி கண்காணாத இடத்திற்கு சென்றுவிடு...” என்று ஒரு நூதன தண்டனை தருகிறார். இந்த ஒரு இழையில் பின்னப்பட்ட கதை திரைக்கதை வடிவமைப்பின் காரணமாக முன்பின்னாக நகர்ந்து செல்கிறது. படிப்பின் மீது ஆர்வம் கொண்ட ஏழைச்சிறுவனாக நடித்திருக்கும் ஆமீர்கான் தான் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்கு சிறந்த முறையில் உயிர்கொடுத்திருக்கிறார். படத்தில் அலசுவதற்கு நல்ல விஷயங்கள் நிறைய இருந்தாலும் முதலில் முக்கியமான இரண்டைப் பார்ப்போம்... “யாருடைய பெயரில் கல்வியை கற்றுக்கொள்கிறோம் என்பது முக்கியமில்லை, ஆனால் கல்வி முக்கியம்” என்கிற கருத்தை இந்தப்படம் வலியுறுத்துவதுபோல் தோன்றுகிறது. மேலும் தன்னை ராகிங் செய்யும் சீனியர் மாணவர்களில் ஒருவன் தன் அறைக்கு எதிரே சிறுநீர் கழிக்க முயலும்போது அவனுக்கு “மின்சார ஷாக்” தந்து அலற வைத்து ராகிங் செய்பவர்களை வழிக்குக்கொண்டுவர எந்த முறையையும் கையாளலாம் என்கிற ஒரு விபரீத கருத்தையும் விதைத்திருக்கிறது. இதைப்படிக்கும்போது படத்தில் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்க, நான் ஏதோ தேவையில்லாத ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு அதைப் பிடித்து தொங்குவதைப்போல உங்களுக்கு தோன்றலாம்.

ஷண நேரம்தான் என்றாலும் ஒருவனுக்கு பிறப்புறுப்பில் மின்சாரம் செலுத்துவது என்பது நினைத்துப்பார்க்க முடியாத ஒன்று. (ஈழத் தமிழர்களை சித்ரவதை செய்ய சிங்கள ராணுவம் கையாண்ட பல கொடூர வழிகளில் இதுவும் ஒன்று). திரைப்படம் முடியும் தருவாயில் அதே உத்தியை இரு சிறுவர்கள் வேறொருவரிடம் கையாளுவதை கண்டு ஆமீர்கான் இங்குதான் அருகாமையில் இருக்கிறார் என்பதை அவர்களது நண்பர்கள் உணர்வதாக காட்டுவதிலிருந்து இந்த வகை தாக்குதலின் ஆழத்தை அறியலாம். சினிமாவை காணும் பல தரப்புமக்கள் அதிலும் குறிப்பாக பள்ளிச்சிறுவர்கள் அதில் வரும் விஷயங்களை, காட்சிகளை வெறும் சம்பவங்களாக எடுத்துக்கொண்டால் பரவாயில்லை. “ஓ...இப்படியும் செய்யலாமா...” என யோசித்து விபரீதமாக ஏதாவது முயன்றுவிட்டால் விளைவுகள் பற்றி சொல்லத்தேவையில்லை. ஸ்பைடர்மேன், சக்திமான் போன்ற அமானுஷ்ய கேரக்டர்கள் செய்வதைப்போல முயற்சிசெய்து உயிர்விடும் அல்லது உடல் ஊனமடையும் சிறுவர்களைப்பற்றி ஊடகங்களில் படித்ததை இந்த நேரத்தில் நாம் ஞாபகப்படுத்தி பார்க்க வேண்டும்.

மேலும் இத்தனை அறிவுஜீவித்தனமான ஒரு மாணவன் என்னதான் கல்வியின் மீது தீர்க்கமுடியாத தாகம் கொண்டிருந்தாலும் யாருடைய பெயரிலோ பட்டப்படிப்பை முடித்துவிட்டு அதற்கான பலன்களை தெரிந்தே இன்னொருவரிடம் கொடுத்துவிட்டு எங்கேயோ வேறொரு ஊரில் பள்ளி மாணவர்களுக்கு “சிம்பிள் சைன்ஸ்” சொல்லிக்கொடுக்கும் சயின்டிஸ்ட்டாக இருப்பதை ஜீரணிக்கமுடியவில்லை.

“நாங்கள்லாம் வேலைக்காக படித்தோம். நல்லா படிக்கலேன்னா நல்ல காலேஜ்ல இடம் கிடைக்காது.....நல்ல காலேஜோட சர்டிபிகேட் இல்லன்னா எவனும் வேலை தர மாட்டான்... வேலை இல்லன்னா எவனும் பொண்ணு தரமாட்டான்...பேங்க்ல கிரெடிட் கார்டு, வீட்டு லோன் இப்படி எதுவும் கிடைக்காதேங்கிறதுக்காக படிச்சோம்... ஆனா இவன் படிக்கணுங்கிறத்துக்காக படிச்சிருக்கான்....நினைச்சாலே பெருமையா இருக்கு....” மாதவன் படத்தில் ஆமீர்கானை தேடிச்செல்லும்போது அமீர்கானைப் தனக்குதானே பேசிக்கொள்வது போல படத்தில் வரும் வசனம் இது. வேலைக்காக மட்டும் அதாவது வாழ்நாளிற்கு தேவையான பணம் சம்பாதிக்க ஒரு வேலை வேண்டும், அதைப் பெற்றுத் தர நல்ல கல்விநிலையத்தில் “படித்தார்கள்.” என்று அவர்கள் தருகிற சான்றிதழ் வேண்டும் (நல்ல படிப்பு அல்ல) என்ற எண்ணத்தோடு அலைந்துகொண்டிருக்கும் மாணவர்களுக்கு இந்த படம் நிச்சயம் ஒரு கசப்பு மாத்திரை.

“கற்றல்” என்பது ஒரு தவம். அதை மிகுந்த தன்முனைப்போடு அதிகபட்ச சந்தோஷத்தோடு செய்யும்போதுதான் அவரவர் மூளைத் திறனிற்கும் தகுதிக்கும் ஏற்ப புதிதாக கற்கமுடியும். இல்லையேல் புத்தகத்தில் உள்ளதை மனனம் செய்து உளறிக் கொட்டுகிற மூடர்களாய் மாறிவிடுவோம் என்கிற கருத்தை மிக அழகாக சொல்லியிருக்கிற படமிது. அதனினும் ஒருபடி மேலேபோய் எப்படி கற்பிப்பது என்பதையும் மிக அழகாக விளக்குகிறது இந்தப்படம். “வாழ்க்கை ஒரு ஓட்டப்பந்தயம் நிற்காமல் ஓடிக்கொண்டேயிருங்கள் இல்லையேல் உங்களை ஒருவன் நிச்சயம் ஜெயித்துவிடுவான்” என்று பயமுறுத்தி யாரையோ, எதையோ, எதற்காகவோ வெற்றிகொள்வதே நீங்கள் கற்கும் கல்வியின் நோக்கம் என்கிற அடிப்படையில் மாணவர்களுக்கு கற்பிக்கும்போது பயத்தின் அடிப்படையில் அதை அவர்கள் கற்கிறார்கள். இதற்கு என் வாழ்க்கையிலிருந்தே ஒரு உதாரணம். பள்ளிக்காலத்தில் எனக்கு அமைந்த ஆசிரியர்கள் நான் முற்பிறவியில் செய்த புண்ணியத்தில் விளைவு. ஆனால் அவர்களை வைத்து கேலிச்சித்திரம் வரைவது, அவர்கள் போல நடந்துகாட்டுவது, மிமிக்ரி செய்வது என அவர்களை வைத்து கல்வி கற்பதைத் தவிர மற்ற எல்லாம் கற்றுகொண்டேன்.

வரலாறு மற்றும் புவியியல் பாடங்களுக்கான சதாசிவம் ஆசிரியர் எதையுமே வித்தியாசமாக சொல்லித் தருவதில் வல்லவர். வித்தியாசமாக என்றால்....? இதைப் படிப்பவர்களிடம் ஒரு புவியியல் சம்பந்தமான கேள்வி.. உங்களுக்கு இமயமலையின் உயரம் மீட்டர்களில் எவ்வளவு என்று தெரியுமா? அனேகம் பேருக்குத் தெரிந்திருக்கும்... ஆனால் அதை வெறும் விடையாக நினைவில் வைத்திருப்பீர்கள். சதாசிவம் வாத்தியார் எங்களுக்கு அப்படி நினைவில் வைத்துக்கொள்ள சொல்லித்தரவில்லை. “டேய் பசங்களா.... (அவர் எப்போதும் எல்லோரையும் அன்பாக அப்படித்தான் அழைப்பார், பெண் பிள்ளைகளையும் சேர்த்து) இமயமலையோட உயரம் 8848 மீட்டர். இத மனப்பாடம் பண்ணக்கூடாது... ஏன்னா வேற கணக்கு பாடம் படிக்கும்போது 8488-ஆ, இல்ல 8884-லா அப்பிடின்னு குழம்பிடுவீங்க....எப்பிடி தெரியுமா ஞாபகம் வெச்சுக்கணும்..? ரெண்டு ரெண்டு எட்டா ஏற ஆரம்பிச்சா, நாலு எட்டுல மலை ஏறிடலாம்... எங்க எல்லாரும் சொல்லுங்க..... ரெண்டு ரெண்டு எட்டா ஏற ஆரம்பிச்சா....., நாலே எட்டுல மலை மேல ஏறிடலாம்...” (மனதில் இதை சொல்லிப்பாருங்கள் 8848 என்கிற எண் பளிச்சிடும்)

வளர்ந்து இத்தனை பெரியவர்களாகி சுதந்திரக்காற்றை சுவாசிக்கிற நம்மவர்களுக்கு இன்றளவும் குடியரசு மற்றும் சுதந்திரதின கொண்டாட்டங்களின்போது ஒரு சந்தேகம் வந்துவிடும். விழாவில் வழங்கப்பட்ட கொடியில் எந்த நிறம் கீழே வரும்...? நாம் யோசிப்பதே இல்லை சர்வசாதாரணமாக பக்கத்தில் இருப்பவர்கள் குத்தியிருப்பதை பார்த்து அதேபோல நாமும் சட்டையில் குத்திவிடுவோம். ஆனால் இதை நினைவில் வைக்க சதாசிவம் வாத்தியார் பாடம் எடுத்த பாணியே தனி. “டேய் பசங்களா.... தேசியக்கொடிய எக்காரணம் கொண்டும் தலைகீழா உபயோகிக்கக்கூடாது. அதோட கலர்ஸ் ஆர்டரா ஞாபகம் வெச்சுக்கணும்... ரொம்ப சிம்பிள் எப்பிடி தெரியுமா..? நம்ம ஹெட்மாஸ்டருக்கு தெனம் வீட்ல இருந்து சாப்பாடு வரும்... நீங்களும் பாத்திருப்பீங்க... அவரு தினம் தலைவாழை இலை போட்டு சாப்பிடுறாரு...அதுமேலே சாதம்... அதுமேலே கொழம்பு...மொதல்ல இலை பச்சை...அப்புறம் சாதம் வெள்ளை...கடைசியா சாம்பார் ஆரஞ்சு...இத ஞாபகம் வைச்சுக்கிட்டாலே போதும் என்ன...?” என்று சொல்லி முடிக்க, உடன் படித்த நாகராஜ் என்னும் மாணவன் “அப்ப அவரு சாப்புடற கீரை வடைதான் அசோக சக்கரமா சார்..?” என்று கேட்டானே ஒரு கேள்வி..? அதன்பிறகு அவனை “சோத்தமுக்கி.... சோத்தமுக்கி..” என்று வாத்தியார் திட்டி, டஸ்டரால் அடிக்க, அவன் விலகி கிளாசுக்கு உள்ளேயே ஓட அது ஒரு தனி காமெடிக் கதை. 1993-ல் நான் 10-வது படித்தேன். கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழிந்தும் இன்றளவும் எனக்கு எதில் குழப்பம் வருகிறதோ இல்லையோ இமயமலையின் உயரம் பற்றியும், தேசியக்கொடியின் மேல் கீழ் நிறங்கள் பற்றியும் குழப்பம் வந்ததேயில்லை. பாடப்புத்தகத்தில் உள்ளதைப் போலவே சதாசிவ வாத்தியார் சொல்லிக்கொடுத்திருந்தால் அனேகமாக ஒன்றிரண்டு வருடங்களில் மறந்திருப்பேன்.
மற்றபடி இதில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட பாத்திரத்திற்கேற்ப கச்சிதமாக பொருந்தியிருக்கின்றனர். குறிப்பாக கல்லூரியின் முதல்வராக நடித்திருக்கும் போமன் இரானியின் நடிப்பு மிகக் கச்சிதம். இவ்வளவு செலவு செய்து அண்டவெளியில் எழுத ஒரு பேனா கண்டுபிடித்தற்கு பதிலாக விண்வெளியில் வீரர்கள் பென்சிலை பயன்படுத்தியிருக்கலாமே என்று படத்தில் ஆரம்பத்தில் ஆமீர்கான் கேட்கிற கேள்விக்கு, தன் மகள் மிகுந்த ஆர்ப்பாட்டத்திற்கு இடையே குழந்தை பெற்ற மகிழ்ச்சியோடும், ஆமீர்கான் மாணவனாக இருந்தகொண்டு தனக்கே பாடம் சொல்லிக்கொடுத்துவிட்டானே என்கிற கோபமும் கலந்த உணர்ச்சியில் அதற்கான பதிலை ஆமீரிடம் சொல்லும்போது அழுத்தமாக நம் மனதில் நிற்கிறார். இந்தியில் நிறைய காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களை ஏற்று நடிக்கும் நடிகர்களில் இவரும் முக்கியமானவர்.

கல்வியை ஒரு நிர்ப்பந்தமற்ற, பரீட்சை எழுதவேண்டும் தேர்வில் வெற்றி பெறவேண்டும், வாழ்க்கையில் பொருளீட்ட வேண்டும் என்கிற நெருக்கடியற்ற சூழலில் விளையாட்டாக கற்றால் அது மரணம் வரை நினைவிலிருக்கும். அப்படி கற்றதை வைத்து நாம் வாழ்வதற்கு தேவையான சூழலை உருவாக்கிகொள்ளலாம். மற்றவருக்கும் நாம் கற்றதிலிருந்து பெற்ற அறிவுச் செல்வத்தை அவர்களுக்கு தேவையான விதத்தில் வழங்கலாம் என்கிற உன்னதமான விஷயத்தை கமர்ஷியல் வியாபாரத்திற்கேற்ப சினிமாத்தனத்தோடு சொல்லியிருப்பது இப்படத்தின் மாபெரும் வெற்றிக்குக் காரணம்.

No comments:

Post a Comment

வருகைதந்து வாசித்தமைக்கு நன்றி. தங்களின் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.