Sunday, February 14, 2010

ஹம்பி விஜயநகர சாம்ராஜ்யத்தின் எச்சம் 3

எங்கள் பயணத்தின் இறுதிநாளில் நாங்கள் ஹம்பியின் அருகிலுள்ள ஆனேகுந்தி என்னும் இடத்திற்கு செல்வதாக முடிவு செய்திருந்தோம். விசாரித்துப் பார்த்ததில் ஹம்பியிலிருந்து அந்த இடத்திற்குப் போவதற்கு பரிசலில் போவது மற்றும் தரை வழியாக பயணிப்பது இரண்டுமே ஒரே கால அளவையே எடுத்துக்கொள்ளும் என்பது போல தகவல்கள் வந்தன. இரவு எட்டு மணிக்கு ரயிலில் நாங்கள் பெங்களூரு திரும்ப வேண்டும் என்பதால் போகும்போது பஸ்ஸிலும் திரும்பும்போது பரிசலிலும் வரலாம் என முடிவெடுத்து கிளம்பினோம்.

ஹம்பியிலிருந்து நேராக ஒரே பேருந்தில் ஆனேகுந்தி செல்ல நீண்ட நேரம் காத்திருக்கவேண்டுமென்பதால் ஒரு பேருந்து ஓட்டுனர் ஹோல்கி சென்று அங்கிருந்து ஆனேகுந்தி செல்லுமாறு எங்களுக்கு ஐடியா கொடுத்தார். அங்கிருந்து பஸ் அல்லது வேறு தனியார் வாகனங்களிலும் செல்லலாம் என்றும் அவர் கூறினார். ஹோல்கி அல்லது ஹொல்கி எனப்படும் அந்த இடம் ஹம்பியிலிருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ளது. அதுவரை ஆரவாரமில்லாமல் சென்ற எங்கள் பயணம் ஹோல்கியை அடைந்ததும் சூடு பிடித்தது. நாங்கள் சென்ற அந்த பேருந்து எங்களை இறக்கிவிட்டு மீண்டும் ஹம்பிக்கு திரும்பிகிறது. சுமார் நான்கைந்து பஸ்களில் பயணிக்கவேண்டிய அளவு நபர்கள் எங்களை பஸ்ஸை விட்டு இறங்கவேவிடாமல் தடதடவென பஸ்ஸில் ஏறி இடம்பிடிக்க ஆரம்பித்தனர். அத்தனை பேருக்கும் ஹம்பியில் அப்படி என்ன அவசரவேலையோ...? (இதில் ஒரு வளையல் வியாபாரியின் நிலைமை படு பரிதாபம்…கிட்டத்தட்ட 6 அலலது 7 கட்டு வளையல்களை நசுக்கி பிதுக்கி ஏறிய மக்கள் அவரது மூட்டைக்குள்ளேயே உடைத்துவிட்டனர். அந்த ஆள் நல்ல தரமான கன்னட கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தியும் யாரும் கண்டுகொள்ளவில்லை)

பொதுவாக நம்ம ஊர் பக்கம் பேருந்துப் பயணங்களின் போது அதிக எண்ணிக்கையில் பேருந்துகள் இல்லாத வழித்தடங்களில் மக்கள் சமர்த்தாக துண்டு போட்டு இடம் பிடிப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த ஊரில் பயணிகள் தங்கள் குழந்தைகளை பேருந்தின் ஜன்னல் வழியே உள்ளே புகுத்தி இடம் பிடிக்கிறார்கள். (எப்பிடியெல்லாம் யோசிக்கிறாய்ங்க…) அதில் ஒருவர் நம்ம ஊர்ப்பக்கமிருந்து வந்திருப்பார் போல… மூன்று புகைப்படங்களையும் பாருங்கள்… அவர் இன்னும் வெளியே நின்று துண்டைப் போட்டுக்கொண்டிருக்கிறார், ஆனால் மற்றவர்கள் சாமர்த்தியமாக அவர் முயன்ற இடத்தையும் சேர்த்து பிடித்துவிட்டார்கள்.

எங்களுக்கு இதுபோன்ற முயற்சிகளில் உண்மையிலேயே உஷார் போதவில்லை என்பதால் நானும் நண்பரும் அந்த ஓட்டுனர் சொன்ன தனியார் வாகனங்களில் செல்ல எத்தனித்தோம்.

அவர்களும் கிட்டத்தட்ட இதேபோல மக்களை புளிமூட்டைகளாக வண்டியில் அடைத்து ஏற்றிச்செல்கின்றனர். நாங்கள் பயணித்த ஜீப் டிரைவரிடம் அதிக பணம் தருவதாக கூறியும் பெண்கள் மட்டும்தான் உள்ளே உட்காரமுடியும், ஆண்களுக்கு கூரைதான் என்றுவிட்டார் கறாராக....(சே...என்ன ஒரு லேடீஸ் சென்டிமெண்ட்...பின்னிட்டீங்கப்பா...) இதைவிட்டால் வேறுமார்க்கமில்லை என்பதால் வேறுவழியின்றி நாங்கள் ஹோல்கியிலிருந்து ஜீப் கூரையில் உட்கார்ந்து ஆனேகுந்தி நோக்கி பயணித்தோம். விவரம் தெரிந்து நான் போன முதல் திரில்லிங்கான பயணம் அது... ஆனால் நான் பயந்ததுபோல திருப்பங்களிலும், வேகத்தடைகளிலும் தாறுமாறாக ஓட்டாமல் மிகவும் நளினமாக (நண்பர் சொன்னது போல மெதுவாக என்றுகூட சொல்லலாம்) ஓட்டிச்சென்றார்.


அங்கே இறங்கியதும் ராகவேந்திரரின் குருவும் மற்ற மத்வ மத ஆச்சாரியர்களும் ஜீவ சமாதி அடைந்த நவ பிருந்தாவனம் அருகில் இருப்பது தெரிய வர, நாங்கள் அதையும் ஆனேகுந்தி மலைமீதிருக்கும் ஹனுமன் ஆலயத்தை மட்டும் பார்த்துவிட்டு விரைந்து திரும்பிவிட முடிவுசெய்தோம். ஏனெனில் இங்கிருக்கும் வாகன வசதிகளை நம்பி எதுவும் செய்வதற்கில்லை. இந்தத்தடத்தில் அரசால் இயக்கப்படும் பஸ்கள் நேரத்திற்கு இயக்கப்படுவதில்லை. அப்படி அவை வந்தாலும் இடம் பிரச்சனை பெறும் பிரச்சனை. மேலும் தனியார் ஆட்டோ மற்றும் ஜீப் வாகன ஓட்டிகள் அன்றைய தினத்திற்கு போதிய வருமானம் வந்துவிட்டால் மதியத்திற்கு மேலேயே தங்கள் வாகனங்களை நிறுத்திவிடுவார்கள் என்றும் கேள்விப்பட்டோம். (ரொம்ப நல்லவய்ங்க...) ஆனால் நவ பிருந்தாவன தரிசனத்திற்கு பிறகு தெய்வ கடாட்சம் போல எங்களுக்கு இரண்டு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைத்தது. திரு.சந்தானம் மற்றும் திரு.முருகேசன் ஆகிய இருவரும் பக்கத்தில் இருக்கும் இரும்புத்தாது உற்பத்தி ஆலையில் பணிபுரிகின்றனர். அவர்களுடன் இணைந்து கொண்ட நாங்கள் பின்னர் பம்பா சரோவர், ஹனுமன் ஆலயம், காளி கோயில் மற்றும் மேலும் சில கோயில்களையும் தரிசித்தோம். (இமாலயத்தில் இருக்கும் மான சரோவர் மற்றும் ராஜஸ்தானில் இருக்கும் புஷ்கர் சரோவர் ஆகியவை போன்ற மிகவும் புண்ணியமான நீர் பம்பா சரோவரின் நீர் என அங்கு கோயிலில் பூஜைகள் செய்யும் சாது ஒருவர் சொன்னார். மேலும் இந்தியாவில் இருக்கும் முக்கியமான ஐந்து புண்ணிய குளங்களில் (பஞ்ச சரோவர்) பம்பா சரோவரும் ஒன்று என்று கூறினார். அந்தக் குளத்து நீரை தலையில் தெளித்துக்கொண்டு குளத்தில் பூத்திருந்த அழகிய வெள்ளத்தாமரைகளை கண்டு ரசித்தோம்.)

பெருந்தன்மையான மனதோடு ஏதோ வழியில்தானே சந்தித்தோம் என்றில்லாமல் அவர்களோடு எங்களையும் காரில் அழைத்துக்கொண்டு எல்லா இடமும் சுற்றிக் காண்பித்த பிறகு, எங்களை மீண்டும் ஹம்பியில் இறக்கிவிட்டனர். அதோடு நில்லாமல் ஹம்பியின் எம்.எல்.ஏவால் புதிதாக கட்டப்பட்டுள்ள கிருஷ்ணரின் தங்க ஆலயம் கண்டிப்பாக காண வேண்டிய ஒன்று என்று கூறி கோயிலின் அருகேயே எங்களை வழியனுப்பி விடைபெற்றனர். இவர்கள் இருவரும் இன்கெரிடிபிள் இண்டியாவால் விளம்பரம் செய்யப்படும் அதிதி தேவோபவ விளம்பரத்தை எங்களுக்கு நடைமுறையில் காட்டினார்கள். திரு.சந்தானம் மற்றும் திரு.முருகேசன் ஆகிய இருவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள். பின்னர் அந்த கிருஷ்ணரின் தங்கக் கோயிலையும் ஆரஅமற தரிசித்துவிட்டு மூட்டை முடிச்சுக்களோடு ரயில் நிலையம் திரும்பி நாங்கள் போக வேண்டிய ரயில் வழக்கம் போல இரண்டு மணிநேரம் தாமதம் என்ற நற்செய்தியோடு எங்கள் ஹம்பி பயணத்தை முடித்துக்கொண்டோம்.

1 comment:

  1. திருமாறன்June 8, 2011 at 11:51 AM

    நல்ல விவரிப்பு. நன்று.

    ReplyDelete

வருகைதந்து வாசித்தமைக்கு நன்றி. தங்களின் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.