Thursday, February 4, 2010

புலி - இந்தியாவின் தேசிய விலங்கை நாம்தான் எப்பாடுபட்டாவது காப்பாற்றவேண்டும்

சமீபமாக தொலைக்காட்சிகளில் 1411 புலிகள் மட்டுமே எஞ்சியிருப்பதாகவும் இவற்றைக் காப்பாற்ற ஏதேனும் செய்யுங்கள், எஸ்.எம்.எஸ் அனுப்புங்கள், வலைப்பூவில் எழுதுங்கள் என்று விளம்பரம் மூலம் கெஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். இந்த விளம்பரங்களில் நடிப்பவர்களுக்கு புலிகளைப் பற்றி எவ்வளவு தூரம் தெரியும் என்பது தெரியவில்லை. நமீதா “கிஸ் கிஸ் கிஸ்கான்” என்று கட்டுமானக் கம்பிகள் விளம்பரத்திற்கு வந்து அதையே வாங்கச் சொல்லி கொஞ்சிவிட்டு போவதுபோல இவர்களும் புலிகளைக் காப்பாற்றுங்கள் என்கின்றனர். இதைப் பார்க்கும்போது இந்தியப் புலிகள் சோறு கிடைக்காமல் சொறி நாயைப் போல ரோட்டில் அலைகிறதா, அவற்றை யாரும் கல்லால் அடித்து கொல்கிறார்களா என்று மண்டையை சொறிய வேண்டியிருக்கிறது.

பொதுவாக வங்காளப்புலி என்று அறியப்படும் புலிகள் ஃபெலிடே குடும்பத்தை சேர்ந்தவை. “பேந்தரா டிக்ரிஸ்” என்கிற உயிரியல் பெயரால் அழைக்கப்படும் இவை மொத்தம் 3000த்திற்கும் மேல் எஞ்சியுள்ளதாக “WILDLIFE PROTECTION SOCIETY OF INDIA” வால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விளம்பரத்தில் 1500க்கும் குறைவாக இருப்பதாக சொல்கிறார்கள். இந்த குழப்பத் தகவல்கள் ஒருபுறம் இருக்க சன் டிவி சேனல்கள் எல்லாவற்றிலும் பிடிவாதமாக ஒலிபரப்பப்படும் "புலி உறுமுது புலி உறுமுது" பாட்டைக்கேட்டு வந்த தலைவலியால் நொந்து போய் டைகர் பாம் வாங்கி நெற்றி முதல் பின் மண்டை வரை தடவிவிட்டு தேமேயென்று தூங்கும் பாமர மக்களிடம் இந்த விளம்பரம் போய்ச் சேர்ந்தால் என்ன மாதிரியான POSITIVE விளைவுகள் ஏற்படும் என்று சத்தியமாக என் மரமண்டைக்கு புரியவில்லை.

ஏகப்பட்ட காடு மற்றும் வனவளங்கள் காக்கும் அமைப்புகளாலும் புலிகள் வேகமாக அழிந்துவரும் வனவிலங்குகளில் ஒன்றாக சேர்க்கப்பட்டிருப்பது என்னவோ உண்மைதான். சமீபத்தில் அமெரிக்காவை சேர்ந்த “FISH & WILDLIFE SERVICES (USFWS)” என்கிற அமைப்பும் இதையே பெரிதாக கூறி எச்சரிக்கை விடுத்திருக்கிறது. (இங்கே மீண்டும் என் மரமண்டையில் ஒரு சந்தேகம்... மீன்கள் பெரும்பாலும் கடலிலும் காடுகளிலுள்ள உள்ள பெரிய ஆறுகளிலும் வாழ்கின்றன... நிலத்தில் வாழும் எல்லா மிருகங்கள் மற்றும் நீரில் வாழும் மீன்கள் இவை இரண்டையும் இணைத்து ஒரு அமைப்பை உருவாக்கி என்ன காம்பினேஷனில் இவர்கள் சர்வீஸ் செய்கிறார்கள்... உங்களுக்கு விவரம் தெரிந்தால் சொல்லவும்)

1892 முதல் 1922 வரை மத்திய அஸ்ஸாம், ஒரிஸ்ஸா மற்றும் பிலாஸ்பூர் காடுகளில் வாழ்ந்த புலிகள் அப்போதைய மன்னர்கள் மற்றும் அரச குடும்பத்தினரால் வேட்டையாடி கொல்லப்பட்டன. அரச குடும்பத்து இளவரசர்களின் வீரத்தை நிரூபிக்கவும், அரச விருந்தினர்களின் பொழுதுபோக்கவும் தாறுமாறாக கொல்லப்பட்ட புலிகளின் எண்ணிக்கை 13450க்கும் மேல். அரச குடும்பத்தினர் மற்றும் சுதந்திரத்திற்கு முன்பு நாட்டை ஆண்டுகொண்டிருந்த நிஜாம்களுக்கு மத்தியில் புலிகளை வேட்டையாட வைக்கப்பட்ட போட்டியில் அதிக புலிகளை கொன்று அவர்கள் வென்ற கோப்பைகளும் பரிசுகளும் இன்றளவும் கொல்கத்தா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதே காலகட்டத்தில் பீகாரில் மட்டும் கொல்லப்பட்ட மிக அரிய வகை வெள்ளைப்புலிகள் 85க்கும் மேல் என்று இன்னொரு புள்ளி (புலி) விவரம் சொல்கிறது. இப்படி மன்னர்களும் அவர்களது வெள்ளைக்கார விருந்தினர்களும் (அன்றைய காலகட்டத்தில் ஆங்கிலேயனை தவிர மன்னர்களுக்கு வேறு யார் விருந்தினர்களாக இருந்திருக்கமுடியும்) ஏகத்துக்கு புலிகளை கொன்றுவிட்டு இன்று வந்து பாமர மக்களிடம் வந்து புலிகளை காப்பாற்றுங்கள் என்று கேட்பது என்ன லாஜிக் என்றே புரியவில்லை.

சைபீரியப்புலிகள், சுமத்ரா புலிகள் மற்றும் வங்காளப்புலிகள் என்று பல வகை இருந்தாலும் காடுகளில் இவற்றின் வாழ்வியல் சூழ்நிலைகளைப் பொறுத்து பொதுவாக இவை பத்திலிருந்து பதினான்கு வருடங்கள் வரை வாழ்கின்றன. அடர்ந்த புல்வெளிகள் திறந்தவெளி நீர்நிலைகள் மற்றும் பாறை இடுக்குகளில் மறைந்து வாழ்ந்து பெரும்பாலும் இரவு நேரங்களில் மட்டுமே வேட்டைக்கு தயாராகும் புலிகளுக்கு நல்ல இரை கிடைத்தால் குறைந்தது ஒரே தடவையில் 35 முதல் 45 கிலோ கறி வரை உண்ணும். மான், பன்றி, எருமை ஆகியவை பொதுவாக புலிகளின் விருப்ப உணவுகள். புலிகளின் விசேஷ கண்ணமைப்பினால் பகலைவிட இரவில் மிக நன்றாக பார்க்க முடியும். ஒப்பிட்டு சொல்வதானால் ஆரோக்கியமான மனிதக்கண்கள் இருட்டில் எந்தளவிற்கு ஒரு பொருளை பார்க்கிறதோ அதைவிட 14 மடங்கு துல்லியமாக பார்க்கமுடியும். இதனாலேயே வேட்டையாட இரவினை தேர்ந்தெடுக்கும் புலி, இரை கிடைக்கவில்லை என்றால் பட்டினி கிடந்துவிடும். தன்னால் ஏற்கனவே கொல்லப்பட்ட அல்லது மற்ற விலங்குகளால் வேட்டையாடப்பட்ட இரையின் எச்சத்தை புலிகள் மிகுந்த பசியோடு இருக்கும்போதும் உண்பதில்லை. (சிங்கம் இந்த விஷயத்தில் நேர்மாறானது. பசியெடுத்தால் சிறு விலங்குகள் அவசரத்திற்கு புதைத்து வைத்த மிச்ச மாமிசத்துண்டுகளைக்கூட தோண்டியெடுத்து சாப்பிட்டுவிடும்).

ஆரோக்கியமான ஆண் புலிகள் அதிகபட்சம் 225 கிலோ மற்றும் பெண்புலிகள் அதிகபட்சம் 145 கிலோ உடல் எடையுடன் இருக்கும். பூனைக்குடும்பத்தை சேர்ந்த விலங்குகளில் இதுதான் மிக அதிக எடை மற்றும் பெரிய விலங்காக கருதப்படுகிறது. மிகச்சிறந்த முறையில் வேட்டையாடக்கூடிய புலிகளின் உடல் மீதுள்ள வரிகள் அவை புதர்களின் ஊடே தங்களை மறைத்துக்கொள்ள உதவுவதைத் தவிர இந்தக் கோடுகளில் மூலம் இவற்றுக்கு வேறு என்னன்ன உபயோகம் உள்ளது என்பது ஆராய்ச்சியாளர்களுக்கு இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது. மனிதனுக்கு இருக்கும் கைவிரல் ரேகைகளை போலவே ஒவ்வொரு புலியின் உடல் கோடுகளும் தனித்துவம் வாய்ந்தது.

உடல் ரீதியாக குட்டி போடும் தகுதி பெண் புலிகளுக்கு 3 முதல் 4 வயதிலும், இனப்பெருக்கம் செய்வதற்கான உடல் தகுதி மற்றும் விந்து உற்பத்தி ஆண் புலிகளுக்கு 4 முதல் 5 வயதிலும் ஏற்படுகிறது. எல்லாம் மிகச்சரியாக இருந்தால் கருவுற்ற பெண்புலி 90 முதல் 110 நாட்கள்வரை கருவுற்று 2முதல்4 குட்டிகள் வரை ஈனும். பொதுவாக புலிகள் மிகுந்த கூச்ச சுபாவம் கொண்டவை மேலும் இணைக்காலங்கள் தவிர மற்ற பெண் புலிகளை தன்னிடத்தில் அண்ட விடாதவை. வனவிலங்கு ஆய்வாளர்கள் கூட வருடாந்திர அடிப்படையில் இவற்றை நேரடியாக பார்த்து எண்ணிக்கையை சரிபார்ப்பது மிகமிகக் கடினம். பாதங்களின் அளவு, மறைத்து வைக்கப்பட்ட கேமிராக்களில் படம் பிடிக்கப்பட்ட புலிகளின் உடலில் உள்ள கோடுகள் என்று சுமாராக 85 சதவீதம் வளர்ச்சி விகிதத்தை கணக்கிடுகிறார்கள். ஏற்கனவே சொன்னது போல காடுகளில் இவை 10 முதல் 14 வருடம் வாழமுடிகிறது. ஆனால் உயிரியல் பூங்காக்களில் சரியான பராமரிப்பின் கீழ் இவை இரைட்டை ஆயுளுடன் வாழ்ந்து குட்டிகளையும் அதிகளவில் ஈனுகின்றன என்பதை ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே தனியார் தொலைபேசி நிறுவனங்களுக்கு உண்மையில் புலிகளின் மேல் அக்கறை இருந்தால் தேவையில்லாமல் பிரபலங்களுக்கு காசு கொடுத்து விளம்பரத்தின் மூலம் பணத்தை இறைக்காமல் அந்தப் பணத்தை இந்திய அரசிடம் ஒப்படைத்தால் ஏற்கனவே செய்யப்பட்டுகொண்டிருக்கும் பணிகளுக்கு மேலும் அது உதவியாக அமையும். இன்னமும் இதை மக்களின் உதவியோடுதான் செய்ய வேண்டும் என்று தனியார் தொலைபேசி நிறுவனங்கள் தீவிரமாக ஆசைப்பட்டால் SAVE TIGER என்று அரசு எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பினால் கழிக்கப்படும் தொகை அரசிடம் சேர்க்கப்படும் என்று தெளிவாக விளம்பரப்படுத்தினால் மக்கள் தங்களால் முடிந்ததை செய்வார்கள். ஏற்கனவே மானாட மயிலாடவிற்கும் டீலா நோடீலாவிற்கும் நூற்றுக்கணக்கில் குறுஞ்செய்தி அனுப்பி பணத்தை இறைத்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு தமிழனும் உண்மையில் நம் தேசிய விலங்கின் மீது துளியளவேனும் ஆர்வம் இருந்தால் நிச்சயம் இதைச்செய்வான்.

1 comment:

  1. அருமையான,மிகவும் அவசியமான கட்டுரை.
    புலிகள் வசிக்கும் காடுகளுக்கு அருகாமையில் வசிக்கும் மனிதர்களே இந்த விஷயத்தில் அதிகம் உதவ முடியும்.
    காடுகளின் பரப்பளவை குறையாமல் பார்த்துக் கொள்வது,காடுகளில், மரங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது,புலிகளுக்கு தாகம் தீர்க்கும் நீர்நிலைகளை வற்றாமல் பார்த்துக் கொள்வது,புலிகளின் உணவான மான் முதலான உயிரினங்களின் எண்ணிக்கை குறையாமல் பார்த்துக் கொள்வது,அத்துமீறி காட்டை நாசம் செய்பவர்களுக்கு அதிக தண்டனை வழங்குவது, புலித்தோல் மற்றும், புலியின் மூலம் தயாரிக்கப்படும் எந்தப் பொருளை விற்பவர்களுக்கும்,வாங்குபவர்களுக்கும், அதிக தண்டனை கொடுப்பது,wildlife conservation க்கு அதிகப் பணம் ஒதுக்கி, அதை முறையாக வன மற்றும் வன உயிரிகள் பாதுகாப்புக்குப் பயன்படுத்துவது என்று நிறைய செய்யவேண்டியுள்ளது.
    NGO-க்கள்,அரசு, காடுகளின் அருகில் குடியிருக்கும் மக்களுக்கு அருகி வரும் புலியினம் எப்படி நம் உணவுச்சங்கிலியிலும்,(Food Chain)சுற்றுப்புற சூழ்நிலைத் தகவமைப்பிலும் அதீத பாதிப்புகள் ஏற்படும் என்றும்,இதைத் தவிர்க்க, அவர்கள் அன்றாட வாழ்க்கையில் என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றியும் குறும்படங்கள் மூலம் விளக்கலாம்

    ReplyDelete

வருகைதந்து வாசித்தமைக்கு நன்றி. தங்களின் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.