Saturday, February 6, 2010

எனக்கு பிடித்த கவிதைகள் (பிரசுரமானவை)

2004 முதல் 2005 வரை வார இதழ்களிலும் நாளேடுகளிலும் பிரசுரமான எனது கவிதைகள் சில இங்கே மறுபிரசுமாகிறது உங்கள் பார்வைக்காக..

அல்பட்ராஸ்

கடலெனதுலகு.
மீனெனதுண்டி.
வளியென்பாதை.
மிகநீளமென்னுடல்.
பறப்பது பயணம்.
மிதத்தலோய்வு.
நாளெல்லாமின்பம்.
பறவையெனப் பிறந்திட்டால்......

முரண்


மதிய உணவு முடிந்ததும்
செரிமான முறை பற்றிய
செய்முறைப் பாடம் நடந்தது
உயிரியல் ஆய்வுக்கூடத்தில்
ஏசுநாதர் ஆகியிருந்த எலி வயிற்றில்....

வலித்த மனதில் வந்து வந்து
அறைந்தது தமிழ் வாத்தியார்
காலையில் நடத்திய வரிகள்.
பிற உயிரும் தம்முயிரென
எண்ணல் வேண்டும்.


ஹைக்கூ

தவறி விழுந்து இறந்தான்
சாரத்தின் மீதிருந்து...,
காப்பீடு விளம்பரம் எழுதியவன்.

ஹேண்டி கேமராவில் துல்லியமாய்ப்
பதிவானது ஜல்லிக்கட்டில்
இளைஞன் வயிறு கிழிவது.....


எரிந்தது நாலுநாள் பசித்தீ வயிற்றில்....
சுவரொட்டியில் அன்னதான செய்தி.
விலாசம் தின்னப்பட்டிருந்தது மாடுகளால்.


ஏறி இறங்கி ஓடுகிறது கடல் நண்டு
சன்பாத் எடுக்கும் பெண்கள் மீது
பலூனோடு சிறுவன் துரத்தியதால்.....


பிடிக்கிறதோ இல்லையோ
தினமும் வாங்கித் தீரவேண்டியிருக்கிறது
கண்டக்டரின் எச்சில் டிக்கெட்டை...


விரட்ட முடியாது காகத்தைப் போல
அதன் அறிவிப்பைத் தொடர்ந்து
வீடு வந்த உறவினர்களை....


தின நிகழ்வுகள் பதிவாகவில்லை
ஜனவரிப் பக்கங்களில்....
இலவச டைரி.


அமைதிக்கான நோபல் பரிசை
பெற வந்தார் பிரமுகர்
ஆயுத வீரர்கள் புடை சுழ...


நல்ல கனமாக இருந்தது
அந்த புத்தகத் தொகுப்பு
பூக்களைப் பற்றியது......

No comments:

Post a Comment

வருகைதந்து வாசித்தமைக்கு நன்றி. தங்களின் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.