Thursday, February 18, 2010

அழியாப் புகழ்பெற்ற அபூர்வ புகைப்படங்கள் (FAMOUS PHOTOS)

ஒரு சிறந்த புகைப்படம் எடுப்பதென்பது உண்மையிலேயே ஒரு கலைதான் என்பதை மறுப்பதற்கில்லை. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான புகைப்படக் கலைஞர்கள் இருப்பினும், அவர்களில் பெரும்பான்மையானவர்கள் தொழில்முறை புகைப்படக்கலைஞர்களாக இருக்கிறார்கள். அதாவது தாங்கள் கற்ற அந்த வித்தையை வைத்து திருமணம், பிறந்தநாள் விழா போன்ற வைபவங்களில் புகைப்படங்கள் எடுத்து அதன்மூலம் தங்களை ஒரு தொழில்முறை புகைப்படதாரர்களாக பிரஸ்தாபித்துக்கொள்கிறார்கள். சமூகத்தில் கௌரவமான ஒரு தொழில் செய்பவர்கள் என்கிற வட்டத்திற்குள் இவர்கள் வந்தாலும் தொழில் ரீதியாக இவர்கள் காடுகளிலும் இயற்கை சூழ்ந்த வனங்களிலும் மிருகங்களின் வாழ்வியல் முறையை அதன் சூழலிலேயே படமெடுக்க முயலும் WILDLIFE PHOTOGRAPHER-களை போல பெரிதாக மெனக்கெடத்தேவையில்லை. காடுகளில் மிருகங்களை படமெடுப்பது உண்மையிலேயே சவாலான விஷயம். பலநாட்கள் பகலிரவு பாராமல் மரங்களில் அமைக்கப்பட்ட கூடாரங்களில் தங்கி, குறைவாக உண்டு (அதிகம் சாப்பிட்டால், தண்ணீர் குடித்தால் நமது கழிவுகளை அகற்ற மரத்தின்மீதிருந்து இறங்கநேரிடும். தவிர நாமே நம் கழிவுகளின் மூலம் வேட்டையாடும் மிருகங்களுக்கு நம் இருப்பிடத்தை காட்டிக்கொடுத்ததுபோலாகிவிடும்) சமயத்தில் அட்டை மற்றும் விஷவண்டுகளின் கடிக்கும் ஆளாக நேரிடும்.

பொங்கி வெடிக்கின்ற எரிமலைகளைப் படமெடுப்பது, போர்ச்சூழல், மத,இனக்கலவரங்கள், அகதிகள் முகாம்களில் படமெடுப்பது போன்ற உயிராபத்து நிறைந்த தருணங்களிலும் தனக்கே நிறைவு தருகிற ஒரே ஒரு சிறந்த புகைப்படத்தை எடுத்துவிடமாட்டோமா என்று பசி, தூக்கம், குளியல் என எல்லாம் மறந்து தன்னை வருத்திக்கொண்டு அலைகிற மற்ற புகைப்படக்காரர்களுக்கும் இவர்களுக்கும் சமூக அந்தஸ்தில் பெரும் வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது. 


 

மேலே உள்ள புகைப்படம் 1984-ம் வருடம் ஸ்டீவ் மெக்காரி (STEVE McCURRY) என்கிற அமெரிக்கரால் எடுக்கப்பட்டது. அப்போது நடந்துகொண்டிருந்த போரில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள ஆப்கானிய மக்கள், பாகிஸ்தான் எல்லையில் முகாம்களை அமைத்து அதில் தங்கியிருக்க, போர்ச்சூழலை படம் பிடிக்க சென்ற ஸ்டீவ் மெக்காரி, ஏதோ ஒரு முகாமில் இந்த 17 வயது சிறுமியை படம் பிடித்து சென்றுவிட்டார். NATIONAL GEOGRAPHIC குழுமத்தின் புகைப்படக் கலைஞரான அவர் பின்பு தன்னுடைய இருப்பிடத்திற்கு சென்று இந்த புகைப்படத்தினை பிராஸஸிங் செய்து பார்த்ததும் அந்தப்பெண்ணின் கடல்பச்சை நிறக் கண்கள் அவரை ஏதோ செய்தது. மேலும் தன்னை தன் அனுமதியில்லாமல் யாரோ ஒருவன் போட்டோ எடுக்கிறானே என்கிற ஒரு கோபமும் அந்தக் கண்களில் தெரிய, அவர் தன் குழுவிடம் இதை சமர்ப்பித்துவிட்டு அடுத்த வேலையை பார்க்கப்போய்விட்டார்.

1985 ஜூன் மாதம் NATIONAL GEOGRAPHIC புத்தகத்தின் அட்டையில் போர் செய்திகளோடு இந்த பெண்ணின் புகைப்படமும் வெளியானது. ஏராளமானவர்கள் அந்தப் புகைப்படம் குறித்தும் முக்கியமாக அவளது கண்கள் குறித்தும் அதிலுள்ள ஏதோ ஒரு இனம் புரியாத மிரட்சி குறித்தும் எக்கச்சக்க பாராட்டுக்களை NATIONAL GEOGRAPHIC குழுமத்திடம் தெரிவித்தனர். கிட்டத்தட்ட 17 வருடங்கள் இது அப்படியே கிடப்பில் கிடக்க, 2002-ம் ஆண்டு NGC குழுமத்தினர் ஸ்டீவ் மெக்காரியின் துணையோடு அந்த பெண்ணை தேடத்தொடங்கினர். அந்தப் பெண்ணின் பெயர்கூடத் தெரியாமல் எங்கெங்கோ தேடியும் கிடைக்காமல் மூன்று மாதங்கள் அலைந்து கடைசியில் அவளை ஆப்கானிஸ்தானிலிருந்து 8 மணிநேரம் பயணித்தால் வரும் தோராபோரா மலையடிவாரத்தில் கண்டுபிடித்தனர். இதற்கிடையே இரண்டு மூன்று பெண்கள் இவள்தான் அவள் என்று ஸ்டீவ் மெக்காரியிடம் காட்டப்பட்டனர். அவர்கள் கண்களை ஊடுருவிப் பார்த்த அவர் இவள் அவளில்லை என்று மறுத்துவிட்டார். ஆப்கானிஸ்தானின் “பஷ்துன்” இன பழங்குடிப் பெண்ணான அவள் பெயர் ஷர்பத் குலா (SHARBAT GULA). 17 வருடங்களுக்கு முன் தன் புகைப்படம் உலகப்புகழ்பெற்ற புத்தகத்தின் அட்டையில் பிரசுமாகியிருப்பதும், இத்தனை வருடங்களாக உலகத்தினர் மத்தியில் தான் பெயரின்றி வெறும் “AFGHAN GIRL” என்று அறியப்பட்டிருப்பதும் அவளுக்கு சுத்தமாக தெரிந்திருக்கவில்லை. இத்தனை தூரம் தன்னைத்தேடி வந்ததற்கு ஸ்டீவ் மெக்காரியிடம் நன்றி தெரிவித்த அவள், அன்று புகைப்படம் எடுத்தபோது கோபத்துடன் பார்த்தற்காக வருத்தம் தெரிவித்தவள், வேண்டுமானால் இப்போது மீண்டுமொருமுறை புகைப்படம் எடுத்துக்கொள்ளுங்கள் என்று அனுமதிக்க, அவளது சமீபத்திய புகைப்படம் மறுபடியும் NATIONAL GEOGRAPHIC புத்தகத்தின் அட்டையில் 2002 ஏப்ரலில் வெளியானது. போகும்முன்னர் அவள் ஸ்டீவ்விடம் சொன்ன முக்கிய விஷயம்: அவள் வாழ்நாளில் இந்த இரண்டு படங்கள் தவிர அவள் புகைப்படங்களே எடுத்துக்கொண்டதில்லையாம்.....ஒன்று அவளைக் கேட்காமல் எடுத்தது. மற்றது அவளின் விருப்பத்தோடு....  


பச்சைப்பசேல் புல்வெளிகள், பனிபடர்ந்த அதிகாலை நேரக்காடுகள், ரம்மியமாய் பூத்துக்குலுங்கும் மலர்க்கொத்துக்கள், வைன் தயாரிக்க ஏக்கர் கணக்கில் வளர்க்கப்படும் திராட்சைத்தோட்டங்கள், கடுங்குளிரில் உறைந்த ஏரிகள்...... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். பொதுவாக BLISS எனப்படும் வகையறாக்களை (இதற்கு LANDSCAPE என்று இன்னொரு பெயரும் உண்டு) சேர்ந்த இந்த வகைப் படங்களை எடுப்பதில் சார்லஸ் ஓரியர் (CHARLES O’REAR) கில்லாடி. இவர் எடுத்த ஏகப்பட்ட படங்கள் புகைப்பட உலகில் படுபிரபலம். அதில் ஒன்றுதான் மேலே நீங்கள் பார்ப்பது... “அட இது விண்டோஸ் XP-யோட டெஸ்க்டாப்ல எல்லா சிஸ்டத்துலயும் வால்பேப்பரா இருக்குமே” என்கிறீர்களா... புத்திசாலி நீங்க....இது அதுவேதான். நீல வானின் பின்ணனியில் STRATOCUMULUS வகையைச் சேர்ந்த மேகக் கூட்டங்கள் மிதந்து செல்ல, பச்சைப்பசேல் என்றிருக்கும் இந்தப் புல்வெளிப்பிரதேசம் கலிபோர்னியாவின் சொனோமா பள்ளத்தாக்கில் (SONOMA VALLEY) இருக்கிறது. இந்தப்படம் MICROSOFT நிறுவனத்தை வெகுவாக கவர்ந்துவிட 2.75 மில்லியன் அமெரிக்க டாலர்களை கொட்டிக்கொடுத்து இதைவாங்கிவிட்டனர். (ஒரே வார்த்தை....ஓஹோன்னு வாழ்க்கை மாதிரி இது ஒரே கிளிக்....ஓஹோன்னு காசு.)
  
  


1994-ம் ஆண்டு கெவின் கார்ட்டரால் (KEVIN CARTER) எடுக்கப்பட்ட இந்தப்புகைப்படம் அந்த ஆண்டின் புலிட்சர் (PULITZER) பரிசினை வென்றது. (புகைப்படக்காரர்களுக்கு புலிட்சர் என்பது ஆஸ்கரைப்போல...) சூடான் நாட்டின் கடும் பஞ்சத்தை உலகின் கன்னத்தில் அறைந்து சொன்ன இந்தப்புகைப்படத்தில் ஒரு சிறுமி பலமாதம் பட்டினி கிடந்து உடலில் இருக்கும் கடைசி உயிர்ச்சத்தை திரட்டி ஒரு கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் நிவாரண முகாம் நோக்கி உணவுக்காக மிக மெதுவாக நகர்ந்துகொண்டிருக்கிறாள். அவள் எப்போது இறப்பாள் அவளை எப்போது கொத்தித் தின்னலாம் என்று சில அடிகள் தள்ளி ஒரு கழுகு காத்திருக்கிறது. அதன்பிறது இந்தச்சிறுமி என்ன ஆனாள் என்பது யாருக்கும் தெரியாது. 34 வயதான கெவின்கார்ட்டர் இந்த புகைப்படம் எடுத்த வேளையில் தன்னிடமிருந்த சில பிஸ்கட் துண்டங்களை அந்தக் குழந்தைக்கு தரலாம் என நினைத்து பின் ஏதோ காரணத்தால் அந்த இடத்தைவிட்டுசென்று விட்டார். பரிசை வென்றபிறகு அந்த குழந்தைக்கு தான் எந்தவொரு உதவியும் செய்யாமல் விட்டுவிட்டோமே என்கிற மிகுந்த மனஉளைச்சலின் காரணமாக மூன்று மாதம் கழித்து தற்கொலை செய்துகொண்டார்.1972 ஜூன் 8 சிறுமி கிம்புக்கிற்கு மிகவும் மோசமான நாள். வியட்நாம் போரின்போது அமெரிக்க ராணுவப்படைகள் கிட்டத்தட்ட 6000 விமானத்திலிருந்து திராங்பாங் (TRANG BANG) கிராமத்தின் மீது குண்டு மழை பொழிய, அதிலிருந்து தப்பி ஓடிய கிம் புக் (KIM PHUC) கிட்டத்தட்ட மரணத்தின் வாயிலிருந்து மீண்டுவந்தாள் என்றே சொல்லலாம். ராணுவம் வீசிய நாபாம் வகை குண்டுகள் ஒருவகை கொழகொழப்பான “கேஸோலின் ஜெல்லி” வகையைச் சேர்ந்தது. வெடித்துச்சிதறியதும் சுற்றியிருக்கும் எல்லா பொருட்களின் மீதும் படர்ந்து நெருப்பை உண்டாக்குவது, காற்றில் திடீரென கடும் வெப்பத்தை கடத்துவது இது இரண்டும் இந்த குண்டின் ஸ்பெஷல். 9 வயதான கிம்மின் உடைகள் கடும் வெப்பத்தில் பற்றியெரிய அவளது உடைகள் அனைத்தும் அந்த வெப்பத்தில் பொசுங்கிவிட, நிர்வாணமாய் அவள் ஓடி வரும் இந்தக்காட்சி உலக மக்களை உலுக்கியெடுத்தது. போரின் உச்சக்கட்ட அவலத்தை சொன்ன இந்தப் புகைப்படத்தை எடுத்த நிக் உட் (NICK UT) அந்தச்சிறுமி தன்னை நோக்கித்தான் ஓடிவருகிறாள் என்பதை உணர்ந்ததும் கேமராவை கீழே போட்டுவிட்டு, அப்படியே அவளை அள்ளி சற்று தூரம் ஓடிச்சென்று அருகே இருந்த ஆம்புலன்ஸில் அவளை ஏற்றிவிட்டு தனது கைகளையும் உடைகளையும் பார்த்தவர் அதிர்ந்துவிட்டார். காரணம் அவரது உடலெங்கும் கிம்மின் பொசுங்கிய சதைத்துணுக்குகளும் தோல் துண்டுகளும் ஒட்டிக்கொண்டிருந்தன.

சின்னப் பெண் என்பதால் குண்டு வீச்சில் ஏற்பட்ட திடீர் வெப்பம் அந்தப்பெண்ணின் உடைகளை மட்டும் பொசுக்காமல் அவளது உடல் முழுவதும் தோலின் முதல் இரண்டு அடுக்குகளை (தோல் மொத்தம் ஐந்து அடுக்குகள் கொண்டது) முற்றிலுமாக பொசுக்கிவிட்டது. இன்று கிம் திருமணமாகி ஒரு குழந்தையுடன் நலமாக இருக்கிறார் என்றாலும் உடலில் பல்வேறு உபாதைகளை சுமந்து கொண்டு (தோலின் வியர்வை சுரப்பிகள் அனைத்தும் பொசுங்கிவிட்டதால் அவருடைய உடலில் எந்தப்பகுதியிலிருந்தும் வியர்வையே வெளியேறாது) போரின் கோரமுகத்தின் வாழும் சாட்சியாய் இருப்பது உண்மையிலேயே சோகமானது. இத்தனை தூரம் பாதிக்கப்பட்டும் கிம் ஒன்றும் சும்மாயில்லை. வியட்நாம் போரில் பாதிக்கப்பட்டோர் சார்பாக அமெரிக்காவிற்கு எதிராக போர் தொடுத்து அவர்களுக்கு இழப்பீடு வாங்கித்தருவது மற்றும் போர் அபாயங்களை உலகிற்கு தெரிவிக்க போர் தொடங்க முனையும் நாடுகளுக்கு சென்று அரசிடம் பேசுவது என்று உலக அமைதிக்காக சுற்றிக்கொண்டேயிருக்கிறார்.அதே வியட்நாமில் 1963-ம் ஒரு ஜூன் மாதத்தில் நெருக்கடியான சாய்கோன் நகர வீதியில் புத்த பிக்கு ஒருவர் தன்னைத்தானே தீயில் மாய்த்துக்கொண்டது உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மால்கம் பிரவுன் (MALCOLM BROWNE) எடுத்த இந்தப் புகைப்படம் வியட்நாம் அரசின் அடக்குமுறை ஆட்சியை உலகிற்கு அழுத்தமாக சொன்னது. அப்போதைய வியட்நாம் அரசு கத்தோலிக்க மதத்தினை தன் நாட்டில் பெருமளவு வளர்த்தெடுக்க ஏகப்பட்ட முயற்சிகள் செய்தது. முக்கிய காரணம் மதமாற்றத்தின் பின்னணியில் குவியும் வெளிநாட்டுப்பணம் மற்றும் முதலீடுகள். கத்தோலிக்க மதத்தினை பரப்பும் ஆலயங்களுக்கு வழங்கப்படும் அதே மரியாதையும் உரிமையும் புத்த மடாலயங்களுக்கு வழங்கப்படுவதில்லை. மேலும் தேவையில்லாமல் புத்த மதம் பரப்பப்படுவதை விரும்பாத அன்றைய வியட்நாம் அரசு அதன் மடாலயங்களில் புத்தமதத்தை குறிக்கும் வகையில் பறக்கவிடப்பட்டிருந்த கொடிக்கும் தடைவிதித்திருந்தது. புத்தமதத் துறவிகள் கத்தோலிக்கப் பாதிரியார்களாக மாறவேண்டும் அவர்களும் அந்த மதத்தை போதித்து வளர்க்கவேண்டும் என ஏகப்பட்ட சித்ரவதைகள். இதையெல்லாம் கண்டிக்கும் வகையில் திக்குவாங் டக் (THICH QUANG DUC) என்கிற அந்த 33 வயது புத்த பிக்கு தன்னையே தீயில் மாய்த்துக்கொண்டார்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அன்றைய நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் நிருபரான டேவிட் ஹால்பர்ஸ்டாம் (DAVID HALBERSTAM) தான் பார்த்ததை இப்படி விளக்குகிறார். “நான் பார்த்துக்கொண்டிருக்கும் காட்சி நிஜம்தானா என்பதை உறுதி செய்ய இன்னொருமுறை கண்ணை கசக்கி பார்த்தேன். முதல்முறை பார்த்ததைவிட அது இன்னும் அதிக அதிர்ச்சியை தந்தது. ஒரு மனிதன் தரையில் சம்மணமிட்ட நிலையில் எரிந்துகொண்டிருக்கிறான். அவனது உடலும் உடையும் நெருப்பில் எரிந்து சுருங்குவதை கண்டேன். திடீரென்று காற்றில் மாமிசம் எரியும் வாசம் எல்லா இடத்திற்கும் வேகமாகப் பரவியது. துரதிர்ஷ்டவசமாக மனிதனின் உடல் மிகவேகமாக எரியும் என்கிற உண்மை என் மூளையில் உரைத்தது. என் பின்னால் ஏராளமான புத்த பிக்குகளும் மற்ற சாமானியர்களும் ஓடி வருவதை உணர்ந்தேன். அதிகபட்ச அதிர்ச்சியால் என்னால் அவரைக்காப்பாற்றுங்கள் என்று அலறக்கூட முடியவில்லை. என்ன நடக்கிறது, ஏன் நடக்கிறது, எப்படி இதைத் தடுப்பது என்று யோசித்து சுதாரிப்பதற்குள்ளாக அவர் முழுவதும் எரிந்துவிட்டார். ஆனால் எரிந்து கொண்டிருந்த அந்த பிக்கு தனது உடலில் ஒரு சிறு அசைவைக்கூட ஏற்படுத்தவில்லை. அவரது சவரம் செய்யப்பட்ட மண்டை கறுத்துப்போகும் அளவிற்கு எரியும்போதும் அவரிடமிருந்து ஒரு சின்ன முனகல் சத்தம் கூட வெளியேறவில்லை. முடிவில் முழுவதுமாக எரிந்து பின்பக்கமாக சாயும்போது அவர் கடைசியாக ஒருமுறை பெருமூச்சு விட்டதை பார்த்தேன்.“ என்ன ஒரு மனோதிடமும், நெஞ்சுரமும் இருந்தால் இப்படியொரு அமைதியான அதுவும் மிகமிக வலிமையான எதிர்ப்பை காட்ட முடியும்...? இவரைப் பின்தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் மேலும் சில புத்த பிக்குகள் இதே முறையைப் பின்பற்றி தங்களது எதிர்ப்பைக் காட்ட வியட்நாமிய அரசு வேறு வழியின்றி தன் கொள்கையிலிருந்து பின்வாங்கியது.

இந்த ஐந்து புகைப்படங்களும் இந்த நூற்றாண்டின் சிறந்த பத்து படங்கள் வரிசையில் முதல் ஐந்தில் இருக்கின்றது. புகைப்படம் எடுப்பதை ஒரு பொழுதுபோக்காக வைத்திருப்பவர்கள் தங்கள் திறமையை மென்மேலும் வளர்ந்துக்கொண்டால் இதைவிட சிறந்த படம் எடுத்து ஒரு நாள் அவர்களும் இந்த வரிசையில் இடம் பெறலாம். இந்தப் பதிப்பினை தொழில்முறை புகைப்படக்கலைஞரான எனது ஆருயிர் நண்பர் திரு.குமரவேலுக்கு அவரது திருமண நிச்சய விழாவின் பரிசாக சமர்ப்பிக்கிறேன்.

4 comments:

 1. நல்லாருக்கு தொகுப்பு... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. மிக மிக மிக அருமையான + பயனுள்ள , வியக்கவைகும் ஒரு பதிவைதந்த உங்களுக்கு நன்றி...

  ReplyDelete
 3. புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
  உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
  ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

  தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

  இவன்
  http://www.bogy.in

  ReplyDelete

வருகைதந்து வாசித்தமைக்கு நன்றி. தங்களின் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.