Wednesday, March 17, 2010

உலக நாடுகளில் சிலவற்றின் தேசியப்பறவைகள்

உலகின் ஒவ்வொரு தேசமும் தங்களுக்கென தனித்துவம் வாய்ந்த விஷயங்களை தேசத்தின் பெருமையான அடையாளங்களாகக் காட்டுகின்றன. தேசிய மலர், தேசிய கீதம், தேசத்தின் மிருகம், ஒரு நாட்டின் பறவை…..இப்படிப் பலப்பல.... இவை அந்த நாட்டின் அழகுணர்ச்சி, பிரத்யேகத்தன்மை, இறையியல், பண்பாடு இன்னும் பற்பல விஷயங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் நமக்கு உணர்த்துவதாக இருக்கின்றன. உதாரணத்திற்கு இந்தியாவின் தேசிய மிருகமான புலியும் தேசியப்பறவையான மயிலும் உடல்ரீதியாக கொண்டுள்ள பல அம்சங்கள் இந்திய மக்களை ஏதோ ஒருவிதத்தில் பிரதிபலிப்பதாக இருக்கிறது. புலியின் கம்பீரமான தோற்றம், வலிமையான வேட்டைத்திறன், வாழ்நாளிற்கும் ஒரே இணையோடு இருப்பது, மயிலின் தேகவனப்பு, கூட்டு வாழ்வுமுறை...... அத்தனை பெரிய உடல் மற்றும் தோகையோடு மயில் முழுத்திறனோடு பறப்பதே பறவையியலாளர்களுக்கு ஆச்சர்யமான விஷயம்தான்.

இவை இரண்டும் இந்தியர்கள் வணங்கும் கடவுளர்களான அம்பிகை, துர்கை மற்றும் முருகன் ஆகியோரது பயண வாகனங்களாக புராண ரீதியில் புனையப்பட்டிருப்பது நம் தேசத்து மக்கள் விலங்குகள் மீது வைத்திருக்கும் நேசத்தைக் காட்டுகிறது. பல ஆயிரம் நூற்றாண்டுகளாக மதங்களை வளர்த்து வந்த பாரத ஆன்மிகவாதிகள் இவை தவிர மற்ற பறவைகளையும் விலங்குகளையும் (மனிதர்களை அண்டி அல்லது சார்ந்து வாழ்பவை), அவைகள் வேட்டையாடப்படுவதையும் அச்சுறுத்தப்படுவதையும் தவிர்க்கும் வண்ணம் தெய்வங்களோடு பிணைத்து வைத்திருப்பது பழங்கால இந்தியர்களின் காடு சார்ந்த விஞ்ஞான அறிவை வெளிப்படுத்துகிறது.

இவை போன்றே உலகின் பலமூலைகளில் தொன்றுதொட்டு நடத்தப்பட்டுவரும் விலங்குகள் மற்றும் பறவைகள் தொடர்பான விழாக்களும் பூஜைகளும் இன்று நமக்கு மூடப்பழக்கவழக்கங்களாக தென்பட்டாலும், அவை ஒரு காலத்தில் ECO BALANCE எனப்படும் சூழலியல் சமன்பாட்டினை மையப்படுத்தி மதரீதியாகவும் இனரீதியாகவும் அப்போதைய மக்களால் தோற்றுவிக்கப்பட்டவை என்பதை நாம் உணரவேண்டும்.

சில உலக நாடுகளின் தேசியப்பறவைகள் மற்றும் அதன் குணாதிசயங்களை பற்றிப் பார்க்கும்போது அந்த நாடுகள் வரலாற்றுக் காலத்தில் கொண்டிருந்த போர்க்குணத்தின் மிச்ச சுவடுகளையும் தற்போது அவர்கள் பறவைகளின் மீது வைத்துள்ள அன்பையும் காட்டுகிறது. பெரும்பாலான நாடுகள் கழுகினை (EAGLE) தங்கள் நாட்டு தேசியப்பறவையாக கொண்டிருப்பது வியப்பான ஒரு ஒற்றுமை. அந்தந்த நாட்டில் வாழும் கழுகினங்களுக்கேற்ப அவற்றினுள் பிரிவுகள், வகைகள் மாறினாலும் இவை அனைத்துமே ACCIPITRIDAE என்கிற பறவையின வகையைச் சேர்ந்தவை. கழுகுகளுக்கு பறவைகளின் அரசன், வான் சிறுத்தை என பல செல்லப்பெயர்கள் உண்டு. இந்தப் பறவைகளுக்கு இருக்கும் பொதுவான ஒரு அம்சம் பார்வைத்திறனிலும், இரையை வேட்டையாடுவதில் உள்ள வேகத்திலும் இவைகளை மிஞ்ச இன்னொரு பறவையினம் பிறந்து வரவேண்டும். 
ஹாலீட்டஸ் ஹோசிபெஃர் (HALIAEETUS VOCIFER) என்றழைக்கப்படும் ஆப்பிரிக்க மீன்தின்னிக் கழுகு ஸாம்பியா, ஸிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளின் தேசியப்பறவையாக இருக்கிறது. உலகின் மூன்று நாடுகளின் தேசியப்பறவை என்கிற பெருமையும் இந்தப்பறவைக்குத்தான். உருவத்தில் மடகாஸ்கர் மீன்தின்னிக் கழுகு மற்றும் வெள்ளைத்தலை மீன்தின்னிக் கழுகுகள் போலவே இவை இருந்தாலும் ஆப்பிரிக்க மீன்தின்னிக் கழுகின் கூரிய வளைந்த அலகுகள் மஞ்சளாகவும் முனையில் கருப்பாகவும் இருப்பதை வைத்து வித்தியாசத்தை உணரலாம். மேலும் இவற்றின் நெஞ்சு தலை மற்றும் வால் பகுதிகள் தூய வெள்ளையில் இருக்கும். தண்ணீர் பரப்புகள் மற்றும் மிகப்பெரிய நீர்நிலைகளின் அருகில் வசிக்கும் இவைகள் வேனிற்காலத்தில் இணை சேரும். இந்த வகைக் கழுகுகள் 3 அல்லது 4 பெண் கழுகுகளுடன் துணை சேர்ந்து வாழும் என்பதால் இரண்டு மூன்று கூடுகளை மரங்களில் கட்டி அவற்றை நிரந்தரமாக அடுத்த இணைக்காலம் வரை பாதுகாக்கும். 1-3 முட்டைகள் இட்டு 42-45 நாட்களில் அடைகாக்கப்பட்ட முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளிவந்துவிடும். தங்கநிறக் கழுகுகள் போலவே இந்த இனத்திலும் உணவிற்காக நடக்கும் சண்டையில் பலவீனமான குட்டி இறந்துவிடும். எட்டு வாரம் வரை பெற்றோர்கள் கொண்டுவந்து தரும் உணவை உண்டு வளர்ந்த குஞ்சுப்பறவை அடுத்த இரு வாரத்தில் தானே இரை தேடிக்கொள்ளும் நிலைக்கு வளர்ந்துவிடும். ஆணைவிட உருவத்திலும் எடையிலும் பெரிதான பெண் பறவைகள் சராசரியாக 3-5 கிலோ எடைகொண்டவையாகவும், ஆணின் சராசரி 2.5 முதல் 4 கிலோவாகவும் இருக்கும். பருவ காலம், உணவுத்தட்டுப்பாடு மற்றும் வனச்சூழலைப் பொறுத்து இவற்றின் ஆயுட்காலம் 8 முதல் 22 ஆண்டுகள் வரை நீடிக்கும். 
ஹாலீட்டஸ் லியுகோசெஃபாலஸ் (HALIAEETUS LEUCOCEPHALUS) வகையினத்தைச் சேர்ந்த வழுக்கைத் தலை கழுகு அமெரிக்காவின் தேசியப்பறவையாகும். மேலும் இது அமெரிக்க அரசு சின்னமாகவும் பயன்படுத்தப்படுகிறது. அரசு வட்டாரங்கள் தவிர்த்து அரசின் அனுமதியின்றி இதை விளம்பரப்படுத்துவது மற்ற காரியங்களுக்காக பயன்படுத்துவது அமெரிக்க அரசின் சட்டப்படி குற்றமாகும். வெள்ளை வால் கழுகு மற்றும் கடற்கழுகு ஆகிய கழுகுகளின் கலப்பினால் பிறந்த இந்த கழுகு பெரும்பாலும் நீர்நிலைகளின் அருகில் கூடு கட்டி வாழும். வளர்ந்த முதிர்ந்த கழுகு அதிகபட்சம் 7 கிலோ எடையுடனும் 3 மீட்டர் நீளம் இறக்கைகள் கொண்டதாகவும் இருக்கும்.

இதன் உணவு பெரும்பாலும் மீன் வகைகளே, ஆனால் இது புதிதாக வேட்டையாடி உண்ணும் பழக்கம் கொண்டது. இறந்த மற்றும் ஏற்கனவே வேட்டையாடிய மீன்களை பெரும்பாலும் உண்ணாது. சாதாரணமாக 60 முதல் 70 கி.மீ வேகத்தில் பறக்கும் இவை 1200 மீட்டர் உயரத்திலிருந்து தண்ணீரின் மேற்பரப்பில் நீந்துகிற மீன்களைப் பார்க்கும் திறன்பெற்றவை. அவை குழுவாக நீந்துவதை பார்த்துவிட்டால் அதிகபட்சம் 130 கி.மீ வேகத்தில் நீரின் மேற்பரப்பை அடைந்து மீனை அதன் வலிய கால்களால் கொத்தித் தூக்கிவிடும். அதிகபட்சம் 4 கிலோ எடையுள்ள மீனை தூக்கிக்கொண்டு 50 கி.மீ வேகத்தில் பறக்கவல்லது. பருவநிலை மாறி தண்ணீர் உறைநிலைக்கு வரும்போது இருப்பிடத்தை மாற்றிக்கொள்ளும் இந்தக்கழுகுகள் அப்போது மட்டும் உணவிற்காக முயல், காட்டுப்பன்றி மற்றும் சில ஊர்வனவற்றைப் பிடித்து உண்ணும்.

நான்கைந்து வயதானதும் இணை சேர்கிற பக்குவத்திற்கு வந்துவிடும் இவை பெரும்பாலும் ஒரே பெண் பறவையுடன்தான் வசிக்கும். 3 அல்லது 4 முட்டைகள் இடும் இவை வனச்சூழலில் அதிகபட்சம் 30 ஆண்டுகள் வரை தாக்குப்பிடித்து வாழும் திறனுள்ளவை.

கழுகின வகைகளிலேயே, ஏன் பறவையினங்களிலேயே இது கட்டும் கூடுதான் மிகப்பெரிய மற்றம் மிக அதிக எடை கொண்டது. சராசரியாக இந்த வகை கழுகுகள் கட்டும் கூடுகள் 12 அடி ஆழமும் 8 அடி விட்டமும் கொண்டவையாக இருக்கும். சுள்ளிகள், மரக்கட்டைகள், சிறு கற்கள் மற்றபிற பொருட்களை கொண்டு இவை 2 மாதத்தில் கட்டுகிற இந்தக்கூடு அதிகபட்சம் 1 டன் வரை எடை கொண்டதாக இருக்கும். மிக உயரமான இடத்தில் கூடு கட்டும் பழக்கம் கொண்ட இப்பறவை பாதுகாப்பு காரணம் தவிர்த்து வேறு என்ன காரணத்திற்காக இவ்வளவு பெரிய கூடு கட்டுகிறது என்பது பறவை ஆராய்ச்சியாளர்களுக்கே இன்னும் புரியவில்லை. மேலும் குளிர்காலத்தில் உணவிற்காக வேறு இருப்பிடம் தேடி இடம்பெயரும் இப்பறவைக்கூட்டம் பெரும்பாலும் பகலில் இடம்பெயரும். அப்படிப் போகும்போது சூரியனிலிருந்து வரும் புறஊதாக்கதிர்களிலிருந்து தங்களைக் காத்துக்கொள்வது, வானில் இருக்கும் காற்றோடைகளை (JET STREAMS) பயன்படுத்தி இலகுவாக பறப்பது என்று இவற்றின் பிரத்யேக திறமைகளும் பறவை ஆராய்ச்சியாளர்களுக்கு பெரும் ஆச்சர்யமான விஷயம். 
மெக்சிகோவின் தேசியப்பறவையான தங்கநிறக் கழுகு (அக்யூலா க்ரிசாட்டஸ்-Aquila chrysaetos), அதிகபட்சம் 240 கி.மீ. வேகத்தில் பறக்கக்கூடியது. இறகுகள் முழுதும் விரிந்த நிலையில் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை 6 முதல் 7அடி நீளம் கொண்ட பறவைகள் இவை. வாழ்நாள் முழுதும் ஒரே துணையுடன் வாழும் இந்தக் கழுகுகள், ஜோடிப்பறவை பிரிந்துவிடுவது மற்றும் இறந்துவிடுவது ஆகிய சந்தர்ப்பங்கள் தவிர்த்து மற்ற பெண் பறவைகளின் துணையை நாடுவதில்லை. இணையைத் தேடி அதனுடன் சேர்ந்தபின் ஆண் பறவை உயரமான மலை இடுக்கிலோ அல்லது அதிக உயரம் கொண்ட மரக்கிளையிலோ கூடு கட்டி பெண் பறவை முட்டையிட வசதி செய்து கொடுத்துவிடும். 1 முதல் 4 முட்டைகள் வரை இடும் பெண் பறவை 40-45 நாட்கள்வரை இதனை அடை காக்கும். குஞ்சு பொறிந்து வெளிவந்த குட்டிகள் தங்களுக்குள் அடித்துக்கொள்ளும். அடுத்த மூன்று மாதத்தில் உணவிற்கான போட்டியிலும் வலியது ஜெயிக்கும் என்கிற அடிப்படையிலும் ஒன்றோ அல்லது இரண்டோ உயிர் பிழைத்து தனியே பறக்க ஆரம்பித்து இரையை தேட ஆரம்பித்துவிடும். பொதுவாக 155 முதல் 180 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட காட்டினை தனியாகவோ குழுவாகவோ தனது எல்லையாக வகுத்துக்கொள்ளும் இந்த இனக்கழுகுகள், Marmots எனப்படும் பெரிய மற்றும் சிறிய வகை அணில்கள், முயல், சில பாம்பு வகைகள் மற்றும் இறந்த விலங்குகளை தனது உணவாக உட்கொள்ளும். கூரிய நகங்களும் வலிய அலகுகளும் கொண்ட இவை 80 கி.மீ. வேகத்தில் பறந்தபடியே முயல், மீன்கள் மற்றும் சிறிய மான் வகைகளை கவ்விப் பறக்கும். (பறவைகளின் கூரிய நகங்கள் அவற்றின் நீளம் மற்றும் அளவினைப்பொறுத்து ஆங்கிலத்தில் TALONS அல்லது CLAWS என்று அழைக்கப்படுகிறது. கொத்தித் தின்னப் பயன்படும் அவற்றின் வளைந்த அல்லது நேரான அலகுகள் BEAKS என்று குறிப்பிடப்படுகின்றன).


பனாமாவின் தேசியப் பறவையான ஹார்ப்பி கழுகுகள் இந்த இனத்தில் பெரிய வகைக்கழுகுகளில் ஒன்று என சொல்லலாம். அமெரிக்கன் ஹார்ப்பி என்றும் அறியப்படுகிற இவை உடல்வாகில் ஸ்டெல்லர் கடல் கழுகுகள் போன்ற தோற்றத்தில் இருக்கும். சட்டென்று பார்த்தால் வித்தியாசம் தெரியாது. கால்களின் நிறம் மற்றும் கழுத்தை சுற்றியிருக்கும் கருப்புப் பட்டை போன்ற இறகுகளின் வண்ணத்தை வைத்து வித்தியாசத்தை கண்டறியலாம். நீர்நிலைகளுக்கு அருகிலும் மழைக்காடுகளிலும் குறிப்பாக காட்டு மரங்களின் மேல் அடுக்குகளில் கூடு கட்டி வாழும் ஹார்ப்பி கழுகுகள் ஆண் பெண் இரண்டும் பெரும்பாலும் ஒரே தோற்றத்தை கொண்டிருக்கும். ஆண் பறவையைவிட பெண் அதிக எடை கொண்டதாகவும், பெரிய கூரிய நகங்கள் கொண்டதாகவும் இருக்கும். இந்த வகைக் கழுகுகளில் ஆணின் சராசரி எடை 3.8 கிலோவிலிருந்து 5.4 வரை இருக்கும். ஆனால் பெண் கழுகுகள் 6.5 கிலோவிலிருந்து 8.6 வரை இருக்கும். ஆணின் அதிகபட்ச நக நீளம் 11 செ.மீ., ஆனால் பெண் கழுகின் அதிகபட்ச நக நீளம் 13 செ.மீ வரை இருக்கும். தங்க நிறக்குழுகுகள் போலவே இவைகளும் இறகுகள் முழுதும் விரிந்த நிலையில் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை 6 முதல் 7அடி நீளம் கொண்டவை. (சமயத்தில் எட்டு அடிகூட இருக்கும்). கிரேக்க புராணத்தில் காற்றுக் கடவுளான ஹாடஸ் மனிதஉடலும் பருந்துத் தலையும் கொண்டவர். அவரது தலை ஹார்ப்பியின் தலையைப்போலவே இருப்பதாக பறவையின ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். 
நிசாட்டஸ் பார்ட்டெல்ஸி (Nisaetus bartelsi) வகையைச் சேர்ந்த ஜாவன் ஹாக் கழுகு இந்தோனேசியா நாட்டின் தேசியப்பறவையாகும். சிறிய ரக கழுகினமான இதில் ஆணும் பெண்ணும் பார்ப்பதற்கு தோற்றத்தில் ஒன்றுபோலவே இருக்கும். படத்தில் உங்களுக்கு இடது பக்கமிருப்பது ஆண் மற்றும் வலமிருப்பது பெண் பறவையாகும். நெஞ்சு பகுதியின் ரோம நிறம் மற்றும் தலையிலிருக்கும் கொண்டை போன்ற இறகுகளை வைத்து மிகவும் உன்னிப்பாக கவனித்துத்தான் வித்தியாசத்தை உணரமுடியும்.

பெரும்பாலும் ஒரே இணையுடன் வாழும் இவைகள் உயரமான மரக்கிளைகளில் கூடுகட்டி ஒன்றல்லது இருமுட்டைகளிடும். உணவுப்பழக்கமும் மற்ற கழுகுகளைப் போலவே முயல் பல்லி மற்றும் சிறிய ரக விலங்குகளை உண்பதுதான் ஆனால் இதன் பிடித்த உணவு பழம் தின்னும் வௌவால்கள். இதனை வேட்டையாடுவது சட்டப்படி குற்றமென்றாலும் இதன் உடலில் இருக்கும் சில மருத்துவ குணங்களுக்காக இவை வேட்டையாடப்படுவதால் அழிந்து வரும் பறவையினங்களில் பட்டியலில் 2005-ல் இது சேர்க்கப்பட்டுள்ளது. 
பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசியப்பறவை பிலிப்பானியக் கழுகு என அறியப்படுகிறது. பிலிப்பானியர்களால் பொதுவாக இது குரங்குதின்னிக் கழுகு என்றே அறியப்படுகிறது. கழுகினங்களுள் இதுவும் பெரிய, உயரமான மற்றும் அரிய வகைக் கழுகாகும். பிதாகோஃபகா ஜெபர்யி PITHECOPHAGA JEFFERYI வகையினத்தை சேர்ந்த இந்த கழுகினை பிலிப்பைன்ஸ் நாட்டில் பனோக் என்றும் அழைக்கின்றனர். 1896-ல் பறவையின ஆராய்ச்சியாளரான ஜான் வைட்ஹெட் என்பவரால் கண்டறியப்பட்ட இந்த இனம் அதன் பின்னரே பறவைகள் பட்டியலில் இடம்பெற்றது.

குரங்கு தின்னிக் கழுகு என்று இது அறியப்பட்டாலும் குறிப்பாக இது குரங்குகளை வேட்டையாடி உண்கிறதா என்பது ஆராய்ச்சி செய்து நிருபிக்கப்படவில்லை. எனினும் மரம் விட்டு மரம் பறப்பதைப்போல தாவும் லெமூர் வகை குரங்குகளை அவை தாவும்போதே வேட்டையாடுவதில் இந்தவகை கழுகுகள் வல்லவை. இந்த வகை லெமூர்கள் குழுவாக இடம்பெயரும்போது கழுகுகள் தங்களுக்குள் குழு அமைத்து செயல்பட்டு அவைகளை வேட்டையாடுவதும் உண்டு. மேலும் 5 கிலோ வரை எடையுள்ள சிறிய வகை நாய் மற்றும் பன்றிகளை 80 கி.மீ. வேகத்தில் பறந்துவந்து கொத்திச்செல்ல வல்லவை.

இதன் அரிதான தன்மையால் இதை வேட்டையாடுவதை தடுத்து சட்டமியற்றி, 1995-ம் ஆண்டு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி திரு.பிடெல் ரமோஸ் என்பவரால் பிலிப்பைன்ஸின் தேசியப்பறவையாக அறிவிக்கப்பட்ட இப்பறவை 1967 முதல் 2007-ம் ஆண்டு வரை பிலிப்பைன்ஸ் நாட்டின் தபால்தலையில் 12 முறை இடம்பெற்றுள்ளது.


 
ஸ்பெயின் நாட்டின் தேசியப் பறவையான SHORT-TOED EAGLE சிர்காட்டஸ் காலிகஸ் (CIRCAETUS GALLICUS) வகையினை சேர்ந்தது. இதன் கால்களின் நீளம் சிறியவை என்பதால் அந்த பெயரிலேயே அழைக்கப்படுகிறது. அடிப்படையில் மிக அமைதியான இப்பறவை பறக்கும்போதும் வேட்டையாடும்போதும் மற்ற சகாக்களிடம் 5 முதல் 9 வகையான விசில் போன்ற சத்தமெழுப்பி தகவல் பரிமாறிக்கொள்ளும். சிறிய வகைக் கழுகுகளான இவை பொதுவாக ஆணும் பெண்ணும் சராசரியாக 1.7 முதல் 2.1 கிலோ வரை எடை கொண்டவையாக இருக்கும். சிறிய வகை பல்லிகள், பாம்பு, முயல் மற்றும் மற்ற சில பறவையினங்களின் முட்டைகள் இவற்றின் உணவாகும். சமயத்தில் உணவு கிடைக்காத போது பெரிய வகை பாம்புகளை வேட்டையாட முயன்று அவற்றோடு இவை ஆக்ரோஷமாக சண்டையிடுவதை பார்க்க மெல்லிய மனது கொண்டவர்கள் பயப்படுவார்கள். பாலைவனம் வறண்ட காடுகள் சதுப்பு நிலங்கள் என சூழ்நிலைக்கேற்ப வாழ்ந்து பழகும் இவை மிக அரிதாக இரண்டு முட்டைகள் இடும். மற்றபடி எப்போதும் ஒன்றுதான். ஆந்தையைப் போல கழுத்தை முழுமையாக திருப்பி பார்க்க இயலும் இவற்றிற்கு ரோமத்திற்குள் புதைந்திருப்பதைப் போல தோற்றம் தரும் கண்கள் மஞ்சளாக இருக்கும், ஆனால் பார்வைத்திறன் மிக அதிகம் (800 மீட்டர் தூரத்தில் புல்வெளியில் உள்ள 20 கிராம் எலியைக்கூட இது பார்த்துவிடும்.) சராசரியாக 15 முதல் 17ஆண்டுகள் வாழும் இவைகளை ஆந்திராவில் உள்ள கவல் வனவிலங்கு காப்பகத்திற்கு சென்றால் பார்க்கலாம். 
வெள்ளை வால் கழுகான ஹாலீட்டஸ் அல்பிசில்லா (HALIAEETUS ALBICILLA), பொதுவாக கடற்கழுகு என்றும் அறியப்படுகிறது. போலந்து மக்கள் அவர்கள் மொழியில் இதை எர்ன் (Erne) என்று அழைக்கிறார்கள். அமெரிக்காவின் தேசியப்பறவையான வழுக்கைத்தலை கழுகினை போலவே இதுவும் கலப்பினத்தில் பிறந்ததுதான். சில ஆராய்ச்சியாளர்கள் இது வழுக்கைத்தலை கழுகிற்கு தம்பிமுறை என்றும் சொல்கிறார்கள். நார்வே நாட்டில் அதிகம் காணப்படும் இந்த இனம் 2009 ஆண்டின் கணக்கெடுப்பின்படி மொத்தம் 11000 ஜோடிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இணை சேரும் காலங்களில் ஸ்காண்டிநேவியா மற்றும் சைபீரியப் பகுதிகளுக்கு குடிபெயரும் இவை திரும்ப நேரும்போது பெரும்பாலும் பருவமாற்றம் மற்றும் மற்ற பெரிய பறவைகளுக்கு இரையாவதால் இவற்றின் எண்ணிக்கை குறைகிறது. இவற்றின் டி.என்.ஏவை பாதுகாப்பது மற்றும் இந்த வகையின ஒத்த பறவையின் டி.என்.ஏவுடன் மரபணு மாற்றம் செய்து இதேவகை புதிய பறவைகளை பிறப்பிப்பது என போலந்து எவ்வளவோ ஆராய்ச்சிகள் செய்துவருகிறது.


 
அழகான கடல் சூழ்ந்த தென்னை மரத்தீவான மொரீஷியஸ் நாட்டின் தேசியப் பறவை டோடோ. ராப்பஸ் குகுலாடஸ் (RAPHUS CUCULLATUS) என்கிற வகையினத்தை சேர்ந்த இந்தப் பறவை புறாக்களைப் போல மிகச்சாதுவானவை. மூன்றடி உயரத்தில் அதிகபட்சமாக 20 கிலோ எடையுடன் பெயருக்கு இறக்கை என்று இருபுறமும் சிறிய பறக்க உதவாத இறக்கைகளை கொண்ட இப்பறவை பழங்கள் மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழக்கூடியது. 17-ம் நூற்றாண்டின் மத்தியில் அல்லது இறுதியில் இந்தப்பறவையினம் முற்றிலுமாக அழிந்துவிட்டது என்பது மிக வேதனையான விஷயம். இறகுகளுக்காகவும் சுவையான கறிக்காகவும் மனித இனத்தால் மிகச்சமீபமாக அழித்து ஒழிக்கப்பட்ட முதல் பறவையினம் என்கிற பெருமையுடன் இன்று இவை எலும்புக்கூடுகளாக அருங்காட்சியகத்தில் வாழ்கின்றன. இதே அஜாக்கிரதையுடன் இன்னும் முந்நூறு வருடங்கள் நாம் நடந்துகொண்டால் 7500-க்கும் அதிகமான பறவைகளும் விலங்குகளும் முற்றிலும் அழிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் சேர்ந்துவிடும் என்று விலங்கியல் ஆர்வலர்கள் எச்சரிப்பதை மண்டையில் ஏற்றி என்றுதான் நாம் திருந்தப்போகிறோமோ....? ஆண்டவனுக்கே வெளிச்சம்....

டெயில் பீஸ். இன்று அண்டார்டிகாவரை தன் இனத்தைப் பெருக்கி உயிர் வாழும் திறன் பெற்றுவிட்ட காகம் ஒரு நாட்டிற்கும் தேசியப்பறவையாக இல்லாதது ஆச்சர்யமான விஷயம். (ஓரளவு கடினமான தேடலுக்குப்பிறகு இதை எழுதுகிறேன். இருந்தாலும் பொது அறிவு அதிகமுள்ள நண்பர்கள் இது தவறாக இருந்தால் தகவலளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்). இத்தனைக்கும் இந்தியர்கள் குறிப்பாக தென்னிந்தியர்கள் பித்ருக்களுக்கான உணவு படைப்பது, சில குறிப்பிட்ட நாட்களில் முதலில் காகத்திற்கு உணவளித்து பின்பு தாங்கள் உண்பது, என்று காகத்துடன் உணர்வு ரீதியாக தங்களை இணைத்துக்கொண்டவர்கள்.


No comments:

Post a Comment

வருகைதந்து வாசித்தமைக்கு நன்றி. தங்களின் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.