Sunday, March 21, 2010

கணப்பொழுதில் கடந்து மனப்பொழுதில் நிற்கும் விளம்பரங்கள்


ஒரு பொருளைப் பற்றிய விளம்பரம் தயாரிப்பதென்பது அந்த பொருளைத் தயாரிப்பதை விட பல மடங்கு கடினமானது. அதே நேரம் என்னதான் யுகயுகமாக வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்கும் நிறுவனங்கள், நம்மைப்பற்றித்தான் உலகிற்கு நன்றாக தெரியுமே எதற்கு புதிதுபுதிதாய் விளம்பரம்...? என்று விளம்பரத்தை நிறுத்திவிட்டால் இருட்டில் நின்று கறுப்புச்சட்டை விற்ற கதையாகிவிடும்.  இன்றைய அவசர உலகில் பாடலில்லா சினிமா, சண்டையில்லா சினிமா, ஒரே நாளில் படமாக்கப்பட்ட சினிமா என சினிமா உலகம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறது. மூன்று மணி நேரம் ரசிகனை அவன் அமர்ந்திருக்கும் இருக்கையிலேயே கட்டிப்போட எவ்வளவோ போராட வேண்டியிருக்கிறது. சில மால்களில் உள்ள தியேட்டர்களில் உட்கார்ந்த இடத்திலேயே இடைவேளை நொறுக்குத்தீனிகளை சப்ளை செய்யும் வசதிகள் வரை இருக்கிறது. அப்படியும் பாடல் காட்சிகளில் வெளியேறுபவர்களை இன்றும் நாம் தியேட்டர்களில் காணலாம். அது எத்தனை நல்ல பாடலாக இருந்தாலும் (காட்சிகள் உட்பட) நம்மாளுக்கு வெளியே போய் ஒரு டீயும் தம்மும் போட்டுவிட்டு வந்தால்தான் ஆகக்கூடி சுகமாக இருக்கும். இப்படி இருக்கும்போது சினிமா தியேட்டரில் விளம்பரம் போட்டால் எவன் பார்ப்பான்...?

இல்லத்தரசிகளுக்கு வீட்டில் கணவர் கைக்குள் இருக்கிறாரோ இல்லையோ பெரும்பாலான நேரங்களில் ரிமோட் கைக்குள் இருந்தாக வேண்டும். சில்மிஷ கணவர் வெளியே அப்படி இப்படி நடந்துகொள்கிறார் (சாப்பாட்டு விஷயத்துலதாங்க... ஏன் அதுக்குள்ள உங்களுக்கு மூளைக்குள்ள குறுகுறுங்குது...) என்று லேட்டாக தெரிந்தால்கூட அவரை எப்படியாவது வழிக்கு கொண்டுவந்துவிடலாம்...ஆனால் வெகு சாமர்த்தியமாக ஒரே நேரத்தில் நான்கைந்து சேனல்களில் பார்க்கும் சீரியல்கள் மிஸ்ஸாகிவிட்டால் கன்டினியூட்டி போய்விடுமே... இத்தனை பிரச்சனைகளுக்கும் சவால்களுக்கும் இடையே தொடரும் என்கிற அந்த ஒரு வார்த்தை வந்தவுடன் ரிமோட்டில் தாவுபவர்களை ஒரு ஷண நேரம் நிறுத்திப்பிடிக்க படாதபாடு பட்டு மிகுந்த ரசனையுள்ள வித்தியாசமான விளம்பரங்களை தயாரிக்க வேண்டியுள்ளது. மூன்று மணி நேர சினிமாவைவிட முப்பது செகண்ட் விளம்பரம் தயாரிப்பது மிகமிக கடினம் என்பது பெரிய பெரிய டைரக்டர்களே ஒத்துக்கொண்ட விஷயம். வோடபோனின் ஜூஜூ விளம்பரம், விளம்பர உலகின் சமீபத்திய ஹாட். ஐபிஎல் சீசனில் மீண்டும் புதுப்புது விளம்பரங்களுடன் வந்து இப்போது சக்கை போடு போடுகிறார்கள்.

ஆனால் இந்தக் கட்டுரை தொலைக்காட்சியை தவிர்த்து நாளிதழ்களிலும் மக்கள் அன்றாடம் நடக்கும் இடங்களிலும் பிரசுரிக்கப்பட்ட, அமைக்கப்பட்ட சில பிரபல விளம்பரங்களைப் பற்றியது. இதுவும்கூட கஷ்டமான ஒரு விஷயம்தான். எத்தனையோ பேர் வேலை வேலையென்று பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்க அத்தனை பரபரப்புக்கிடையிலும் வெகுசிலரை ஒரு நிமிடமாவது நிற்கவைத்து “அட... என்று சொக்கவைக்கும் கலை தெரிந்தால்தான் இது சாத்தியம்... அப்படிப்பட்ட விளம்பரங்களில் சாம்பிளுக்கு சில...




ஜெர்மனியின் பிரபல கண்ணாடி தயாரிப்பு நிறுவனம் ஒன்று தங்கள் கண்ணாடிகள் மிகவும் பலம் வாய்ந்தவை, எளிதில் உடைக்கமுடியாதவை மற்றும் பாதுகாப்பானவை என்பதை உணர்த்த மக்கள் அதிகம் பேர் நடக்கும் வீதியில் வித்தியாசமான விளம்பரமொன்றை செய்தது. கட்டுக்கட்டாக டாலர்களை கண்ணாடிகளுக்கு இடையே அடுக்கிவைத்து பொதுமக்கள் பார்வைக்கு வைத்துவிட்டது. தைரியமாக இரவில் காவலுக்கு ஆள் வைக்காமல் விட்டதால் திருடர்கள் அதிலுள்ள டாலர்களை திருட முயன்றனர். எவ்வளவோ முயன்று அவர்கள் பரிதாபமாக தோற்றுபோனதை ரகசிய கேமராவில் பதிவுசெய்து அதை டிவியில் வெளியிட்டு அந்தக் கண்ணாடி நிறுவனம் ஏகப்பட்ட பப்ளிசிட்டி செய்தது. இன்று ஜெர்மனுக்கு வெளியிலும் கண்ணாடி விற்பனையில் அந்தக் கம்பெனிதான் நம்பர் ஒன். கம்பெனியோட பேரு கீழயே இருக்கு நல்லா பாருங்க...(வீடியோவில் இருந்த திருடர்களை போலீஸ் அள்ளிச்சென்றது தனிக்கதை)

ஜெர்மனியின் ஆல்ஸ்டர் பிராண்ட் கைக்கடிகாரங்கள் புகழ்பெற்றவை. ஐ.டபிள்யு.சி என்கிற கம்பெனியின் தயாரிப்பான இக்கைக்கடிகாரங்கள் பெரும்பாலும் உயர்தட்டு மக்களையே குறிவைத்து தயாரிக்கப்பட்டு வந்தன. சாமான்யர்களும் பொதுஜனங்களும் அணியாதவரை தம்முடைய தயாரிப்பு மேலும் பிரபலமடையாது என்பதை உணர்ந்த அந்தக் கம்பெனி, ஜெர்மனியின் புகழ் பெற்ற விளம்பரத் தயாரிப்பாளரான ஜங் வான்மேட்டை வைத்து செய்ததுதான் மேலே நீங்கள் பார்க்கும் விளம்பரம். பொதுவாக கைக்கடிகாரம் வாங்குமுன் கையில் அணிந்து பார்த்து வாங்குகிற சாமான்யனின் மனோபாவத்தை வைத்து பேருந்தில் நின்றுகொண்டு பயணிக்கும்போது பிடித்துக்கொள்ள பயன்படும் கைப்பிடியை (Holding Strap) வாட்ச் போல டிசைன் செய்தது அந்நாட்டில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் கைக்கடிகார வியாபாரமும் எதிர்பார்த்ததை விட அதிகரித்தது.

அதனருகில் நீங்கள் காணும் இன்னொரு விளம்பரம் நியுயார்க்கில் உள்ள உடற்பயிற்சி நிறுவனம் பாதாள ரயில்களில் செய்த குறும்புக்கார விளம்பரம். பயணிப்பவர் அந்த கம்பியை பிடிக்கும்போது இதே போல உண்மையான எடையை நீங்கள் ஒரே கையால் தூக்கவேண்டுமெனில் எங்கள் உடற்பயிற்சி நிறுவனத்தில் சேருங்கள் உடல் ஆரோக்கியத்தை பெருக்குங்கள் என்று ஒலி விளம்பரம் வரும்வகையில் இது அமைக்கப்பட்டிருக்கிறது.



அமெரிக்காவில் ஃபோல்ஜர்ஸ் பிராண்ட் காபி மிகப் பிரபலம். நியுயார்க்கின் முக்கிய நகர வீதி ஒன்றில் பைப் மூலம் செலுத்தப்படும் நீராவி, பாதாள சாக்கடை மூடி வழியாக கசிந்து செல்வதை ரசனையுடன் சொல்லியிருக்கும் விளம்பரம்தான் மேலே நீங்கள் பார்ப்பது... (நீராவியை வைத்து உணவு தயாரித்து வியாபாரம் செய்யும் பெரும்பாலான உணவகங்களுக்கு இப்படித்தான் அங்கே பூமிக்கடியில் நீராவி சப்ளை நடக்கிறது)

நெதர்லாந்து நாட்டில் ஆம்ஸ்டர்டாமில் வைக்கப்பட்டுள்ள ஹெய்ன்கென் எனப்படும் குளிர்பானத்திற்கான விளம்பரத்தின் பின்னால் சற்று உற்றுப் பாருங்கள்... ஒரு கை அப்படியே அந்த பாட்டிலை அள்ளியெடுக்க முயல்வதைப்போல டிசைன் செய்திருப்பது விளம்பரம் தயாரித்தவரின் கற்பனா சக்தியை காட்டுகிறது.



அர்ஜென்டினாவில் உள்ள யுனிசென்டர் ஷாப்பிங் வளாகத்தில் கடந்த பிப்ரவரியில் வந்து போன காதலர் தினத்தன்று காதலர்களை கவர்வதற்காக செய்யப்பட்ட விளம்பரம் இது. காதல் அம்புகள் பாய்ந்துள்ள இருக்கைகளில் அமர்ந்து ஒண்ணரையணா காபியை ஒரு மணி நேரமாக குடிப்பது காதலர்களுக்கு மட்டுமே சாத்தியம்.. காபி மற்றும் குளிர்பானங்கள் விற்று அந்த ஒரு நாளில் மட்டும் இந்த கடையில் பல லட்சத்திற்கு வியாபாரம் நடந்ததாக மறுநாள் தினசரிகளில் செய்தி வந்தது.


மும்பையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் உள்ள தானியங்கிக் கதவில் உள்ள ஸ்டிக்கர்கள்தான் மேலே நீங்கள் பார்ப்பது. ஆளுயர ஸ்டிக்கர்களை இருபுறமும் ஒட்டி வாடிக்கையாளர் உள்ளே வரும்போது திறக்கும் வண்ணம் செய்திருந்தனர். உள்ளே வந்தவர் கண்ணில் படும் முதல் வாசகம் உங்கள் உடலில் துர்நாற்றம் வந்தால் மற்றவர்கள் இப்படித்தான் தூர ஓடுவார்கள்.



அமெரிக்க இத்தாலிய தயாரிப்பான இட்டாலிகா பர்கர்கள் உலகப்புகழ்பெற்றவை. சென்னையிலுள்ள புட் ஜாயின்ட் என்கிற அங்காடியிலுள்ள இட்டாலிகா பர்கர் விளம்பரம் முன்பாக வேண்டுமென்றே “வழுக்கும் தரை கவனமாக நடக்கவும் என்கிற எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. இதன் மறைமுக அர்த்தம் நீங்கள் வெகுநேரம் இதையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தால் நீங்கள் விடும் ஜொள்ளில் மற்றவர் வழுக்கி விழ வாய்ப்புண்டு. ஆகவே விரைந்து சென்று வாங்கிச்சாப்பிட்டுவிடுங்கள்என்பதுதான்.

சுவிட்சர்லாந்தின் பிரபல கார் நிறுவனமான மினி கூப்பர் செய்திருந்த விளம்பரம்தான் இது. சாலையை கடக்க மனிதர்கள் பயன்படுத்தும் சுரங்கப்பாதையின் இருபக்கமும் வெளிச்சுவர்களில் செய்யப்பட்ட விளம்பரம் மினி கூப்பர் கார் தாராளமான இட வசதிகொண்டது என்பதை உணர்த்தும் வண்ணம் இருப்பதாக தினசரிகள் விளம்பர நிறுவனத்தை பாராட்டி செய்தி வெளியிட்டன.


ஜப்பானின் டோக்கியோவில் உள்ள ஒரு ஆயத்த ஆடை விற்கும் நிறுவனம் தனது கடையில் ஆளுயர கண்ணாடியில் மகளிருக்கான ஆடைகள் பொருத்தி வைத்து செய்த வித்தியாசமான விளம்பரமிது. அது தனக்கு எப்படி இருக்கும் என அணிந்து பார்க்காமலேயே கண்ணாடி முன் நின்று பார்த்து வியக்கிறார் ஒரு பார்வையாளர்.


ஜெர்மனியின் பெர்லினில் உள்ள பிரபல நிறுவனம் (நம்மூர் நோக்ரி போல) தகுந்த வேலையில் சேர்வதை சரியாக விளக்கும் விதமாக செய்திருந்த விளம்பரமிது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் தவறான வேலை தானியங்கிக் கருவிகளுக்குள் உங்களையும் உங்கள் வாழ்க்கையையும் முடக்கிவிடும் என்று நறுக்கென்று சொல்கிறது இந்த விளம்பரம்.


துபாயில் வாசனை திரவியங்கள் விற்கும் சந்தீப் பெர்ணான்டஸ் என்பவர் வாசனை திரவியம் அதிகளவில் விற்க மிகவும் குறும்புத்தனமாக செய்த விளம்பரமிது. முதலில் குறைவாக தயாரிக்கப்பட்ட அவரது சொந்த தயாரிப்பான இந்த மௌஸ் பேடுகள் விற்றுத் தீர்ந்த பின்பு, ஆர்டர் கொடுத்து அதிக விலை என்றால் கூட வாங்கிச்செல்லப்பட்டதாக ஒரு நாளிதழுக்கு அவர் பெருமையுடன்...?!?! பேட்டியளித்திருந்தார்.


கண்ணாடியை துல்லியமாக துடைக்கும் திரவம் பற்றிய விளம்பரம் தென் ஆப்பிரிக்க விமான நிலையத்தைவிட்டு வெளியேறும் பயணிகளின் கண்களில்படும்படி வைக்கப்பட்டுள்ளது. கண்ணாடி இருப்பது தெரியாமல் மோதிக்கொண்டு, பிறகு அச்சோ என்று நினைக்கிற அந்தப் ஸ்டிக்கர் பெண்ணின் முகபாவத்திற்காகவே இதை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலுள்ளது.


மிகமிக சிக்கனமான செலவில் ஆனால் அதிகளவில் மக்களிடம் சென்றடைந்த விளம்பரம் என்று ஹாங்காங் பத்திரிக்கைகளால் பிரபலப்படுத்தப்பட்ட விளம்பரம்தான் படத்தில் நீங்கள் பார்ப்பது. யோகா கற்றால் உங்கள் உடல் நீங்கள் சொன்னபடியெல்லாம் வளையும் என்று கூறும் விதமாக நீட்டி மடிக்கப்படும் ஸ்ட்ராவில், ஹாங்காங்கில் பிரபலமான ஒரு யோகா கற்றுத்தரும் பள்ளியால் செய்யப்பட்ட விளம்பரம் நல்ல பலனைத் தந்தது. யோகா வகுப்பு மற்றும் கட்டணம் என ஏகப்பட்ட விசாரணைகள் அந்த பள்ளியை மொய்த்த நிறைய பேர் ஆர்வத்துடன் யோகா பயில முன்வந்ததுதான் இந்த விளம்பரத்தின் மாபெரும் வெற்றி.


அதைவிட சிறந்த மற்றுமொரு சாட் விளம்பரம், மன்ச் அல்லது பெர்க் போல ஏதோ ஒரு ஃபாரின் சாக்லேட்... பஸ்ஸின் கதவு திறந்து பயணி ஏறும்போது அந்த சாக்லேட் பக்கவாட்டில் வரையப்பட்டிருப்பவரின் வாய்க்குள் போகிறது... ஒரு குறிப்பிட்ட பேருந்திற்காக நிலையத்தில் காத்திருப்பவளோ/பவனோ அருகிலிருக்கும் கடைக்கு சென்று அதை உடனே வாங்கி சாப்பிடவேண்டும் என்று யோசிக்க இதைவிட வேறென்ன வேண்டும்...?  நேஷனல் ஜியாக்ரபிக் சேனலை பிரபலப்படுத்த அமெரிக்கா முழுவதும் சுற்றிய பஸ் அதனருகில்.... சுறாவின் வாய் திறந்தால் பயணி பேருந்தில் ஏறுகிறார் என்கிற திகில் காட்சியை தரையில் அடிக்கடி காண்பிக்கும் கற்பனைத்திறனை என்னவென்று சொல்ல...

லண்டனின் மாநகர பேருந்துகள் சிலவற்றில் விளம்பரக்காரர்கள் காட்டியுள்ள கலா ரசனையைப் பாருங்கள்...வெஸ்டிபியுல் பஸ் எனப்படும் இரண்டு பேருந்துகளை இணைத்து, (சென்னையில் கூட இதுபோல நிறைய பேருந்துகள் இருக்கிறது... இது போன்ற கிரியேட்டிவிட்டி இல்லாமல் நகரில் ஓடிக்கொண்டிருக்கும் அவற்றால் மக்கள் பயணிக்கிறார்கள் என்பதைத் தவிர வேறென்ன பிரயோஜனம் இருக்கிறது...?) அவற்றை இணைக்க பயன்படுத்தப்பட்டிருக்கும் ரப்பர் பகுதியில் பல் துலக்கும் பிரஷின் வளையும் பாகம் வரும்படி செய்திருப்பது பிரமிக்க வைக்கிறது. அதே பேருந்தின் மறுபுறம் டயர் பகுதியினை கேமிராவின் லென்ஸ் போல கற்பனை செய்து விளம்பரப்படுத்தியிருப்பது விளம்பரத்திற்காகவென்று தனியாக சிந்திக்காதீர்கள் என்று கன்னத்தில் அறைந்து சொல்வதைப்போல இருக்கிறது...

1 comment:

வருகைதந்து வாசித்தமைக்கு நன்றி. தங்களின் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.