Sunday, January 30, 2011

சிங்கங்களிடம் ரகசியம் பேசுபவன்

வீட்டில் வளர்ப்பு மிருகங்களை வளர்ப்பது பெரிய கலை. மனிதன் மிருகங்களை பயிற்றுவித்து தன்னுடைய செல்லப் பிராணியாக, தனக்கு ஆதாயம் தரும் மிருகமாக எப்பொழுதிருந்து வளர்க்க ஆரம்பித்தான் என்பதை ஆராய ஆரம்பித்தால் அது ஒரு தனிக்கதையாக முளைக்க ஆரம்பித்துவிடும். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் பல்வேறு கொடிய மிருகங்களை பயிற்றுவிக்க ஆரம்பித்துவிட்டதாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நம் நாட்டிலும் மேலை நாடுகளிலும் பெரும்பாலும் வீட்டில் செல்லப் பிராணிகளாக வளரும் மிருகங்களில் முதலிடம் வகிப்பது நாய்கள்தாம். அடுத்த இடங்களில் பூனை, மீன், கோழி, மற்ற பறவைகள், ஆடு மாடுகள், குதிரை இன்னும் சில என வரிசையாக ஆக்கிரமிக்கின்றன.

இவற்றையெல்லாம் வளர்ப்பதில் மனிதனுக்கு இருக்கும் மறைமுக லாபங்கள், அவற்றை தனது காவலுக்கும், வருமானத்திற்கும், உணவிற்கும் அவன் பயன்படுத்திக்கொள்ளலாம். எந்த நோக்கமும் இன்றியும் சிலர் செல்லப்பிராணிகளை வளர்க்கின்றனர். மனநல ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி இவர்கள் தங்களது மன அழுத்தத்தை செல்லப் பிராணிகள் வளர்ப்பதின் மூலம் குறைக்க முயற்சிக்கின்றனர்.

தனது வசிப்பிடத்தில் தன் விருப்பத்திற்கு ஏற்ற செல்லப் பிராணிகளை வளர்ப்பது ஒரு வகையென்றால் மிருகங்களின் மீது அன்பு கொண்டு அவற்றின் வாழ்விடங்களிலேயே அவற்றை சந்தித்து மிகுந்த தைரியத்துடன் அதனருகில் சென்று விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள்கூட செய்யத் துணியாத சாகசங்களை செய்கிறவர்களும் இருக்கின்றனர். கரடிகளின் காதலன் என்கிற அடைமொழியுடன் அழைக்கப்படுகிற திமோதி ட்ரெட்வெல் விலங்கியல் ஆர்வலர்களில் மிகவும் பிரபலமானவர். 1957-ல் பிறந்த அமெரிக்கரான இவர் கிரிஸ்லி வகையினத்தை சேர்ந்த கரடிகளோடு ஆராய்ச்சி நோக்கத்தோடு மிகவும் நெருங்கி பழகியிருக்கிறார். அவற்றோடு நெருங்கி பழகி, அவற்றின் வாழ்வியல் முறை, அவை எதற்காக சந்தோஷப்படுகின்றன, எப்போது கோபம் கொள்கின்றன போன்ற குணாதிசய விஷயங்களை பற்றி இவர் எழுதியுள்ள ஆராய்ச்சி வெளியீடுகள் மிகவும் பிரபலம். பொதுவாக கிரிஸ்லி கரடிகள் ஒருவித உஷார்தனத்தோடும், சடுதியில் கோபம் கொள்கிற, முன்னெச்சரிக்கையின்றி தாக்கும் குணமும் கொண்டவை. அப்படிப்பட்ட கரடிகளோடு, அலாஸ்காவிலுள்ள கட்மாய் தேசிய வனவிலங்குப்பூங்காவில் 13 ஆண்டுகள் பழகிய திமோதியை ஒரு டாக்குமெண்டரி படப்பிடிப்பின்போது, அவர் குட்டியிலிருந்து வளர்த்து வந்த கரடி ஒன்று கடித்துக்குதறி கொன்றுவிட்டது. 2003-ல் நடந்த இந்தப்படப்பிடிப்பின்போது உடன் இருந்த அவரது தோழியும் இறந்தது பரிதாபத்திற்குரிய விஷயம்.


விலங்கியல் ஆர்வலர்களில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீபன் ராபர்ட் இர்வின் இவரைவிட இன்னும் பிரபலமானவர். சுருக்கமான பெயர் ஸ்டீவ் இர்வின் என்றாலும் முதலை மனிதன் என்று சொன்னால் உடனே ஞாபகத்திற்கு வரும் அளவிற்கு பிரபலமான இவர், ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் நகருக்கு அருகே வடக்கு குயின்ஸ்லாந்தில் தனது மனைவியோடு சேர்ந்து முதலைப்பண்ணையுடன் கூடிய ஒரு விலங்கியல் பூங்கா அமைத்துள்ளார். முதலை ஆராய்ச்சியாளர்களோடு சேர்ந்து இவர் நடத்தியுள்ள பற்பல ஆராய்ச்சி விடியோக்கள் இன்றளவும் டிஸ்கவரி சேனல்களில் மிகப் பிரபலம்.


2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தி கிரேட் பாரியர் ரீஃப் என்கிற தலைப்பில் கடலுக்கடியில் ஒரு படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது ஸ்டீவ் இர்வினை ஸ்டிங்கிரே என்கிற சுறா வகையினத்தை சேர்ந்த மீன் நெஞ்சுப்பகுதியில் தாக்கிவிட, பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த வகை மீன்கள் பொதுவாக மனிதர்களை தாக்குவதில்லை. ஆழ்கடல் படப்பிடிப்பின்போது ஸ்டீவின் இடது பக்கமாக இந்த மீன் நீந்தி வர, அதை விலக்க நினைத்து அவர் கைகளை வீசியதும் தற்காப்பு முயற்சியாக வாலை வீசிய அந்த மீனின் கொடுக்கு பகுதி ஸ்டீவ் இர்வினின் நெஞ்சுப்பகுதியில் குத்தி உடைந்துவிட்டது. கிட்டத்துட்ட தேளின் கொடுக்கினைப்போல. ஒன்றரை வயதான தனது குழந்தையை ஒரு கையில் வைத்துக்கொண்டு முதலைகளுக்கு மிக அருகில் சென்று உணவளித்தார் என்று இவர் மீது தன்னார்வ அமைப்புகள் குற்றம் சாட்டினாலும், இவரது இறப்பு விலங்கியல் ஆர்வலர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் பெரும் இழப்பு.


தெற்கு ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் சிங்கங்களோடு வாழ்ந்துகொண்டிருக்கும் கெவின் மைக்கேல் ரிச்சர்ட்ஸன்தான் இந்தப் பதிப்பின் கதாநாயகன். பிறந்தது முதலே மிருகங்களின் மீது ஈடுபாடும் அன்பும் கொண்ட கெவின் தனது சிறு வயதில் பட்டாஜி (paddajie) என்கிற பெயரில் ஒரு தவளையை வளர்த்திருக்கிறார். ஆப்பிரிக்காவில் பிறந்தாலும் இவரது பூர்விகம் இங்கிலாந்து. இவரது அம்மா தனியார் வங்கியிலும் அப்பா மருந்து விற்பனைப்பிரிவிலும் பணிபுரிபவர்களாக இருக்க, இவருக்கு மட்டும் மிருகங்களின் மீது காதல் வந்தது ஆச்சர்யம்தான். Lion Whisperer என்கிற செல்லப்பெயர் கொண்ட இவர் வீட்டில் கடைக்குட்டியாக பிறந்தவர். இவருக்கு முன்பு பிறந்த ஒரு அண்ணனும் இரட்டையர்களாக பிறந்த அக்காக்களும் படித்து நல்ல வேலையில் அமர்ந்துவிட இவர் சிங்கங்களைக் காதலித்துக்கொண்டிருக்கிறார். பள்ளிப்பருவத்தில் அந்த வயதுக்கே உரிய சேட்டைகளோடு வகுப்புகளுக்கு மட்டமடித்துக்கொண்டு ஒருவழியாக தேறி பின்பு பெற்றோரின் கட்டாயத்தால் உயிரியல் பாடத்தை தேர்ந்தெடுத்து கல்லூரியில் சேர்ந்தவர், கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் பிற உயிர்களைப் பற்றியே திரும்பத்திரும்ப நடத்துவது போரடித்துப்போய் பாலூட்டிகளைப் பற்றி நானே படித்துக்கொள்கிறேன் என்று பாதியிலேயே வெளியேறிவிட்டார்.


ஃபிஸியாலஜி படித்துவிட்டு ஃபிஸியோதெரபிஸ்ட்டாக தன் வாழ்க்கையை துவக்கியவர், அவருடைய 23வது வயதில் வீட்டுக்கு அருகே இருந்த சிங்கப்பூங்காவில் சிங்கக்குட்டிகளை பார்த்துக்கொள்ளும் பகுதி நேரப்பணியாளராக சேர்ந்தார். அந்த வேலை அவருடைய வாழ்வை புரட்டிப் போட்டது என்றால் அது மிகையல்ல. இயல்பிலேயே மிருகங்களின் காதலனான கெவின் தன் வேலையை உதறிவிட்டு முழுநேரமும் சிங்கங்களோடு செலவிட ஆரம்பித்தார். ஆரம்ப காலத்தில் அவர் வளர்த்த தாவ் மற்றும் நெப்போலியன் என்ற பெயர்கள் கொண்ட பெரிய ஆண் சிங்கங்கள் இன்றும் அவருடன் மிகுந்த தோழமையுடன் விளையாடுவதை கண்டால் ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கும். ஒவ்வொரு விஷயத்தையும் சிங்கங்களோடு பழகிப்பழகி கற்றுக்கொண்டு தனக்குத்தானே ஆசானாக, இன்று மனிதர்கள் மிருகங்களோடு பழகும்போது கடைப்பிடிக்கிற எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைப்பிடிக்காமல் சர்வ அலட்சியமாக அதே சமயத்தில் பொறுப்போடு, சிங்கங்களோடு கெவின் நடமாடுவதும் விளையாடுவதும் ஆராய்ச்சியாளர்களை உச்சபட்ட அதிர்ச்சியிலும் ஆச்சர்யத்திலும் ஆழ்த்தியுள்ளது. காட்டு ராஜா என்று அறியப்பட்ட காட்டின் ஆகப்பெரிய கொடூர வேட்டை விலங்கினைப்பற்றிய பல தப்பான கற்பிதங்களை அவர் இன்றுவரை அவற்றோடு வாழ்ந்து மௌனமாக உடைத்திருக்கிறார். இது எப்படி சாத்தியம் என்பதற்கு இதைப்பற்றிய ஒரு பேட்டியில் அவர் கூறுகையில், வேட்டை விலங்குகளைப் பற்றிய தேவையற்ற பயத்தையும், நமக்கு மற்றவர்கள் அந்த விலங்குகளைப்பற்றி கற்பித்ததையும் மனதில் வைத்துக்கொண்டு அவற்றை நெருங்குவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை. நீங்கள் உண்மையான அன்போடும் புரிதல் மனம் கொண்டவர்களாகவும் இருந்தாலே போதும். எந்த ஒரு மிருகத்தையும் நீங்கள் எளிதில் நண்பர்களாக்கி கொள்ளலாம் என்றிருக்கிறார்.


சிங்கங்களோடு மட்டுமில்லாமல் அய்னா எனப்படும் கழுதைப்புலிகளோடும், கறுஞ்சிறுத்தைகளோடும் கெவின் சர்வ சாதாரணமாக விளையாடுவார். இத்தனைக்கும் அடிப்படையில் காட்டில் வாழும் சிங்கங்களுக்கும் மற்ற வேட்டை மிருகங்களுக்கும் கழுதைப்புலிகளை கண்டாலே ஆகாது. பெரிய வேட்டை மிருகங்கள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ வேட்டையாடி உண்டு கொண்டிருக்கும்போது பெருங்கூட்டமாக வரும் அய்னாக்கள் அவற்றை விரட்டிவிட்டு அந்த உணவை கபளீகரம் செய்துவிடும். வேறு மிருகங்கள் வேட்டையாடிய உணவு கிடைக்காதபட்சத்தில் மட்டுமே அய்னாக்கள் கூட்டமாக சேர்ந்து வேட்டையாடும். ஆகவே காலம்காலமாக ஏற்பட்ட உணவுப் போராட்டத்தின் விளைவாக சொந்தமாக வேட்டையாடும் மிருகங்களுக்கு அய்னாக்களை கண்டாலே பிடிக்காது.


இந்த மிருகங்களோடு பழகுவதென்பது தினம் தினம் உயிருடன் விளையாடுவதற்கு ஒப்பானதுதான் என்றாலும் கெவினுக்கு இது மிகவும் பிடித்தாகவும் மனதிற்கு நிம்மதியான வேலையாகவும் இருப்பதாக கூறுகிறார். இவற்றுடன் பழகுகையில் ஏற்பட்ட ஒன்றிரண்டு கசப்பான சம்பவங்களையும் அவர் அனுபவங்களாகவே எடுத்துக்கொள்கிறார். ஒருமுறை குட்டி சிங்கமொன்று விளையாட்டாக இவரது கையை கடிக்க முற்பட்டு தோள்பட்டையை தனது நகங்களால் ஆழமாக கீறிவிட்டது. இன்னொருமுறை ஒரு பெரிய ஆண் சிங்கத்துடன் இவர் மிகவும் குஷியாக விளையாடிக்கொண்டிருக்கும்போது அருகிலிருந்த பெண் சிங்கமும் விளையாட்டில் பங்குகொள்ள இவர் மீது குதித்து விழ, இவரது கை எலும்பு முறிந்துவிட்டது. இதைப்பற்றி ஒரு பேட்டியில் 480 பவுண்ட் எடை கொண்ட நண்பர்களோடு விளையாடும்போது இவையெல்லாம் சகஜம்தான் என்றிருக்கிறார் இவர்.


மேலும் மற்றொரு பேட்டியில் என்னதான் தோழமையோடு பழகினாலும் அடிப்படையில் அவை வேட்டுவ மிருகங்கள்... அவை ஒன்றுசேர்ந்து உங்களைத் தாக்கும் அபாயம் இருக்கிறதே...? அப்படி ஒன்று நேர்ந்தால் அதை எப்படி சமாளிப்பீர்கள்...? என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, கெவின் சொன்ன அசாத்திய தன்னம்பிக்கை பதில் இது. அவற்றோடு இத்தனை ஆண்டு காலம் பழகியதில் என்னால் அவற்றின் எண்ண அலைகளையும் மன உணர்வுகளையும் புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் அவற்றுடன் இருக்கும் நேரத்தில் எனது உள்ளுணர்வுகள் என்னை வழி நடத்தும்படி நான் நடந்து கொள்வதால் ஏதோ அசம்பாவிதம் நடக்கபோகிறது என்பதை நான் உணர்ந்தால் மறுவினாடி நான் அவற்றிடமிருந்து பாதுகாப்பான தூரத்திற்கு விலகிவிடுவேன். சிங்கங்களோடு இவர் நடித்துள்ள பல டாகுமெண்டரி படங்கள் மிகப்பிரபலம். அதில் இவர் நடித்து வெளிவந்த White Lion: Home is a Journey என்கிற 88 நிமிட குறும்படம் சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் வெளிவந்தது. மேலும் இவரைப்பற்றி அறியவும் இவரது புகைப்படங்கள் மற்றும் முந்தைய டாக்குமெண்டரி படவிவரங்களைக் காணவும் கீழ்க்கண்ட உரலியை சொடுக்குங்கள்.

http://lionwhisperer.co.za/

1 comment:

  1. பிரகாஷ்February 5, 2011 at 4:12 PM

    நல்ல பதிவு.

    //நீங்கள் உண்மையான அன்போடும் புரிதல் மனம் கொண்டவர்களாகவும் இருந்தாலே போதும். எந்த ஒரு மிருகத்தையும் நீங்கள் எளிதில் நண்பர்களாக்கி கொள்ளலாம் என்றிருக்கிறார்.//
    சத்தியமான வரிகள்

    ReplyDelete

வருகைதந்து வாசித்தமைக்கு நன்றி. தங்களின் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.