Wednesday, September 14, 2011

அந்துமணி ஸ்டைலில் சென்ற வாரத்தைப் பற்றிய விஷயங்கள்

பார்த்தது

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுக்க ஒரு வழியாக விநாயகர் சதுர்த்தி நிறைவடைந்தது. வேலைக்கு செல்லும்போது வழியெங்கும் குறைந்தது 55 விநாயகர் சிலைகளை பார்த்தேன். சென்னை போன்ற பெருநகரங்களில் செய்யப்படும் தாரை தப்பட்டை வெடி ஆர்ப்பாட்டங்களோடு கொண்டுபோய் சிலைகளை கரைக்கும் கலாசாரம் இளைஞர்கள் மூலம் சமீபமாக இங்கும் பரவியிருக்கிறது.

போச்சம்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை ஆகிய ஊர்களில் நடக்கும் வாரச் சந்தைகளை பார்த்தபோது பிரமிப்பாக இருந்தது. அம்மா அப்பா தவிர எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், மளிகை, வீட்டு உபயோகப் பொருட்கள் என எல்லாவற்றையும் சர்வசாதாரணமாக தரையில் கிடத்தி விற்கிறார்கள். கால்நடைகளை விற்க நகராட்சிக்கு தனி கட்டணம் செலுத்தி விற்பனைக்கு நிறுத்தவேண்டும் என்றிருக்கும் விதியை காற்றில் பறக்கவிட்டு கால்நடை வியாபாரம் ஜரூராக நடந்துகொண்டிருந்தது.

ஊத்தங்கரையிலிருந்து சிங்காரப்பேட்டை செல்லும் வழியில் உள்ள பாம்பாறு அணை உள்ளூர்வாசிகளுக்கு சிறந்த பொழுதுபோக்கு இடமாக இருக்கிறது. கிருஷ்ணகிரி அணைப்பகுதியில் உள்ள அளவிற்கு இங்கு கெடுபிடியின்றி வண்டியோடு அணையின் மையப்பகுதி வரை வருபவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இரண்டாவது பெரிய அணை இது.

நான் தங்கியிருக்கும் வீட்டின் கீழ்தளத்தில் பிஸ்கட் கம்பெனி குடோன் உள்ளது. லாரிகளில் மொத்தமாக கொண்டு வரப்படும் அட்டைப்பெட்டிகளில் அடுக்கப்பட்ட பிஸ்கட்டுகள் இங்கிருந்து மீண்டும் மாவட்டம் முழுவதும் வினியோகம் செய்யப்படுகிறது. பல்வேறு பிராண்டு பிஸ்கட் பாக்கெட்டுகளை நேற்றிரவு ஒருவர் பிரித்து ஒரு பெரிய கோணிப்பையில் கொட்டிக் கொண்டிருந்தார். “என்னங்க எக்ஸ்பைரி ஆயிடுச்சுங்களா…?” என்றேன். அவர் “இல்ல சார்…டிரான்சிட்ல நசுங்கி வேஸ்ட் ஆனதுங்க…” என்றார். “இதெல்லாம் என்ன பண்ணுவீங்க” என்று கேட்டதற்கு “பக்கத்துல மாட்டு பண்ணைல ஆளுங்க வந்து கொண்டு போயிடுவாங்க… புண்ணாக்கோட கலந்து மாட்டுக்கு தந்துடுவாங்க” என்றார். பிரிட்டானியா குட்டேவில் ஆரம்பித்து அனைத்து வகை பிஸ்கெட்டுகளையும் காக்டெயிலாக புண்ணாக்கோடு சேர்த்து உண்கின்றன. உண்மையிலேயே கொடுத்து வைத்த மாடுகள்.

அலுவலக விஷயமாக சில டாக்குமென்ட்களை பிரிண்ட் எடுக்க கிருஷ்ணகிரியில் இருக்கும் எல்லா இன்டெர்நெட் சென்டர்களுக்கும் சென்றிருக்கிறேன். நான் பார்த்தவரையில் அனேகமாக ஏழெட்டு சென்டர்களில் பணிபுரியும் பெண்களுக்கு போலியோ ஊனம் இருக்கிறது. இது தவிர பல கடைகளில், ஓட்டல்களில், திரையரங்குகளில் பணிபுரியும் ஊழியர்களும் போலியோவால் பாதிக்கப்பட்டு இருப்பதை கண்டேன். இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு போலியோ பற்றிய வலுவான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தத் தவறிய அரசாங்கத்திற்கு சாட்சிகளாக இவர்கள் வலம் வருவதை காணும்போது வேதனையாக இருக்கிறது.

கேட்டது


கிரேட் ஜெமினி சர்க்கஸ் கிருஷ்ணகிரி பழைய பேருந்து நிறுத்தத்தில் கடந்த ஒரு மாதமாக நடந்து கொண்டிருக்கிறது. ஊர் மக்களை எப்பாடுபட்டாவது சர்க்கஸிற்க்கு இழுத்து விட வேண்டுமென்று ஐந்தாறு ஜீப்களில் காது கிழிய விளம்பரம் செய்துபடி ஊருக்குள் திரிந்தார்கள். யார் புகார் அளித்தார்களோ தெரியாது திடீரென ஜீப்களை காணவில்லை, ரெண்டு நாட்களாய் நிம்மதியாய் தூங்க முடிகிறது.

“ஐம்பது ரூபா மதிப்புள்ள இந்த பேனாவை கம்பெனி விளம்பரத்திற்காக அறிமுக விலையில வெறும் பத்து ரூபாய்க்கு தர்றோம் சார்…” பெருநகரத்தின் ஏதாவது ஒரு மூலையில் இப்படியொரு வசனத்தை திரும்பத்திரும்ப சொல்கிற ரேடியோவோடு பேனா, கடிகாரம், டார்ச் என்று ஏதோவொன்றை விற்கிற நபர்களை பார்த்திருப்பீர்கள்… கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும்பாலும் இந்த டெக்னிக்கை பயன்படுத்தி டெம்போ வேன்களில் ஆங்காங்கே ஆப்பிள், சாத்துக்குடி, திராட்சை ஆகிய பழவகைகளை விற்கின்றனர். அதில் சொல்லப்படும் வசனம்தான் நம்மை ஈர்க்கிறது. “ஒரு கிலோ நாப்பது ரூபாதான் சார்…. பாத்துக்கிட்டே இருந்தா பக்கத்துல இருக்கறவரு வாங்கிட்டு போயிடுவாரு…” “அரைக்கிலோ இருபது ரூபான்னு கேட்டு வாங்கிட்டு போய் ஜீஸ் போட்டு குடிச்சீங்கன்னா வயித்துக்கு குளிர்ச்சியா இருக்கும்…” “ஆப்பிள கொண்டுபோய் வீட்ல அம்மாட்ட அன்பா கொடுங்க சார்…சினிமாக்கு கூட்டிட்டு போகாத கோவமெல்லாம் சீக்கரமே போயிரும்…” இப்படியாக நீள்கிறது.

படித்தது

போச்சம்பள்ளியிலிருந்து அரசம்பட்டி போகும் வழியில் ஒரு கோழியிறைச்சி விற்கும் கடையின் பெயர் “ஏக் மார் தோ துக்டா”. இந்தியிலிருக்கும் இதன் அர்த்தம் “வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு.”

கிருஷ்ணகிரியைத் தவிர்த்து அக்கம்பக்கம் ஊர்களில் சினிமாவுக்கு ஒட்டப்படும் போஸ்டரில் நடுநாயகமாக வெள்ளைத்தாளில் “20” “30” என்று ஒட்டியிருந்தார்கள். விசாரித்தபோது அங்கிருந்தவர்கள் சொன்னது அது டிக்கெட் விலையாம்.

ராமசாமி கொட்டாய், ஏழுமலையான் கொட்டாய், வீரமலை, சிக்கசெட்டிகுட்டபட்டி, (இந்த பெயரை உள்ளூர்வாசிகள் படுவேகமாக சிக்கட்டபட்டி என்று விளிக்கிறார்கள்.) பெரியகரடியூர், இரும்புலியூர், காக்கங்கரை, M.R.G.மாதேப்பள்ளி, (மதுரைப்பக்கம் இனிஷியல் இருக்கும் ஊர்களை பார்த்திருக்கிறேன், ஆனால் மூன்று இனிஷியல் கொண்ட ஊர் எனக்குத்தெரிந்த வரை இதுதான்) இவையெல்லாம் கிருஷ்ணகிரியை சுற்றியுள்ள பயணத்தின்போது கண்ணில்படுகிற சில கிராமங்களின் பெயர்பலகைகள். நம் எல்லோருக்கும் தெரிந்த பூந்தமல்லி சென்னையில் இருக்கிறது. ஆனால் போச்சம்பள்ளியிலிருந்து கொடமாண்டப்பட்டி செல்லும் வழியில் இருக்கும் அழகிய கிராமத்தின் பெயரும் பூந்தமல்லிதான்.

2 comments:

  1. அனுபவங்களைப் பகிர்ந்தவிதம் அருமை. உண்மையில் இப்படித்தான் நம்மைச் சுற்றி நடப்பவற்றைப் பார்க்கவேண்டும் / பதியவேண்டும். நாளைக்கு நீங்கள் கண்ட இந்த நிகழ்வுகள் இல்லாமலேயே போகக்கூடும்..உலகமயமாக்கலின் விளைவாய்..

    தொடர்ந்து எழுதுங்கள்..ராம்ஜி

    ReplyDelete
  2. ரா.பா.கே.ப (ராம்ஜி பார்த்தது,கேட்டது,படித்தது)நன்று.
    அடுத்த ரா.பா.கே.ப வை படங்கள், காணொளிக் காட்சி மற்றும் ரெகார்டிங்குடன் வெளியிடவும்.
    ஒருமுறை கொச்சிக்கு சென்றிருக்கையில், ஒரு லாட்டரிக் கடையில் டேப் ரெகார்டரில் பதிவு செய்யப்பட்டு,விடாது (மலையாளத்தில்) கூவிக் கூவி வியாபாரம் செய்து கொண்டிருந்ததை ரெகார்ட் செய்து, அதைப் பின்னர் அடிக்கடிப் போட்டுக் கேட்டு வயிறு வலிக்கச் சிரித்திருக்கிறேன்.
    இந்த மாதிரி எப்போதாவது எதிர்கொள்ளும் விஷயங்கள் மிகவும் சுவாரசியமாக இருக்கும்.

    ReplyDelete

வருகைதந்து வாசித்தமைக்கு நன்றி. தங்களின் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.