Tuesday, May 12, 2009

தொலைக்காட்சி - உண்மையில் ஒரு வரப்பிரசாதமா...

நாளுக்கு நாள் புதுப்புது தொலைக்காட்சி சேனல்கள் அரசியல் கட்சிகளைவிட வேகமாக முளைத்து வருகிறது. ஆனால் தொலைக்காட்சி பார்க்கும் மக்களின் பொழுதை பயனுள்ள வகையில் கழிக்கும் வண்ணம் இன்றிருக்கும் சேனல்கள் நிகழ்ச்சியை ஒளிபரப்புவதாக தெரியவில்லை.

சமீபத்தில் உடல்நலம் சரியின்றி விடுமுறையில் இரண்டு நாட்கள் வீட்டில் இருந்தேன். மருத்துவர் ஒய்வு எடுக்க சொல்லியிருந்தார் ஆனால் என்ன செய்தும் தூக்கம் வரவில்லை. ரிமோட்டை கையில் வைத்துக்கொண்டு தமிழில் வரும் அனைத்து சேனல்களையும் ஒரு ரவுண்டு பார்த்ததில் ஒன்று புரிந்தது. தமிழன் ஒரே அரிசியை வைத்துக்கொண்டு இட்லி, தோசை, சேமியா என்று பல உணவு வகைகள் செய்வதைபோல இந்த டிவிக்கள் ஒரே திரைப்படத்தின் பல்வேறு பகுதிகளை பல சேனல்களில் ஒளிபரப்புகிறார்கள். பாடல்களுக்கு ஒன்று, காமெடிக்கு ஒன்று, சிறந்த காட்சிகளுக்கு ஒன்று என வகைவகையாக அரைத்த மாவையே எல்லோரும் அரைத்து கொண்டிருக்கிறார்கள். சங்கதிகள், அவர்கள், பேசும் பேசும் இருங்க என்றும் பாருங்க பாருங்க பார்த்துகிட்டே இருங்க என்றும் டிவி பார்ப்பவர்களை மூளைச்சலவை செய்யும் வேலையைத்தான் இந்த சேனல்கள் செய்கின்றன.

மாறாக டிஸ்கவரி, அனிமல் பிளானெட், NGC போன்ற சேனல்களை பார்க்கையில் மனித வாழ்வின் அற்புதம் காடுகளின் மகத்துவம், விலங்குகளின் உணவுச்சங்கிலி, நீர் மற்றும் காற்று மாசுக்கள், பிரபஞ்சத்தின் தோற்றம் எனப்பலப்பல ஆழ்ந்த விஞ்ஞான அறிவுடன் விளக்குகின்றனர். ஆரம்ப பள்ளியிலிருந்து ஆங்கில மீடியம் படித்த எனக்கே சில இடங்களில் அவர்கள் பேசுவதை புரிந்து கொள்வது சில சமயங்களில் சிரமமாக இருக்கிறது. இது போன்ற ஆவணப் படங்களை தேர்ந்த அறிவியலாளர்களின் உதவியோடு தமிழில் மொழி பெயர்த்து தமிழ் சேனல்கள் வெளியிட முன்வந்தால் தமிழனுக்கு செய்யும் மிகப்பெரிய தொண்டாக அமையும். தமிழ் திரைப்படத்திற்கு தமிழில் தலைப்பு வைத்தால் வரி ரத்து செய்யும் அரசாங்கம் (இதுவே பெரிய வினோதம்) தனியார் தொலைக்காட்சிகள் கொஞ்ச நேரம் சீரியல் தவிர்த்து இது போன்ற நிக்ழ்க்சிகளை ஒளிபரப்பினால் மானியம் என்று அறிவித்தால் சாமானியனுக்கும் இயற்கை பற்றிய அறிவு பிறக்கும், வீட்டு பெண்கள் அழுவது கொஞ்சமேனும் குறையும். அதை அப்படியே நமது பள்ளிகளில் கிராமத்தில் அடிப்படை வசதிகளோடு போரடிப்படிக்கும் பிள்ளைகளுக்கு பாடத்தோடு சேர்த்து புகட்டினால் அறிவியல், விஞ்ஞானம், பூகோளம், என எல்லா துறைகளிலும் தெளிவு பெற்ற ஒரு சந்ததியை வளர்த்தெடுக்கலாம்.

ஆனால் இலவச தொலைக்காட்சியும், அரசாங்கம் ஒரு ரூபாய்க்கு அரிசி எப்படி தருகிறார்கள் என்று கணக்கு பார்க்காத இலவச விரும்பிகளை மட்டுமே இன்றைய தமிழ்நாட்டை ஆளும் கட்சி உருவாக்கி வருவதை காணும்போது மனதிற்கு சங்கடமாக உள்ளது.

No comments:

Post a Comment

வருகைதந்து வாசித்தமைக்கு நன்றி. தங்களின் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.