Friday, September 16, 2011

பால்கோவா

லட்டுக்கு திருப்பதி, அல்வாவுக்கு திருநெல்வேலிபோல, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு பெயர் போனது என்றாலும் கிருஷ்ணகிரியில் நான் சாப்பிட்ட பால்கோவாவும் சுவையில் சிறப்பாகவே இருந்தது. பாலை நன்றாக அடிபிடிக்க விடாமல் கிண்டியபடி, கொதித்த பால் நீர்ச்சத்து வற்றி, ஒரு பக்குவத்திற்கு வந்ததும் சர்க்கரை சேர்த்து, மேலும் செய்யப்படும் இடத்தைப் பொறுத்து செய்பவரின் உணவு சார்ந்த கற்பனா சக்தியைப் பொறுத்து சுவைக்காகவும், வாசனைக்காகவும் சில பல விஷயங்களை சேர்த்து செய்யப்படும் சுவையான இனிப்பு பண்டமே பால்கோவா. இணையத்தில் தேடியபோது கண்டுபிடித்தவர்கள் இந்தியர்கள் என்று போட்டிருந்தாலும், மேலும் தேடியபோது நம்மவர்களா அல்லது வட இந்தியர்களா என்று சரியான தகவல் கிடைக்கவில்லை.

ஆனால் பால்கோவாவைப் போல சுவையான துணுக்கு விஷயம் கண்ணில் தென்பட்டது. ரஷ்யாவைச் சேர்ந்த, சைபீரியாவில் பிறந்த, பாரீஸில் தற்போது மாடலிங் துறையில் கலக்கிக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் பெயரும் பால்கோவாதான். முழுப்பெயர் அல்யோனா பால்கோவா (Alyona Palgova) வயது 21. பால்கோவாவைப்போல இவளை விரல்களால் ஒரு விள்ளு விள்ளி சாப்பிடமுடியாது என்றாலும் பார்க்க அழகாக இருக்கிறாள். அவள் தந்தை பெயர் ஜாங்கிரியா, டோங்கிரியா என்பது போன்ற துணை விசாரணைகளுக்குள் போகாமல் நேராக விஷயத்துக்கு வருகிறேன்.


கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் ஆவின் கியோஸ்க்குகளை பரவலாக காணலாம். அதில் சரிபாதிக்கும் மேல் ஆவினுக்கும் மற்றவை பிரான்சைஸி முறையிலும் நடத்தப்படுபவை. ஆவினுக்கு சொந்தமான கியோஸ்க்குகளில் பால், காபி, நெய் மற்றும் பால்கோவா தவிர வேறு எதுவும் கிடைக்காது. அதிலும் நீங்கள் நிறைய டீ குடிக்கும் பழக்கம் இருப்பவராக இருந்தால் ஒரு சில ஆவின் பூத்துகள் தவிர மற்ற எல்லா இடங்களிலும் உங்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும்.

ஏனெனில் பெரும்பாலான ஆவின் பாலகங்களில் பாலை நன்றாக கொதிக்க வைத்து, அடியில் குழாய் வைத்த பெரிய எவர்சில்வர் டிரம்களில் ஊற்றி வைத்து விற்பனை செய்வதால் பாலும் இன்ஸ்டன்ட் காபி பொடி போட்ட காபியும்தான் கிடைக்கும். ஆனால் பிரான்சைஸி பாலகங்களில் பால், காபி, டீ தவிர்த்து குளிர்பானங்கள், தண்ணீர் பாக்கெட், பேக்கரி வகையறா பிஸ்கட்கள், வாழைப்பழம் என சகலமும் கிடைக்கும். நெய் மற்றும் பால்கோவாவின் விலையைப் பொறுத்தவரை பிரான்சைஸி மற்றும் ஆவின் பாலகங்கள் இரண்டிலும் ஒரே விலைதான்.

கிருஷ்ணகிரியில் இருந்து சேலம் போகும் பிரதான சாலையில் உள்ள ஆவினின் மாவட்ட பால் பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் பால்கோவா, நெய் மற்றும் பால் பவுடர் மாவட்டம் முழுவதும் ஆவினால் வினியோகிக்கப்படுகிறது. ஒரு கிலோ இருநூறு ரூபாய் என்று விற்கப்படும் பால் பவுடர் பெரும்பாலும் கிருஷ்ணகிரியில் உள்ள எல்லா ஆவின் பாலகங்களிலும் கிடைக்கும். முதற்பார்வைக்கு பீளிச்சிங் பவுடர் கணக்காக சாதாரண பேக்கிங்கில் கண்ணில் பட்டாலும் மக்கள் பரவலாக வாங்கும்போது அதன்மீது நம்பிக்கை பிறக்கிறது. கவர்ச்சிகரமான மற்றும் பாதுகாப்பான டெட்ரா பேக்கிங்கில் ஏன் வருவதில்லை என்று ஆவின் பணியாளர் ஒருவரிடம் கேட்டதற்கு பெரும்பாலும் வாங்குகிறவர்கள் ஓட்டல்களுக்கும் டீக்கடைகளுக்கும் பயன்படுத்துவதால் உடனே பிரித்து பயன்படுத்திவிடுவார்கள்…. மற்றபடி வீட்டுக்கு வாங்குபவர்கள் குறைவு, அவர்களும் காற்று புகாத வகையில் பிளாஸ்டிக் ஜாரில் அடைத்துவைத்தால் ஒருமாதம் வரை கட்டி தட்டாமல் பயன்படுத்தலாம் என்றார்.

அதேபோல ஐம்பது, நூறு, இருநூறு கிராம் என்று ஆரம்பித்து கிலோ கணக்கில் பேக்கிங் செய்து விற்கப்படும் பால்கோவாவும் மக்களால் ஆவின் பாலகங்களில் அதிகம் வாங்கப்படுகிறது.

அரசால் நடத்தப்படும் ஆவினுக்கு வியாபார ரீதியாக சவால் விடும் அளவிற்கு கிருஷ்ணகிரியில் பால்கோவா தயாரிப்பில் வளர்ந்து நிற்பது ஜமுனா பால்கோவா. அதே சேலம் போகும் பிரதான சாலையில் காவேரிப்பட்டிணம் போகும் வழியில் ஊரின் ஆரம்பத்திலேயே இருக்கும் ஜமுனா பால்கோவா கம்பெனி திரு. சுந்தரேசன் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டு இன்று ஆல்போல வளர்ந்து நிற்கிறது. இங்கு பால்கோவா மற்றும் பால் சார்ந்த இனிப்பு வகைகளை செய்வதில் ஏறத்தாழ முன்னூறு பேர் ஷிப்ட் முறையில் வேலை செய்கிறார்கள். தொழிற்சாலைக்கு வெளியே இருக்கும் கடையில் உள்ளே உற்பத்தியாகும் எல்லா வகையான இனிப்பு வகைகளும் விற்பனைக்கு கிடைக்கிறது. இது தவிர காவேரிப்பட்டினத்தில் ஒரு கடையும் கிருஷ்ணகிரியில் ஒரு கடையிலும் ஜமுனாவின் இனிப்பு வகைகள் கிடைக்கிறது.

உற்பத்தியில் பெரும்பங்கு தென் மாவட்ட ஊர்களுக்கும் அண்டை மாநிலத்திற்கும் நல்ல முறையில் பேக்கிங் செய்து அனுப்பப்படுகிறது. உள்ளூர் தேவைக்கேற்ப விற்பனை, இவர்களது கடைகளில் நடைபெறுகிறது. ஆண்டுக்கு சுமார் 80 கோடி மதிப்புடைய இனிப்பு வகைகள் இங்கு தயார் செய்யப்பட்டு விற்பனையாகிறது. இது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆவினின் ஒரு ஆண்டின் மொத்த பால் பொருட்கள் விற்பனையில் 40 சதவீதம் என்கின்றனர் உள்ளூர்வாசிகள்.

எது எப்படியோ…, பால்கோவா தயாரிப்பில் முன்னூறு குடும்பங்கள் சந்தோஷமாக உள்ளூரில் வாழ்கிறார்கள் என்னும் நல்ல விஷயத்திற்காக சர்க்கரை வியாதி இருப்பவர்கள் அதை மறந்து கொஞ்சம் கூடுதலாகவே பால்கோவா சாப்பிடலாம்.

4 comments:

 1. good...nice article

  ReplyDelete
 2. ஸ்ரிவில்லிபுத்தூர் ஒரிஜினல் பால்கோவா அங்குள்ள பஸ்ஸ்டாண்ட் கூட்டுறவு அங்காடியில் கிடைக்கும்.அந்தக் கடையில் நீங்கள் சொன்னது போலவே சுமாரான பேக்கிங்கினுள் உலகப்பிரசித்தியான சுவையுடைய பால்கோவா உட்கார்ந்திருக்கும்.

  மதுரையில் அக்ரிணி அடுக்கக வளாகத்தினுள் இருக்கும் மாட்டுப்பண்ணையில் அருமையான சுவையுடைய பால்கோவா கிடைக்கும்.

  இந்த வாரம் பெங்களூரில் நந்தினியில் வாங்கிய பால்பேடாவில் கண்டு எடுத்த சிறிய கண்ணாடித் துண்டு திரும்பவும் அங்கு என்னை எதையும் வாங்க விடாது :(

  பால்கோவாவுக்கு பால்கோவாவ பார்சல் பண்ணுங்க
  :)
  பிரகாஷ்

  ReplyDelete
 3. நான் சாப்பிட்ட பால்கோவாவிலேயே கரூர் பால்கோவா தான் மிக சுவையானதாக இருக்கிறது...

  ReplyDelete
 4. நல்ல சுவையான காஃபி எனில் அடுத்தடுத்து இரண்டு காஃபி குடிக்கும் ஆள் நான். அப்படி குடிப்பது ஸ்ரீவில்லிபுத்தூர் பால் கூட்டுறவு சங்கக் கடையில் மட்டுமே. அதன் கிளை குற்றாலத்தில் சீசன் நேரத்தில் திறந்திருக்கும், மெயின் அருவி செல்லும் வழியில் இடதுகைப்பக்கம் இருக்கும். அவர்களின் சிறப்பு சுவைமிக்க பால்கோவா எனினும், எனது விருப்பம் காஃபி மட்டுமே. உண்மையிலேயே பால்கோவா எனில் ஸ்ரீவில்லிபுத்தூர் கூட்டுறவு சங்க பால்கோவா மட்டுமே...

  ReplyDelete

வருகைதந்து வாசித்தமைக்கு நன்றி. தங்களின் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.