Friday, January 7, 2011

கலாபகஸ் ஆமையும்…மந்தைவெளி வீடும்…

வாரக்கணக்கில் மாதக்கணக்கில் வலைப்பூவில் எதுவும் எழுதாமல் விட்டது இப்போது வருடக் கணக்கு என்றாகிவிட்டது. நான் என்னளவில் ஏதோ கிறுக்குவதை ரசிக்கிற சொற்ப வாசகர்கள்கூட சொன்னார்கள், அப்படியே நீண்ட இடைவெளியை விட்டுவிட்டுவிடாதீர்கள் ஏதாவது எழுதிக்கொண்டிருங்கள் என்று.  ஆனால் வலைப்பூ என்று ஒன்றை எழுத ஆரம்பித்தபோது மனதளவில் ஒரு உறுதி கொண்டிருந்தேன். சும்மா கண்டதை கிறுக்குவது, சுயபச்சாதாபம், கழிவிரக்கம், சொந்த வாழ்வில் ஏற்பட்ட அனுபவங்கள் என்று ஏடாகூடமாக ஏதாவது எழுதி சம்பந்தப்பட்டவரை சங்கடப்படுத்தக் கூடாது என்பதுதான் அது. ஆனால் காலம் போகிற போக்கினை பார்த்தால் அப்படியெல்லாம் தேவையற்ற உறுதி தேவையில்லாதது என்றே தோன்றுகிறது.

2009க்குப்பிறகு மனதிற்கு பிடித்தாற் போல ஒரு வேலை அமையவில்லை. இரண்டு ஆண்டுகளில் இரண்டு முறை வேலை மாற வேண்டிய கட்டாயம். அது போன்ற ஒரு சந்தர்ப்பத்தில் சென்னையில் ஒரு நேர்காணலை முடித்துவிட்டு கோயம்பேடு சென்றுகொண்டிருந்தபோது அவனை பேருந்தில் சந்தித்தேன். நானும் அவனும் ஒன்றாக சில வருடங்கள் தனியார் வங்கியில் பணிபுரிந்துள்ளோம். நண்பர்களைத் தவிர்த்து உடன் பணிபுரிந்தவர்களில் மாமா மச்சான் என்று கூப்பிடுகிற அளவிற்கு நெருக்கம். நான் வலைப்பூ எழுதுவது அவனுக்கு தெரியுமா தெரியாதா என்று எனக்குத் தெரியாத பட்சத்தில் பெயர் தவிர்த்துவிடுவதுதான் உத்தமம். 

தன்னுடன் குறைந்தபட்சம் ஒரு தேநீராவது குடித்துவிட்டுத்தான் போகவேண்டும் என்று அவன் வற்புறுத்த அசோக்பில்லர் அருகே இறங்கிவிட்டோம். 2005-ல் அவனுக்கு திருமணம் ஆகிவிட்டது. என் வயதுதான் என்றாலும் ஒரே பையன் என்பதால் வீட்டில் சீக்கிரம் முடித்துவிட்டார்கள்.  வேலை வீடு இது விட்டால் எதுவும் தெரியாத அப்பிராணி என்றும் சொல்லலாம் அல்லது எதையும் தெரிந்து கொள்ள ஆர்வமில்லாத சோம்பேறி என்றாலும் தகும். ஆகவே நாங்கள் அவ்வப்போது வேலைக்கிடையே வெட்டிப்பேச்சு பேசுகையில் என்னுடைய ஜனரஞ்சக சம்பாஷணைகளை ரசித்துக் கேட்பான்.  உலக அறிவு கம்மி என்பதால் அவன் பார்வைக்கு நான் ஒரு அறிவுஜீவி. எனக்கு எக்கச்சக்க G.K. என்று பெண்டாட்டியிடம் பெருமை பேசுவான். இப்படித்தான் ஒருமுறை எங்கள் யுனிட்டின் சீனியர் மேனேஜர் திடீர் விசிட் கொடுத்து எல்லோரும் இன்னிக்கு என்கூட லன்ச் சாப்பிடப்போறீங்க... வீட்டு சாப்பாடு கொண்டுவந்தவங்க எல்லாரும் அம்மாகிட்டயும் பொண்டாட்டிகிட்டயும் ஸாரி சொல்லிடுங்க என்று சொல்லி சாப்பிட கிளம்பும் நேரம் வரும்வரை எல்லோருடனும் ஜாலியாக பேசிக்கொண்டிருந்தார். பேசிக்கொண்டே பணியாளர்கள் மனநிலை அறியும் உத்திகொண்ட ஒரு கேள்விக்கு வந்தார்.

சரி எல்லாரும் அவங்கவங்க லைப் ஃகோல் என்னன்னு சொல்லுங்க....  அது என்னவேணா இருக்கலாம்...கோலே இல்லைன்னு சொல்றவங்க என்னோட கார் டேங்க் ஃபில் பண்ணனும் என்று ஒரு குண்டைப் போட, ஆளாளுக்கு வீடு வாங்க வேண்டும், பெரிய கம்பெனியில் உயர்ந்த பதவியில் இருக்கவேண்டும் என்று வாய்க்கு வந்த ஏதோ ஒன்றை அளந்து விட்டார்கள். என் முறை வந்ததும் அமைதியாக இருந்தேன். மேனேஜர் விடவில்லை. ராம் எல்லாரும் சொன்னாங்கள்ல...நீங்களும் சொல்லுங்க....நான்தான் என்னவேணா இருக்கலாம் சொல்லிட்டேனே...இட் மே பீ சில்லி....கமான் சொல்லுங்க, என்றார்.  சொல்றேன் சார் ஆனா சிரிக்கக்கூடாது என்றேன் நான். டீல் ஓகே ஆனதும் 45 வயதிற்கு மேல் எந்த வேலையும் செய்யாமல் சொந்தமாக ஒரு யாட்ச் வாங்கி (சின்னதாக சகல வசதிகளும் கொண்ட 5 பேர் வரை தங்கக்கூடிய ஒரு கப்பல்) நடுக்கடலில் பொழுதுபோக்கவேண்டும், அதற்குள் தேவையான அளவிற்கு சம்பாதித்துவிடவேண்டும் இதுதான் என்னுடைய ஃகோல் என்றேன் நான். எல்லோரும் மூன்றாம் பிறை ஸ்ரீதேவி, கிளைமாக்ஸ் கமலை பார்ப்பது போல என்னை பார்த்தார்கள்.  ஒரு நிமிடம் சுதாரித்து என் மேனேஜர் கைதட்ட எல்லோரும் கைதட்டினார்கள். இருந்தாலும் அவர் விடவில்லை. ராம்... இதான் நிஜமா உங்க கோலா...இல்ல கதையா....? ஒருவேளை இது பலிக்காம போனா என்ன ஆகும்...? என்றார்.  நத்திங் சார்... இவங்கள்லாம் சொன்ன மாதிரி அட்லீஸ்ட் சொந்த வீடு கார் அப்பிடிங்கற ஸ்டேஜ்லயாவது இருப்பேன் தட்ஸ் ஆல்... என்றேன்.  மீண்டும் ஒருமுறை எல்லாரையும் கைதட்டி என்னை பாராட்ட சொல்லிவிட்டு எங்களுடன் லன்ச் சாப்பிட்டுவிட்டு விமானமேறி மும்பை போய்விட்டார்.

இந்த மொக்கை விஷயத்தை என் நண்பன் தன் வீட்டு நாய்க்குட்டி மற்றும் ராப்பிச்சை தவிர வீதி முழுக்க எல்லாரிடமும் சொல்லிவிட, அட...அட...அட.... என்ன ஒரு ஃகோல் என்கிற ரீதியில் அவனுடைய சித்தப்பா, பெரியப்பா, ஏரியா நண்பர்கள், பார் சகோதரர்கள் (நன்றாக குடிப்பான்...ஓசியில்) என்று கண்ட கண்ட நபர்களிடம் இருந்து எனக்கு போன்கால் வந்து கோண்டே இருந்தது. (பசங்க படத்தில் கதாநாயகி பிச்சை எடுக்கும் பையனுக்கு உதவி செய்வதை நாயகன் யாருக்கோ சொல்லிவிட சகட்டுமேனிக்கு போன் வரும்... அந்த காட்சியை பார்க்கும்போது நினைத்தேன்.., நம்ம வாழ்க்கை சம்பவத்தை வேற மாதிரி காட்டியிருக்காங்க என்று) அந்தளவிற்கு பாசக்காரப் பயல்.... கூடவே ஒரு சமூகப் பெருமை, பாத்தியா இது மாதிரி புத்திசாலிங்ககூடல்லாம் (அதான் அவன் அளவுக்குன்னு சொல்லிட்டேன்ல.....) நான் வேலை பாக்குறேன் என்று.

அதற்குப்பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து என்னைப் பார்த்ததும் நான் ஏதோ கலாநிதி மாறன் போல ஏரோப்பிளேன் கம்பேனியை விலைக்கு வாங்கி பெரியாளாகி இருப்பேன் என்கிற எதிர்பார்ப்பில் பேச ஆரம்பித்தான். நான் இன்னமும் கல்யாணம் ஆகாமல் வேலை தேடுவதை கேட்டதும், என்ன மச்சான் நீ... உன்ன மாதிரி ஆளெல்லாம் லைப்ல செட்டில் ஆகி இந்நேரத்துக்கு எங்கியோ இருந்திருக்க வேண்டியது... வீணா அலஞ்சு கம்பெனி கம்பெனியா மாறாத மச்சி... என்று சிங்கிள் டீ குடிக்கும் இடைவேளையில் இலவச அட்வைஸ்களை அள்ளி விட்டான். என்னப்பாரு என்னோட லைப் கோலையே முடிச்சுட்டேன்.... என்றான். என்னடா அது என்றால், மந்தைவெளியில் 850 சதுரஅடியில் வங்கியில் லோன் போட்டு ஒரு சொந்த வீடு வாங்கியதை ரொம்பப் பெருமையோடு சொன்னான். (சம்பவத்தன்று இவன் சொன்ன ஃகோல் ரஜினியை ஒரே ஒரு முறை நேரில் தொட்டுப் பார்க்க வேண்டுமென்பது)


ஏன்டா.... 300-350 வருஷம் இந்த உலகத்துல வாழற கலாபகஸ் ஆமைங்களே அதுங்களுக்குன்னு சொந்தமா ஒரு வீடு கட்டிக்கறதில்ல....சிட்டிய தாண்டி 60 கிலோமீட்டர் எங்கயுமே போகாத நீ 80 வருஷம் இருக்கறதுக்கு ஒரு வீடு வாங்கனத பெருமையா சொல்றியாடா மாப்ள.. என்றதும், பட்டென்று கேட்டான்... மச்சான்.... ஆமை 300 வருசம் வரைக்கும் கூட வாழுமாடா...நிஜமாவாடா....? இத்தனை வருஷத்தில் பொதுஅறிவை அரைசென்டிமீட்டர் கூட அவன் உயர்த்திக்கொள்ளவில்லை என்பதை ஒரு வார்த்தையில் அறிவித்துவிட்டான்.  இருந்தாலும் அவன் வீடு வாங்கியதை பற்றி பெயரளவிற்காவது அவனை நான் பாராட்டவில்லையே என்கிற குற்றஉணர்வு இருந்தாலும், அவன் அதைப் பற்றியெல்லாம் கண்டு கொள்வதாகவே இல்லை. சீக்கிரம் கல்யாணம் செய்வது பற்றியும், கிடைத்த வேலையில் சேர்ந்துவிடு என்பது போலவும் இலவச அட்வைஸ்களை அள்ளி விடுவதில் குறியாக இருந்தான். கடந்த மூன்று மாதத்தில் எந்த எந்த ஊரெல்லாமோ சுற்றி கடைசியில் அசோக் பில்லரில் பில்லரோடு பில்லராக அவனோடு நின்றிருப்பதை எண்ணி ஒருவழியாக நண்பேன்டா எஃப்பெக்ட்டில் பலமாக கை குலுக்கி விட்டு மச்சான் பஸ்ஸ புடிக்க லேட் ஆகுது..பாக்கலாம்.....என்று சொல்லி வீடு வந்து சேர்ந்தேன்.

1 comment:

 1. பிரகாஷ்February 5, 2011 at 3:57 PM

  லட்சியம் இல்லாமலேயேதான் நம்மில் பெரும்பாலானவர்கள் வாழ்க்கையைக் கழிக்கிறோம்.
  ....
  அதிகாலையில் எழுபவனும்,இளமையில் திருமணம் செய்து கொள்பவனும் வருத்தமே படுவதில்லை என்கிற பழமொழி ஒன்றுண்டு.
  அதிகாலையில் எழுவது நம் கையில் இருக்கிறது.
  திருமணம் நம் கையில் மட்டுமல்ல- கடவுளிடம் இருந்தும் பச்சை விளக்கு எரிய வேண்டும்.
  .....
  கோல் (லட்சியம்) அடைவதெல்லாம் நம் கையில்தான். உங்கள் லட்சியத்தை அடைய வாழ்த்துக்கள்.
  அதுசரி...
  வித்தியாசமான Goal உடைய நீங்கள் Goal-ஐ ஃகோல் என்று ஏன் எழுதுகிறீர்கள்? அதுவும் வித்தியாசமாக இருக்கிறதே?!

  ReplyDelete

வருகைதந்து வாசித்தமைக்கு நன்றி. தங்களின் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.