Saturday, January 29, 2011

கண்ணாடி ஓவியங்கள்

சென்ற மாதத்தின் இறுதியில் புதிய வேலை தேடுகின்ற நாட்களுக்கு மத்தியில் ஒருசில நாட்கள் ஓய்வு கிடைத்தது. குட்டி போட்ட பூனை போல வீட்டை சுற்றி சுற்றி வந்ததில் நான் வரைந்த பழைய கண்ணாடி ஓவியம் ஒன்று கண்ணில் பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இருந்தபோது பணியிடத்தில் கிடைத்த நண்பர்கள் வட்டம் மூலமாக நான் வரைந்த ஒருசில கண்ணாடி ஓவியங்களை விற்று கணிசமாக காசு பார்த்திருக்கிறேன். இதையே முழுநேர தொழிலாக எடுத்துக்கொண்டால் என்ன என்கிற அளவிற்கு அதில் நல்ல காசு வந்தாலும் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. மிகப் பிரமாதமாக வரைபவன் இல்லையென்றாலும் ஏதோ சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வரைபவனாக இருந்தேன்.

இதெல்லாம் நடந்தது நான்கைந்து வருடங்களுக்கு முன்னால். இப்போதும் பழைய பாங்கில் வரைய வருகிறதா என சோதித்துப் பார்ப்போம் என்றெண்ணி பரணில் தூசு மண்டிக்கிடந்த கண்ணாடி ஓவியம் சம்பந்தப்பட்ட பெயிண்ட், பிரஷ் போன்ற சமாசாரங்களை கீழிறக்கினேன். போஸ்ட்மார்ட்டம் பண்ணாமல் புதைக்க வேண்டிய நிலையில் அவை இருந்ததால் புதிய செட் வாங்கலாம் என சில கடைகளில் விசாரித்ததில் யாரும் வாங்காததால் அவைகளை விற்பதை நிறுத்திவிட்டதாக சொன்னார்கள். கிடைத்த ஒரே கடையிலும் நான்கு வண்ணங்களை மட்டுமே வைத்திருந்தது படைப்பாளியின் கற்பனையை சுருக்குவது போலிருந்தது. சென்னையில் நான் விரும்பும் வண்ணங்கள் அனைத்தும் கிடைக்கும் என்று கடைக்காரர் சொன்னதால் சென்னை சென்று அத்தனை வண்ணங்களையும் வாங்கி வந்து முயற்சியை துவக்கினேன்.

அவசரப்பட்டு வாங்கிவிட்டோமோ என்று நினைக்கத் தோன்றுகிற அளவிற்கு ஒன்றுமே சரிவர வரையமுடியவில்லை. உடம்பு சொல்பேச்சு கேட்காமல் குனிந்தால் வலி நிமிர்ந்தால் வலி என்று படுத்தி எடுத்தது. ஒருவழியாக வரைந்து முடித்ததை பதிவேற்ற நேரமின்மையால் ஒரு மாதம் கழித்து படங்களாக இணைத்திருக்கிறேன்.

ஏற்கனவே மின்னஞ்சலில் இணைத்து ஒருசில நண்பர்களுக்கு அனுப்பியபோது எப்படி வரைந்தீர்கள் என்று கேட்டிருந்தனர். கண்ணாடியின் மேற்பரப்பை சுத்தமாக வைத்துக்கொண்டு அடியில் வரைவதற்கு தேர்வு செய்த டிசைனை மீண்டும் எடுத்தால் வரும் வகையில் மூலையில் மட்டும் ஒட்டிவிடவேண்டும். கண்ணாடியின் மேல் வரைவதற்கென்றே தனியாக ஒரு பென்சில் விற்கிறது. அதைவைத்து முதலில் அடிக்காகிதத்தில் உள்ளதை கோடுகளாக கண்ணாடியின் மேற்பரப்பில் வரைந்துகொள்ளவேண்டும். பின்பு காதிதத்தை எடுத்துவிட்டு பென்சில் கோடுகளின் மீது கிளாஸ் லைனர் மூலம் அவுட்லைனை வரைந்துகொள்ளவேண்டும். 2-3 மணி நேரத்தில் இது காய்ந்தவுடன் விரும்பிய வண்ணங்களை பயன்படுத்தலாம். வண்ணங்கள் முழுமையாக காய 12 மணிநேரமாகும். வரைந்து முடித்தபின் பாக்கெட்டின் கனத்திற்கேற்ப ப்ரேம் செய்து கொள்ளலாம். வண்ணங்களில் தண்ணீர் மூலாதாரம், எண்ணெய் மூலாதாரம் என இரு வகை இருக்கிறது. இரண்டாவது வகைக்கு வாழ்நாள் அதிகம். ஆயில் பேஸ்டு எனப்படும் இந்தவகை பெயிண்டில் வரைந்ததை தேவைப்படும்போது சுத்தமான துணியை வெறும் தண்ணீரில் முக்கியெடுத்து துடைக்கலாம். மற்றதில் இது சாத்தியமில்லை. நன்கு வரைந்து பழகிவிட்டவர்கள் பிற்பாடு பென்சிலில் கோடுபோட்டு பின்னர் அவுட்லைனர் பயன்படுத்தவேண்டும் என்கிற விதியை தாண்டிவிடுவர், என்னைப்போல.

இதற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் சென்னையில் என்.எஸ்.சி. போஸ் சாலையில் பூக்கடை காவல் நிலையம் அருகிலுள்ள கிரி எழுதுபொருட்கள் விற்பனை நிலையத்தில் விற்கப்படுகிறது. மற்ற ஊரில் விசாரித்து வாங்கிக் கொள்ளலாம்.

புதிதாக வரைய முயற்சிப்பவர்களுக்கு சில டிப்ஸ். எடுத்தவுடன் மிகவும் கடினமான டிஸைன்களை முயற்சி செய்யவேண்டாம். பூக்கள், பழக்கூடை என்று சிம்பிளாக முயற்சிக்கவும். கண்ணாடியை உங்கள் அளவிற்கேற்ப படக்கடையிலேயே அறுத்து வாங்கிக்கொள்ளலாம். இன்னும் சிக்கனமாக முயற்சிக்க வேண்டுமானால் வீட்டுக்காரருக்கு பயந்து சுவற்றில் ஆணியடித்து மாட்டாமல் வீட்டிலிருக்கும் ஏதாவது பழைய படத்திலிருக்கும் கண்ணாடியை கழற்றி பயன்படுத்தலாம். கண்ணாடியின் ஓரங்களை கடையில் தந்து தேய்த்து வாங்கியபின் பயன்படுத்துவது பழகுனர்களின் கைகளை பதம் பார்ப்பதை தடுக்கும்.

1 comment:

  1. பிரகாஷ்February 5, 2011 at 4:04 PM

    பயனுள்ள பதிவு.
    க்ரியேட்டிவிட்டியை ஊக்குவிக்கும் இது போன்ற வேலைகளை அடுத்த தலைமுறையினர் செய்ய முயற்சிப்பார்களா? என்பது பெரும் கேள்விக்குறி.
    எத்தனை சிறிய வேலைப்பாடுள்ள பொருளாயினும், நம் கையால் செய்ததை வீட்டு ஷோகேசில் வைத்து அழகு பார்ப்பதற்கு இணையான மகிழ்ச்சி ஏதுமில்லை.

    ReplyDelete

வருகைதந்து வாசித்தமைக்கு நன்றி. தங்களின் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.